Friday, June 25, 2010

பாடம் 069: ஊழிக்காலத்தில் மனிதர்கள் (பிரம்ம சூத்திரம் 2.3.15)

பிரளயத்தின்பொழுது பஞ்சபூதங்கள் அழிந்து பரமனுடன் ஒன்றாகும் விதத்தை சித்தரித்தபின் மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் கதியைபற்றி இந்த பாடம் விவரிக்கிறது.

மரணம் என்றால் என்ன?

பெரும்பான்மையான மனிதர்களுக்கு மரணம் என்பது அச்சத்தை கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு. மரணபயம் என்பது நாம் மரணமடையபோகிறோம் என்ற எண்ணத்தினால் ஏற்படுகிறதே தவிர மரணம் என்றால் என்ன என்று நமக்கு தெரிந்திருப்பதால் அல்ல. புலிக்கு பயப்படுவதற்கும் பூதத்திற்கு பயப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புலியிடம் அகப்பட்டால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரிந்திருப்பதால் அதனிடம் பயப்படுவது நியாயம். பூதம் என்றால் என்னவென்றே தெரியாதபொழுது அதற்கு பயப்படுவது சிறுபிள்ளைத்தனம். மரணம் என்றால் என்ன என்ற வேதம் தரும் அறிவை முழுதும் புரிந்துகொண்டால் மரண பயம் நீங்கிவிடும். உலகம் அழிந்து விடுமோ என்ற பயமும் இருக்காது.

மரணம் என்பது ஆழ்ந்த உறக்கம் போன்றது. ஆழ்ந்த உறக்கத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம். மரணம் என்றால் மட்டும் வேண்டாம் என்கிறோம். மரணமடைந்த பின் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் என்னவாகும் என்ற கவலையாலேயே மரணத்தை தவிர்க்க நினைக்கிறோமே தவிர மரண அனுபவம் எனக்கு வேண்டாம் என்ற காரணத்தால் அல்ல.

பிரளயத்தின்பொழுது, 'நான் இறந்ததும் மற்றவர்களுக்கு என்ன ஆகும்' என்ற கவலைக்கு அவசியமில்லை. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் ஒரே சமயத்தில் அழிவதால் நான் போனபின் என் நாய்க்கு யார் சாப்பாடுபோடுவார்கள் என்ற கவலையோ என்னுடைய சொத்தையெல்லாம் யார் அனுபவிக்க போகிறார்களோ என்ற பயமோ தேவையில்லை.
மரண அனுபவம் ஆழ்ந்த உறக்கத்தை போன்றதென்பதால் அதை குறித்தும் நாம் அஞ்சத்தேவையில்லை. எஞ்சியிருப்பது மரணத்துக்கு பின் எனக்கு என்ன ஆகும் என்ற ஒரே கவலைதான்.

