Wednesday, July 28, 2010

பாடம் 078: புலன்கள் பரமனிடமிருந்து உருவானவை (பிரம்ம சூத்திரம் 2.4.1-4)

பரமனிடமிருந்து உருவான புலன்கள் நமது ஐந்து கோசங்களில் ஒன்றான பிராணமய கோசத்தின் ஒரு பகுதி என்றும் அவை நமது பருவுடலிலிருந்து வேறுபட்டவை என்றும் இந்த பாடம் விளக்குகிறது.

பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் என்ற நமது மூன்று உடல்களை ஐந்து கோசங்களாக பிரித்து காண்பிப்பதன் மூலம் நுண்ணிய உடலின் செயல்பாடுகளை மேலும் ஆழமான முறையில் வேதம் நமக்கு விவரிக்கிறது.

அன்னமயகோசம் (Physical Layer)

உணவினால் உருவான பருவுடல் முழுவதும் அன்னமய கோசம் என்ற பெயரில் வழங்கபடும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமைக்கு காரணம் இந்த பருவுடல் பெற்றோர் உண்ட உணவின் மாறுபாட்டிலிருந்து தோன்றியது என்பதை காண்பிக்கும். உடலின் பௌதீக அடிப்படையின் காரணமாக தோன்றும் அனைத்து வியாதிகளும் வழிவழியாக தொடர (hereditary) வாய்ப்புகள் அதிகம். இவ்விரண்டைத்தவிர வேறு எந்த குணமும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வராது.
பிள்ளைகளின் புத்திசாலித்தனம், மனபக்குவம், பாட்டுபாடும் திறன், விளையாட்டில் ஈடுபாடு போன்றவற்றிற்கு பெற்றோர்கள் காரணமல்ல. ஏனெனில் இவையனைத்தும் முந்தய பிறப்பில் செய்தகாரியங்களின் விளைவாக ஒவ்வொருவராலும் தன் சொந்த முயற்சியால் ஈட்டப்பட்ட குணங்கள். இவற்றிற்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பிள்ளைகள் பெற்றோர்கள் மூலமாக இவ்வுலகிற்கு வருகிறார்களே தவிர பெற்றோர்களிடமிருந்து வருவதில்லை. பெற்றோர்களிடமிருந்து பெறுவது அன்னமயகோசம் ஒன்று மட்டுமே. மற்ற நான்கு கோசங்களும் ஒவ்வொரு உயிரினத்தின் தனிச்சொத்து. எனவே முகசாடை மற்றும் தோலின் நிறம் தவிர பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் மற்ற ஒற்றுமைகள் அனைத்தும் நண்பர்களிடையே இருக்கும் ஒற்றுமை போல காரண காரிய சம்பந்தம் இல்லாதவை.

பிராணமயகோசம் (Physiological Layer)

பருவுடலை உள்ளிருந்து ஆளும் நுண்ணிய உடல் மூன்று கோசங்களாக பிரிக்கப்படுகிறது. அவை பிராணமயகோசம், மனோமயகோசம் மற்றும் விஞ்ஞானமயகோசம் ஆகியவை.

நுண்ணிய உடலில் உள்ள 19 உறுப்புகளில் புத்தி, அகங்காரம், மனம், சித்தம் ஆகிய நான்கைத்தவிர எஞ்சியுள்ள பதினைந்து உறுப்புகளை உள்ளடைக்கியது பிராணமயகோசம். நமது புலன்களும் கரணங்களும் பிராணன்களும் சேர்ந்த இந்த பிராணமய கோசம் மனோமயகோசத்திற்கும் அன்னமயகோசத்திற்கும் பாலமாக அமைந்துள்ளது. எனவேதான் பிராணாயாமம் என்கிற முறையாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் உடல்பயிற்சியால் மனதை அமைதிபடுத்த முடிகிறது.

