பரமன் நித்தியமாக இருப்பவன். வெளி, காற்று போல பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாதவன் என்ற கருத்தை விளக்குவதுடன் ‘பரமன் இருக்கிறான்’ என்பதன் பொருளை இந்த பாடம் ஆராய்கிறது.
இருத்தல் என்றால் என்ன?
இருத்தல் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க உள்ளியல் (Ontology) என்ற துறை அரிஸ்டாடில் காலத்தில் துவக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை பல ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் 'இருத்தல் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்று நம்மால் இந்த துறையை சேர்ந்த அறிஞர்களை குறை கூற முடியாது. ஏனெனில் அவர்கள் இந்த கேள்விக்கு தெளிவான பதில் கூறிய ஆதி சங்கரரை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவருக்கும் மற்ற அறிஞர்களின் வரிசையில் இடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் சங்கரரின் சரியான பதிலை மற்றவர்களின் தவறான பதில்களைப்போல் ஒரு தனிமனிதரின் கருத்து என்று முடிவு செய்துவிட்டு சரியான பதிலை யாராலும் என்றும் கொடுக்க முடியாது என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.
‘இருக்கிறது’ என்ற சொல்லுக்கு சரியான பொருள் தெரியாமல் அதை உபயோகிக்கும் சாதாரண மனிதர்களைப்போல உள்ளியல், உளவியல் மற்றும் அறிவியல் ஆகிய அனைத்து துறைகளை சேர்ந்த அறிஞர்களும் தொடர்ந்து அஸ்திவாரம் இல்லாத கட்டடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ‘இருத்தல்’ என்பதன் பொருளை கண்டுபிடிப்பது தற்போதைய உள்ளியல் துறை மாணவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காய் இருக்கிறது. ஆளுக்கு ஆள் தமக்கு தோன்றியதை கூறி சரியான பதிலை தெரிந்துகொள்ள மறுத்துவருகிறார்கள்.
இருத்தல் என்பது ஒரு பொருளின் குணமா, அனைத்து பொருள்களின் இருப்பிற்கும் ஆதாரமாக ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற சரியான கேள்விகளை முன்வைக்கும் உள்ளியல் துறை, சரியான பதிலை புரிந்து கொள்ள திறனின்றி தொடர்ந்து அதே கேள்விகளை மட்டும் கேட்டு வருகிறார்கள்.
‘எனக்கு கேள்விகளை கேட்கத்தான் தெரியும்’ என்று கூறிய திருவிளையாடல் தருமியாவது ஆண்டவன் கூறிய பதில்களை புரிந்துகொள்ளும் சக்தி கொண்டிருந்தான். ஆனால் உள்ளியல் துறை அறிஞர்களுக்கு வேதத்தில் உள்ள சரியான பதிலை எடுத்துரைத்த ஆதிசங்கரரை ஒரு அறிஞர் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுதான் திறமை உள்ளதே தவிர அவர் கூறிய சரியான பதிலை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.
இருத்தல் பொருள்களின் குணமல்ல
'நாற்காலி இருக்கிறது' என்ற சொற்றொடரில் உள்ள 'இருக்கிறது' என்ற வார்த்தை நாற்காலியின் ஒரு குணமல்ல. நாற்காலியை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டபின் நாற்காலி சாம்பலாக மாறிவிடும். இப்பொழுது நாற்காலி சாம்பலாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுமே தவிர முழுவதும் அழிவதில்லை. இந்த உண்மையை அறிவியல் அறிஞர்கள் முற்றிலும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எல்லா பொருள்களும் ஏதாவது ஒரு உருவத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பொருள்களாக இல்லாவிட்டாலும் சக்தியாக மாறி தொடர்ந்து அவை இருக்கின்றன. எனவே இருத்தல் பொருள்களின் குணமல்ல என்றும் அது என்றும் இருக்கும் ஒரு தனிப்பட்ட அடிப்படை தத்துவம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தத்துவம்தான் பரமன். பரமன் இருக்கிறான். இதில் இருத்தல் என்பது பரமனின் இயல்பு.
பரமன் நித்தியமானவன் என்பதன் விளக்கம்
இருத்தல் என்பதை இயல்பாக கொண்டு இப்பிரபஞ்சம் முழுவதுமுள்ள அனைத்து பொருள்களின் இருப்பிற்கு ஆதாரமாக இருக்கும் பரமன் எந்த ஒருகாலத்திலும் இல்லாமலிருக்க முடியாது.
பரமன் தோன்றி மறைபவன் எனில் அவன் தோற்றத்தை அறிய வேறு ஒருவன் இருக்க வேண்டும். அவ்வாறு யாருமில்லாத காரணத்தால் பரமன் தோற்றமற்றவன் என்பதை அறியலாம்.
காரண காரிய வரிசையில் முதலில் இருக்கும் பரமனுக்கு காரணம் என்று யாரேனும் இருந்தால் அவன்தான் பரமன். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணமானவன் பரமன். அவன் தோற்றபட்டவனல்ல. தோற்றுவிப்பவன் மட்டுமே.
ஒளி என்பது எப்படி இருட்டிலிருந்து உற்பத்தி ஆகாதோ அது போல இருத்தல் என்பது இல்லாமையிலிருந்து உருவாவது சாத்தியமில்லை.
களிமண் என்ற பொதுவான பொருளிலிருந்து குடம், ஜாடி, மூடி போன்ற குறிப்பிட்ட பொருள்கள் தோன்றும். குறிப்பிட்ட பொருள்களிலிருந்து ஒரு பொதுவான பொருள் தோன்றும் என்பது நமது தர்க்க அறிவிற்கும் அனுபவ அறிவிற்கும் ஒத்துப் போவதில்லை. எனவே அனைத்து வேறுபட்ட பொருள்களும் பரமனிடமிருந்து உருவாகியிருக்க, பரமன் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளிலிருந்தும் உருவாகும் வாய்ப்பேயில்லை.
பரமன் என்றும் இருப்பவனல்ல, தோற்றுவிக்கப்பட்டவன் என்று கூறினால் அவனை தோற்றுவித்தது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரபஞ்சம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதும் அது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமுன் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நமக்கு அறிவியல் உலகம் தெளிவாக தெரிவிப்பதால் தோற்றுவித்தவன் என்று ஒருவன் இருக்க வேண்டுமென்றும் அவன் நித்தியமானவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நாம் தர்க்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இருத்தல் என்பதை இயல்பாக கொண்ட பரமன் என்றும் இருப்பவன் என்ற இதே கருத்தை வேதமும் தெளிவாக சொல்கிறது.
முடிவுரை :
பரமன் மட்டுமே நித்தியமாக என்றும் இருப்பவன். அவன் தோற்றம் மறைவு போன்ற மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவன். இருத்தல் என்ற தனிபட்ட தத்துவத்தை அடிப்படையாக கொண்டே இப்பிரபஞ்சம் இருந்து வருகிறது. பிரளயத்துக்கு பின் இருத்தலை பரமனிடம் மட்டும் விட்டுவிட்டு பிரபஞ்சம் மறைந்து விடும்.
பயிற்சிக்காக :
1. பரமன் நித்தியமானவன் என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?
சுயசிந்தனைக்காக: :
1. உள்ளியல் (Ontology) துறை பற்றி அறிந்து கொள்க.