மரணத்தின் தன்மைகளை பற்றி வேதம் தரும் பின்வரும் உண்மைகளை தெரிந்து கொண்டால் இந்த கவலையும் மறையும்.
  1. இரவு உறங்கியபின் மறுநாள் காலை எழுந்திருப்பது போல் மரணமடைந்தாலும் நாம் மறுபடியும் எழுந்திருப்போம். உறங்கும்பொழுது நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எழுந்தவுடன் ஒரு எட்டு மணிநேரம் நாம் இல்லாமல் இந்த உலகம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது தெரியவரும். அது போல மரணமடைந்த பின் நம்மை பொறுத்தவரை நேரம் நின்றுவிடும். மறுபடி எழுந்தவுடன் சற்று அதிகம் மாறுபட்ட உலகில் நம் வாழ்க்கைபயணத்தை தொடருவோம்.
  1. உறங்கி எழுந்தால் நம்மை சேர்ந்த பணம், பதவி, சுற்றம் ஆகியவற்றில் அவ்வளவு மாற்றமிருக்காது. மரணத்துக்கு பின் மீண்டும் எழும்பொழுது நாம் செய்த வினைகளுகேற்ப இப்பொழுது இருப்பதைவிட பலமடங்கு சிறப்பான சுற்றுபுரத்தில் நாம் இருக்க வாய்ப்புள்ளது.
  1. வயதாகிய உடலை உதறிவிட்டு மறுபடி ஒரு புதிய இளைய உடலை பெறும் வாய்ப்பு மரண உறக்கத்தில் மட்டும்தான் நமக்கு கிடைக்கும்.
  2. மனது மரணத்திற்கு பின்னும் நம்முடன் தொடரும். அதே மனதாயிருந்தாலும் அதில் அவசியமில்லாத அத்தனை நினைவுகளும் நீக்கப்பட்டு அது புதிதாக இருக்கும். உபயோகிக்கப்பட்ட கம்புயூட்டரை வாங்கும்பொழுது ஹார்ட் டிஸ்க்கை ஃபார்மட் செய்வது எப்படி புத்திசாலித்தனமோ அதுபோல நமது புதிய வாழ்வுக்கு தேவையில்லாத பழைய நினைவுகளை மரணம் நம் மனதிலிருந்து நீக்குவது நமக்கு நன்மை பயக்கும்.
  1. நம் விருப்பு வெறுப்புகள், நமது அறிவாற்றல், திறமை, புத்திசாலித்தனம் (IQ) போன்றவை மரணத்தில் மாற்றமடையா. இதற்கு காரணம் நமது மனம், புத்தி, கருவி கரணங்கள் ஆகியவை நமது நுண்ணிய உடலைச்சேர்ந்தவை. மரணத்தின் பொழுது பருவுடல் மட்டும் அழியுமே தவிர நுண்ணிய உடல் அழியாது. அது பிறவிதோரும் நம்முடன் தொடரும். இதனாலேயே மரணம் என்பதை ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒப்பிட முடிகிறது. தூக்கத்திலிருந்து எழுபவர் தூங்க சென்றவரிடமிருந்து வேறுபட்டவரல்ல. அதே போல புதிதாக பிறப்பவர் மரணமடைந்தவரிடமிருந்து வேறுபட்டவரல்ல. பருவுடலை மாற்றுவது பழைய உடையை நீக்கி புதிய உடையை புனைவது போல. எனவே மரணத்திற்கு பின் அதே மனிதன்தான் வேறொரு உடலில் பிறக்கிறான்.
  1. ஊழிக்காலத்தில் ஏற்படும் மரணத்தில் மட்டும் நம் நுண்ணுடல் நம்முடன் தொடர்ந்து வருவதில்லை. எப்படி பருவுடல் பஞ்சபூதங்களுடன் சேர்ந்து மறைந்து விடுகிறதோ அது போல நமது நுண்ணுடலும் அவற்றை தோற்றுவித்த நுண்ணிய பஞ்சபூதங்களில் கலந்து மறைந்துவிடும்.
  1. ஆயினும் தொடர்ந்து ஏற்படும் பிறப்பு-இறப்பு-மீண்டும் பிறப்பு என்ற சுழற்சி பிரளயத்தில் முழுவதும் முடிவடைந்துவிடுவதில்லை. அனைத்து உயிரினங்களுக்கும் பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் என்று மூன்று உடல்கள் உள்ளன. ஒவ்வொரு பிறப்பு-இறப்பு சுழற்சியிலும் பருவுடல் மட்டும் அழியும். பிரளயத்தில் பருவுடலுடன் நுண்ணிய உடலும் அழிந்து விடும். ஆனால் நம் காரண உடல் அழியாது.
  1. நாம் செய்த வினைகளின் பயன்கள் நமது காரண உடலில் பதிவாகியுள்ளன. பிரளயம் என்பது பிரபஞ்சத்தின் முடிவான மறைவு அல்ல. ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முடிவற்ற சுழற்சியில் பிரளயத்திற்கு பின் மறுபடியும் உலகம் உண்டாக்கப்படும். அப்பொழுது நாம் மீண்டும் பிறப்போம். நமது வினைகளின் பலனுக்கேற்றாற்போல் பிறந்து மறுபடியும் விருப்பு வெறுப்புகளையும் அறிவையும் சேர்க்கத் துவங்குவோம்.
வேதம் கூறும் இவ்வுண்மைகளை நாம் அறிந்து கொண்டால் ஊழிக்காலத்தில் கூட பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலோருக்கு மரண பயம் ஏற்படும்பொழுது கடவுளின் ஞாபகமும் ஏற்படுகிறது. வாழ்நாழ் முழுவதும் நாத்தீகனாக இருந்தாலும் மரணம் ஏற்படுவது உறுதி என்ற நிலையில் எல்லோரும் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதற்கு காரணம் அறியாமையே. ஒருவேளை கடவுள் நம்மை தண்டித்துவிடுவாரோ என்ற கடவுளிடம் தோன்றும் பயமே பலரிடம் பக்தியாக மாறுகிறது. வாழ்நாழ் முழுவதும் பக்தி செய்தவர்கள் தாங்கள் செய்த பக்திக்கு பலனாக மோட்சம் தரவேண்டும் என்று கடைசிகாலத்தில் கடவுளிடம் கோருகிறார்கள். மீண்டும் பிறவா வரம் பரமனை முழுதும் அறிந்து கொள்வதால் மட்டும் கிடைக்குமேயன்றி வெறும் கோரிக்கைகளால் கிடைக்காது.