மனோமயகோசம் (Psychological Layer)

புத்தி, அகங்காரம், மனம் மற்றும் சித்தம் என்ற நான்கு வகைபட்ட எண்ணங்களை கொண்ட நமது மனம் மனோமயகோசத்தை சேர்ந்தது. பிராணமயகோசத்தை சேர்ந்த புலன்களையும் கரணங்களையும் நேரடியாக கட்டுபடுத்துவது மனோமயகோசம் ஆகும்.

விஞ்ஞானமயகோசம் (Intelligence Layer)

அறிவுருவான பரமனின் வெளிப்பாடான இந்த கோசம் மனோமயகோசத்தின் தொகுப்பாக அமைகிறது. நமது புலன்களின் மூலம் வெளியுலகை பற்றிய செய்திகள் மனதில் பக்குவபடுத்தப்பட்டு ஞானமாக விஞ்ஞானமயகோசத்தை சேர்கிறது. மனதை கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிட்டால் ஆழ்கடலை விஞ்ஞானமயகோசத்திற்கு ஒப்பிடலாம். நமது மனதின் உளத்திண்மை, மனப்பக்குவம், மன உறுதி ஆகியவை நமது விஞ்ஞானமய கோசத்தின் அடிப்படையில் அமைகிறது.

ஆனந்தமயகோசம் (Happiness Layer)

நமது காரணவுடல் முழுவதும் ஆனந்தமய கோசம் என்ற பெயரில் வழங்கபடும். பரமனின் ஆனந்த மயத்தின் வெளிப்பாடு என்பதால் நமது காரண உடலுக்கு இந்த பெயர்.

தோற்றம்

பருவுடல் ஒவ்வொரு முறை இறந்து மீண்டும் பிறக்கும்பொழுதும் நுண்ணிய உடல் பிரளயத்துக்கு பின் மீண்டும் உலகம் தோற்றுவிக்கும்பொழுதும் புதிதாக தோன்றுகிறது என்பதை முந்தய பாடங்களிலிருந்து அறிந்துள்ளோம். காரண உடலுக்கு தோற்றம் கிடையாது.

முடிவுரை :

நமது உடலை ஐந்து பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடுகளை தனித்தனியாக விளக்குவதன் மூலம், பிராணன் என்பது நம்மைச்சேர்ந்தது என்றாலும் அது ஒரு சுதந்திரமான தனிபட்ட ஒரு தத்துவம் என்பதை வேதம் கூறுகிறது. நம்மிடம் ஒரு குதிரை வண்டி இருந்தால் வண்டியைபோல குதிரையும் நமது சொத்து. ஆனால் குதிரை என்பது ஒரு தனிபட்ட ஒரு உயிரினம். அது வண்டி நிற்க வைத்த இடத்தில் அசையாமல் இருப்பது போல இருக்காது. குதிரை தனக்கென ஒரு ஆளுமையை கொண்டிருக்கும். தினம் நாம் பயணம் செய்யும் பாதையை பற்றிய அறிவை அது அடையும். வண்டியை பாதுகாப்பதைவிட குதிரையை பாதுகாக்க நாம் அதிக நேரமும் பணமும் செலவிட வேண்டும். அதேபோல நமது புலன்கள் பிராணமயகோசத்தை சேர்ந்த அங்கம் என்ற கருத்தின் மூலம் அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற அறிவை நமக்கு புகட்ட இந்த இரண்டாம் அத்தியாயத்தின் கடைசி பகுதி பிராணமய கோசத்தின் அளவையும், எண்ணிக்கையையும் செயல்பாட்டையும் நமக்கு தருகிறது.

