Wednesday, June 16, 2010

பாடம் 066: நிலம் நீரிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.12)

பிரபஞ்சத்தின் தோற்றத்தில் வெளி, காற்று, நெருப்பு, நீர் என்ற நான்கு பொருள்களுக்குபின் ஐந்தாவதாக தோன்றியது நிலம் என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நிலம் என்றால் என்ன?

நீர் என்பதற்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் கலவையால் உருவானது என்ற தெளிவான விளக்கம் கொடுக்கும் அறிவியல் அறிஞர்கள் நிலம் என்பதை ஒரு தனிபட்ட பொருளாக கருதுவதில்லை. எனவே அவர்கள் நிலம் என்றால் என்ன என்று ஆராயும் பணியை பொருளாதார துறை வல்லுனர்களின் கவனத்திற்கு ஒதுக்கியுள்ளார்கள்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய நான்கு மூலப்பொருள்களை விட மனிதனின் பருஉடலை உருவாக்குவதில் நிலம் பெரும்பங்கு வகிக்கிறது. மண்ணின் துணையினால் உண்டாகும் உணவுப்பொருள்கள் மனித உடலாக வளர்கிறது. முடிவில் உடல் மண்ணுடன் கலந்து மறுபடியும் மற்ற உயிரினங்களின் உடல்களை வளர்க்கும் உணவாக மாறுகிறது.

மனிதனின் வாழ்வில் நிலம் ஒரு பெரும் பகுதியை வகிக்கிறது. மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை என்ற தொடர் மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இதனாலேயே திரைக்கடலோடி திரவியம் தேடிய பின் பிறந்த மண்ணில் சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் நிம்மதியாக வாழ்ந்து மண் வாசனையை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது.

நிலம் எப்படி உருவானது?

வெளி என்ற பொருளில் அடர்த்தி அதிகமானவுடன் காற்றும், அதிலிருந்து வெப்பம் அதிகமானவுடன் நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து சுழற்சி மூலம் நிலமும் உருவானது என்ற விளக்கத்தை வேதம் தருகிறது.

இந்த ஐந்து மூலப்பொருள்களின் கலவையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் உருவானது என்றும் வேதம் கூறுகிறது.

நிலத்தின் தன்மைகள்

வேதம் நிலத்தின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. திடமானது நிலம்.

2. நீரிலிருந்து தோன்றியது நிலம்.

3. ஒலி, தொட்டுணர்வு, உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களுடன் மணம் 
என்ற ஐந்தாவது குணத்தையும் கொண்டது நிலம்.

4. நிலம் கருப்பு நிறம் கொண்டது.

5. நிலம் அனைத்தையும் தாங்கும் சக்தி படைத்தது.

6. நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த மூக்கையும் உணவை செரிக்கும் உருப்புகளையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நிலம்.

முடிவுரை :

நிலம் என்பது படைப்பில் ஐந்தாவதாக உருவான பொருள். படைக்கப்பட்டவை என்ற பட்டியலில் இடம் பெறுபவை வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து மூலப் பொருள்கள் மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் இவ்வைந்தின் கலவைகளே என்று வேதம் கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. நிலத்தின் தன்மைகள் யாவை?

2. மனிதனுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு யாது?

சுயசிந்தனைக்காக :

1. நிலம் மற்றும் மண் என்ற சொல்களுக்கு அறிவியல் ரீதியான பொருளை ஆராய்க.

2. அறிவியல் உலகம் கூறும் மூலப்பொருள்களான 94 வேதிப்பொருள்களுக்கும் (Periodic table) வேதம் கூறும் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களையும் ஒப்பிடுக.