முடிவுரை :

ஊழிக்காலத்தில் பிரபஞ்சம் படிப்படியாக தோற்றத்திற்கு எதிர்வரிசையில் ஒடுக்கம் அடைகிறது.

உயிரினங்களின் பருவுடல் ஜடமென்பதால் மற்ற அனைத்து ஜடப்பொருள்களையும் போல பஞ்சபூதங்களில் ஒடுங்கிவிடும். பஞ்சபூதங்கள் ஒன்றினுள் ஒன்று ஒடுங்கி கடைசியில் அனைத்தும் பரமனுடன் ஒன்றிவிடும்.

பிறவிகள்தோறும் தொடரும் நுண்ணிய உடலும் பிரளயகாலத்தில் அழிந்துவிடும். பருவுடலைக்காட்டிலும் நுண்ணியது என்றாலும் நுண்ணிய உடலும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவையே. எனவே அனைத்து உயிரினங்களின் நுண்ணிய உடல்களும் பிரளயத்தின்பொழுது அழிந்து விடும்.

காரண உடல் பரமனின் மாயாசக்தியின் ஒரு அங்கம். எனவே பிரபஞ்சத்தின் அழிவு காரண உடலை அழிக்காது. ஆர்டிக் கடலில் கண்ணுக்கு தெரியும் பனிப்பாறைகளை பருவுடலுக்கு ஒப்பிட்டால் கண்ணுக்குத்தெரியாமல் கடலில் ஆழ்ந்திருக்கும் பகுதியை நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். காரண உடல் என்பது கடலின் ஏற்படும் குளிர்ச்சியை போன்றது. தட்பவெப்ப நிலைக்கேற்றவாரு பனிப்பாறைகள் உருவாகி மறைவது நம் பிறப்பு-இறப்பு சுழற்சியை போன்றது. வேனில் காலத்தில் பனிப்பாறைகள் முழுவதுமாக மறைந்தாலும் கடலின் குளிர்ச்சியடையும் தன்மை மறைவதில்லை. அது குளிர் காலத்தில் மீண்டும் பனிப்பாறைகளை உருவாக்க காரணமாயிருத்தல் போல நமது காரண உடல்கள் பிரபஞ்சத்தின் அடுத்த தோற்றத்தில் உயிரினங்கள் மறுபடி தோன்ற காரணமாயிருக்கும்.

பயிற்சிக்காக :

1. மரண பயத்திற்கு காரணங்கள் என்ன?

2. மரண அனுபவம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதா?

3. மரணத்தின் பொழுது அழிவதற்கும் பிரளயத்தின் பொழுது அழிவதற்கும் உள்ள வேறுபாடுகளை உயிரினங்களின் மூன்று உடல்களின் நோக்கில் ஆராய்க.

சுயசிந்தனைக்காக :

1. பிரளயத்திற்கு பின் தோன்றும் உலகில் மனிதர்களுக்கு விருப்பு வெறுப்புகள் இருக்காதா?

2. காரண உடல்களுக்கிடையே வேறுபாடு உள்ளதா?