பிரளயத்திற்குபிறகு பரமன் தன் மாயாசக்தியால் பிரபஞ்சத்தை மறுபடியும் தோற்றுவிக்கிறான். ஜடப்பொருள்கள் தொடர்ந்து மாற்றமடைந்து உயிரினங்கள் வாழத்தக்க சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது பரமனின் மாயாசக்தியின் ஒருபகுதியான காரண உடலில் பதிவாகியுள்ள கர்மபலன்களுக்கேற்றவாறு நுண்ணிய உடல்கள் தோற்றுவிக்கப்பட்டு அவை பூமியில் உள்ள ஜடப்பொருள்களுக்குள் புகுந்து உயிரினமாக பிறக்கின்றன. எனவே புலன்களை தோற்றுவித்தது பரமன்தான் என்பதையும் நாம் அறியவேண்டும்.

பயிற்சிக்காக :

1.மொத்தம் எவ்வளவு கோசங்கள்? அவை யாவை?

சுயசிந்தனைக்காக :

1. பாடகியின் மகள் பாடகியாகவும் நடிகரின் மகன் நடிகராகவும் ஆவதற்கு காரணம் என்ன?



Monday, July 26, 2010

பாடம் 077: ஆத்மாவும் பரமனும் (பிரம்ம சூத்திரம் 2.3.43-53)

ஆத்மா என்பதும் பரமன் என்பதும் ஒரே உண்மையை குறிக்கும் இருவேறு சொற்கள் என்பதை இந்த பாடம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பலூனுக்குள் இருப்பதும் காற்று. பலூனுக்கு வெளியே இருப்பதும் காற்று. அதுபோல அனைத்து உயிரினங்களின் உணர்வுக்கு ஆதாரமான பரமனே பிரபஞ்சத்தின் ஆதாரம். உயிரினங்களை பற்றி பேசும்பொழுது பரமனை ஆத்மா என்றபெயரில் வேதம் குறிப்பிடுகிறது.

பரமன் இருக்கிறான் என்பதை அறிவது கடினம். ஆனால் நான் இருக்கிறேன் என்று அறிவது எளிது. எனவே நான் என்பவன் யார் என்பதை பிரபஞ்சத்தின் அழிவு பற்றி பேசும்பொழுது பிரம்மசூத்திரம் பின்வரும் விளக்கங்களை அளித்து விளக்கியது.

1.ஆத்மா அழியாதது
2.ஆத்மா என்றுமிருக்கும் சத்தியம்
3.ஆத்மா அறிய முடியா அறிவு
4.ஆத்மா அளவிடமுடியாத அனந்தம்
5.ஆத்மா இரண்டற்ற ஒன்றானது
6.ஆத்மா பாகங்களற்றது

பிரம்மசூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் பரமனின் தன்மைகளை பற்றி பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டிருந்தன.

1.பரமன் அழிவில்லாதவன்
2.பரமன் அனைத்துமாக விளங்குபவன்
3.பரமன் உணர்வுமயமானவன்
4.பரமன் ஆனந்தமயமானவன்
5.பரமன் ஒருவனே
6.பரமனுக்கு பாகங்கள் கிடையாது

இந்த ஆறு விளக்கங்கள் மூலம் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதியின் முடிவில் கூறப்பட்ட 'நீதான் பரமன்' என்ற முடிவு சரியானது என்று நிரூபணம் ஆகிறது.

முடிவுரை :

பரமன் யார், அவன் எப்படிபட்டவன் என்பது போன்ற அனைத்து கருத்துக்களையும் பிரம்மசூத்திரத்தின் முதல் அத்தியாயம் விளக்கியது. அதன் பின் இந்த இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதியில் நான் என்பதன் பொருளான ஆத்மாவின் தன்மைகள் விவரிக்கப்பட்டன. பரமனின் தன்மைகளும் ஆத்மாவின் தன்மைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் ஒன்றுபடுவதை சுட்டிகாட்டி இரண்டும் ஒன்றுதான் என்று கூறிய இந்த பாடத்துடன் இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி முற்றுபெறுகிறது.

