Monday, June 28, 2010

பாடம் 070: ஆத்மா அழியாதது (பிரம்ம சூத்திரம் 2.3.16)

பிரளயத்தின் பொழுது அனைத்தும் அழியும் விதத்தை விவரித்தபின் அழிவு என்பது பிரபஞ்சத்திற்கு மட்டும்தான், ஆத்மாவுக்கல்ல என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது.

மரணம் ஆத்மாவுக்கல்ல

அனைத்து உயிரினங்களும் பிரளயத்தின்பொழுது அழியும் என்பதன் பொருள் அனைத்து அசையும் மற்றும் அசையா ஜடப்பொருள்களும் அழியும் என்பதே. உயிரினம் என்ற சொல் இந்த இடத்தில் உடல் மற்றும் மனதை மட்டும்தான் குறிக்கும். எனவே மரணம் என்பது வெறும் உடல்களுக்கு மட்டுமேயன்றி அழிவு ஆத்மாவுக்கல்ல. நான் என்ற சொல்லின் உண்மை பொருள் ஆத்மா. எனவே என் உடல் பிரளயத்தில் அழிந்தாலும் நான் அழியமாட்டேன் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் நாம் அழிவைக்கண்டு அஞ்சவேண்டிய அவசியமில்லை.

ஆத்மா என்றால் என்ன?

ஆத்மா என்றால் என்ன என்று முறையாக யாரும் நமக்கு சொல்லித்தராமலேயே வழக்கில் பொதுவாக உபயோகபடுத்தும் 'அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்' போன்ற தொடர்களின் அடிப்படையில் 'எனக்கு ஒரு ஆத்மா இருக்கிறது' என்ற எண்ணம் நம்மிடம் இருந்து வருகிறது. அணிந்திருக்கும் சட்டையை 'நான்' என்ற சொல்லின் பொருளுக்குள் உட்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை. சட்டை கிழிந்து விட்டால் நான் இறந்துவிட்டேன் என்று துயரப்படுவதுமில்லை. ஒரு சிலருக்கு புதிதாக வேறு ஒரு சட்டை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டதற்காக மகிழ்ச்சிகூட ஏற்படும். அணிந்திருக்கும் சட்டை போன்றதுதான் நாம் உபயோகபடுத்தும் உடலும் மனதும். இவை 'நான்' என்ற சொல்லின் பொருளுக்குள் அடங்கா. நான் என்பது ஆத்மா மட்டுமே.
  
நமது வாகனங்களுக்கு இங்கும் அங்கும் அலைய ஆவல் ஏதுமில்லை. ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை செலுத்தினால் மட்டுமே வாகனம் நகர ஆரம்பிக்கும். ஊதியத்திற்காக அமர்த்தப்பட்டுள்ள ஓட்டுனருக்கு கூட எப்பொழுது வேலை முடிந்து வீடு திரும்பலாம் என்ற எண்ணம் இருக்குமே தவிர வாகனத்தில் அமர்ந்திருக்கும் நாம் போகவேண்டிய இடங்களுக்கு செல்ல அவருக்கு அவா இருக்காது. வண்டியும் ஓட்டுனரும் இருப்பது நமக்காகவே தவிர அவை நாமே அல்ல.

நான் ஆத்மா. உடல் எனது வாகனம். மனது அந்த வாகனத்தை செலுத்தும் ஓட்டுனர். ஆத்மா கண்ணுக்கு தெரியாமலும் ஆத்மாவின் குரல் காதுக்கு கேட்காமல் இருப்பதாலும் வாகன ஓட்டுனர் தான் வண்டிக்கு சொந்தக்காரர் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் நாமும் ஓட்டுனர்தான் நான் என்ற தவறான எண்ணத்தில் அவரது விருப்பத்திற்கு செயல் பட்டுகொண்டிருக்கிறோம்.

விருப்பு வெறுப்புகள் நமக்கு நன்மை பயக்குமா அல்லல் ஏற்படுத்துமா என்று ஆராயாமல் மனம் போன பொக்கில் வாழ்க்கையை பெரும்பாலோர் நடத்தி வருகிறார்கள். ஓட்டுனரும் வாகனமும் நமது உபயோகத்திற்காக இருக்கிறது என்று அறிந்து கொண்டால் நம் வாழ்க்கைப்பாதையை திருத்திகொண்டு குறையாத இன்பமும் தடைபெறாத அமைதியும் என்றும் நிறைந்த ஒரு வாழ்வை நாம் வாழலாம்.

அதைவிடுத்து ஓட்டுனருக்கும் வாகனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துகொண்டிருந்தால் மரணபயமும் பிரளய பயமும் நம்மை விட்டகலா. மரணத்திற்குபின் வாகனம் என்கிற நம் உடல் மறைந்தாலும் நமது ஓட்டுனர் நம்முடன் அடுத்த பிறவிக்கும் தொடர்ந்து வந்து புதிதாக நமக்கு கிடைக்கும் உடலை தனது புதிய வாகனமாக கருதி மறுபடியும் நம்மை தவறான வழியில் அழைத்துசெல்வார். எனவே பிறப்பு இறப்பு என்ற முடிவில்லா சுழற்சியில் சிக்கி நாம் இன்பம் எங்கே என்று தொடர்ந்து தேடிக்கொண்டிருப்போம். நான் ஆத்மா என்ற அறிவு நமக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் இந்த தேடல் முடிவுபெறும்.

முடிவுரை :

பிறப்பும் இறப்பும் ஆத்மாவுக்கல்ல. நான் என்ற சொல்லின் உண்மையான பொருள் ஆத்மா என்பது மட்டுமே. ஆகையால் பிரளயத்தின்பொழுது நம் பருவுடல், நுண்ணிய உடல் உள்ளிட்ட அனைத்து பஞ்சபூதங்களும் அழிந்தாலும் நான் அழிவதில்லை என்ற அறிவை நாம் பெறுவது அவசியம்.

பயிற்சிக்காக :

1. ஆத்மா என்பதன் பொருள் என்ன?

2. மரணத்திற்கு பின் நம் உடலிலிருந்து நமது ஆத்மா நம்மைவிட்டு பிரிந்து செல்லும் என்ற கருத்து உண்மையா?

சுயசிந்தனைக்காக :

1. ஆத்மா ஒன்றா பலவா?

2. பிரளயத்திற்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்ன?