பயிற்சிக்காக :

1.பரமன் ஆத்மா ஆகிய இருசொல்களும் ஒரு பொருளை தருகின்றன என்பதை நிரூபிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. பரமன் ஆத்மா என்று இருசொல்களை வேதம் உபயோகித்ததால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

Monday, July 19, 2010

பாடம் 076: ஆத்மா பாகங்களற்றது (பிரம்ம சூத்திரம் 2.3.41-42)

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆத்மா இருக்கிறது அல்லது மனிதன் கடவுளின் அங்கம் என்பது போன்ற தவறான கருத்துக்களை நீக்கி இரண்டற்ற ஆத்மா பாகங்களற்றது என்ற விளக்கத்தை கொடுத்தபின் இத்தகைய தவறான கருத்துக்கள் மக்கள் உண்மையை அறிய படிக்கட்டுகளாக உபயோகபடுகின்றன என்ற செய்தியை இந்த பாடம் நமக்கு தருகிறது.

எது சரியான பாதை?

இந்த கேள்விக்கு சரியான பதில் தெரியவேண்டுமென்றால் முதலில் நாம் சென்றடைய வேண்டிய இடம் எது என்பது பற்றிய சரியான அறிவு நமக்கு தேவை. வெவ்வேறு மதங்கள் யார் ஜீவன், உலகம் எப்படி உருவானது, கடவுள் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு முற்றிலும் வேறுபட்டு ஒன்றுக்கொன்று முரணான பதில்களை தருகின்றன. இதில் எது சரியான பதில் என்று அறிந்து கொள்ள நாம் மூன்று படிகளை கடக்க வேண்டும்.

முதல் படி: வாழ்வின் இறுதிக்குறிக்கோள் என்ன என்ற தெளிவு முதலில் ஏற்படவேண்டும். இன்று இதுவேண்டும் நாளை அதுவேண்டும் என்று நாளுக்கு நாள் மாறாமல் இனி எதுவும் வேண்டாம் என்ற நிலையை எது கொடுக்குமோ அதுவே இறுதிக்குறிக்கோளாக இருக்க முடியும்.

இரண்டாவது படி: ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் மட்டுமே நம்மால் நம் வாழ்வின் இறுதிக்குறிக்கோளை அடைய முடியும் என்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும்.

மூன்றாவது படி: நமது வாழ்வின் இறுதிக்குறிக்கோளை அடைய எந்த மதம் சரியான மதம் என்பதை நமது அறிவுத்திறன் கொண்டு ஆராய்ந்து அறிய வேண்டும்.

இந்த மூன்று படிகளை கடந்தபின்தான் நமது ஆன்மீக பயணம் ஆரம்பமாகும்.

மதங்களுக்குள் வேறுபாடுகள்

முக்தி என்பதுதான் அனைத்து மதங்களின் முடிவான குறிக்கோள். ஆனால் முக்தி என்றால் என்ன என்பதில் அவற்றுள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே மதங்களை ஒரே இடத்துக்கு அழைத்துச்செல்லும் வெவ்வேறு பாதைகள் என்று குறிப்பிடுவது தவறு.

பேருந்து நிலையத்தில் நிற்கும் ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் அதன் தடவரிசையும் சென்றடையும் கடைசி இடமும் தெளிவாக காட்டப்பட்டிருக்கும். நாம் செல்லவேண்டிய இடத்திற்கு நேரடையாக பயணம் செய்யும் பேருந்தை தேர்ந்தெடுக்கும் வேலை ஓட்டுநரையோ நடத்துநரையோ சேர்ந்தது அல்ல. அந்த பொறுப்பு நம்முடையது. அதுபோல பல்வேறு மதங்கள் கூறும் தத்துவங்களை எடுத்து உபதேசிக்கும் ஆசிரியர்கள் நம் வாழ்வின் இறுதிகுறிக்கோளை தீர்மானிக்க தகுதியற்றவர்கள். நமக்கு வேண்டியதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும் அறிவுத்திறன் நம்மிடம் இல்லையானால் யார் சொல்வதை வேண்டுமானாலும் கேட்கலாம். எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இந்த இடத்துக்குத்தான் போகவேண்டும் என்ற கட்டாயமில்லாமல் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் ஒரு குளிரூட்டபட்ட சொகுசு பேருந்தில் அது எங்கே செல்கிறது என்பதைகூட விசாரிக்காமல் ஏறி அமர்ந்து கொள்ளலாம்.

பெரும்பாலோர் வாழ்வின் முடிவான குறிக்கோளை ஆராய்ந்து அறிவதில்லை. மதங்களினால் என்ன பயன் என்று ஆராயாமல் கடவுள் நம்பிக்கையற்றவன் என்ற அவப்பெயர் ஏற்படகூடாது என்ற ஒரே காரணத்துக்காக பெற்றோரின் மதத்தை பின்பற்றுகிறார்கள்.

சமயம் மூடநம்பிக்கை அல்ல

எது சரியான குறிக்கோள்/ பாதை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். நான்தான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்று சொல்வது ஒரு நம்பமுடியாத அல்லது கிரகிக்க முடியாத கருத்தாக தெரிந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளகூடாது. அப்படி புரியாத கருத்தை ஏற்றுக்கொண்டால் அது மூடநம்பிக்கையாகிவிடும். பாற்கடலில் ஆதிசேஷனை படுக்கையாக கொண்டு லக்ஷ்மிதேவி காலடியில் அமர்ந்திருக்க சயனித்துகொண்டிருக்கும் மஹாவிஷ்ணுதான் முழுமுதல் கடவுள், நாமெல்லாம் அவனுக்கு தொண்டு செய்ய பிறந்திருக்கும் அடிமைகள் என்ற கருத்து ஏற்புடையதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக்கோள்வதில் தவறு இல்லை. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்று கூறினால் அதைகேட்டு நாம் நம் நம்பிக்கை சரிதானா என்று சந்தேகிக்க தேவையில்லை. ஏனெனில் நமக்கு புரியாத கருத்தை ஏற்றுக்கொண்டால்தான் அது மூடநம்பிக்கை. வேதத்தில் கூறப்பட்ட உண்மைகளில் எது நம் புத்திக்கு சரி என்று படுகிறதோ அதை நம் ஞானமாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோல் வேறு சிலருக்கு நாம் கடவுளின் அங்கம் என்ற கருத்துதான் சரி என்று படும். எது சரி என்பது ஒவ்வொரு மனிதரின் அறிவுக்கு ஏற்றாற்போல் மாறுபடுவதால்தான் இவ்வுலகில் பல்வேறு சமயங்கள் நிலவிவருகின்றன.

ஆன்மீகபயணம்

மனிதன் எந்த சமயத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவன் பெற்றோரினால் முதலில் தீர்மானிக்கப்படுகிறது. பண்டிகைகளை கொண்டாடுவது மற்றும் மதசம்பந்தமான வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரியாமல் பின்பற்றுவது போன்ற செயல்கள் சமயதத்துவங்களில் ஈடுபாடு ஏற்படுத்துவதில்லை. தனது குறிக்கோளை அடைய தன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை மனிதனின் ஆன்மீகப்பயணம் ஆரம்பிப்பதில்ல.

எப்பொழுது மனிதன் தன் சுயமுயற்சியின் குறைபாடுகளை உணர்கிறானோ அப்பொழுது அவன் மதம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறான். மதம் மனதை சமைப்பதால் அதை சமயம் என்று அழைக்கிறோம்.

முதல் படி: தனக்கு அப்பாற்பட்டு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கட்டளைபடிதான் நாம் நடக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் தர்மமாக வாழத்துவங்குவது ஆன்மீக பயணத்தின் முதல் படி. இந்த படியில் கடவுள் ஒரு குறிப்பிட்ட வடிவமும் பெயரும் உள்ளவராக நம்பப்படுகிறார்.

இரண்டாம் படி: கடவுள் யார் என்று கேள்விகள் கேட்டு நாம் வேறு கடவுள் வேறு என்று நினைத்துகொண்டிருப்பது தவறு என்ற ஞானம் வந்ததும் உலகம் முழுமையையும் கடவுளின் பாகமாக உணரத்துவங்குவோம். என் கடவுள் மட்டும்தான் உண்மையான கடவுள் என்ற முதல் படியிலிருந்து முன்னேறி அனைவரது கடவுளரும் ஒரேஒரு கடவுளின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதை அறிவோம்.

மூன்றாம் படி: இதுதான் ஆன்மீக பாதையின் கடைசி படி. இந்த படியில் கடவுளுக்கு எவ்வித குணமோ, பெயரோ, உருவமோ இல்லை என்பதை முறையாக படித்து தெரிந்து கொள்வோம்.

நான் எவ்வித குணமோ பெயரோ உருவமோ இல்லாத இரண்டற்ற ஆத்மா என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்து படிகளையும் தாண்டி நமது ஆன்மீகப்பயணம் முற்று பெறும். அதன் பின் நாம் குறைவற்ற இன்பத்தை பெற்று நிறைவடைவோம். அதுவே முக்தி.

முடிவுரை :

மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுவதுதான் இந்த உலகில் பல்வேறு மதங்கள் நிலவி வருவதற்கு ஒரே காரணம். கடவுள் யார் என்ற கேள்வியின் சரியான பதிலை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்கள் தங்கள் அறிவுக்கேற்றாற்போல் ஏதாவதொரு மதத்தின் கொள்கைகளை உண்மை என்று நம்புகிறார்கள். அப்படிபட்ட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்றும் மற்ற மதங்கள் தவறானவை என்றும் முற்றும் உணர்ந்த அறிஞர்கள் கூறுவதில்லை. இன்னும் பயணத்தை முடித்து வாழ்வின் முடிவான குறிக்கோளை அடையாதவர்கள் மட்டுமே ‘என் மதம்தான் சரியானது நீ செல்லும் பாதை தவறானது’ என்பது போன்ற விவாதங்களில் ஈடுபடுவார்கள்.

நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களும், நமக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களும் நமது அறிவை தீர்மானிக்கின்றன. நமது அறிவு தொடர்ந்து வளர்ச்சி பெற்று முடிவில் முக்தியை அடையும். இந்த வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு முந்தய கட்டத்தில் நமக்கு இருந்த அறிவு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் அது இந்த படிக்கட்டுக்கு நம்மை அழைத்துவர உதவியது என்பதை நாம் மறக்க கூடாது. எனவே கடவுள் வேறு நான் வேறு என்று கூறுபவர்களும் நான் கடவுளின் ஒரு அங்கம் என்று கூறுபவர்களும் ஆன்மீக பயணத்தின் வெவ்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

பயிற்சிக்காக :

1. மூடநம்பிக்கை உருவாக காரணம் என்ன?

2. ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்குமுன் கடக்க வேண்டிய மூன்று படிகள் யாவை?

3. ஆன்மீக பயணத்தின் மூன்று படிகள் யாவை?

4. முக்தி என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஆன்மீக பயணத்தில் ஈடுபடாமல் இவ்வுலகில் வாழும் இரண்டு வகை மக்கள் யார்?

2. உண்மையை உணராதவர்கள் முக்தியடைய முடியாதா?

Tuesday, July 13, 2010

பாடம் 075: ஆத்மா ஒன்றுதான் (பிரம்ம சூத்திரம் 2.3.40)

ஜீவாத்மாக்கள் பல என்று கூறப்பட்டதால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆத்மாக்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு விடையை இந்த பாடம் தருகிறது.

பரவலான மூடநம்பிக்கை

உலகில் பல மூட நம்பிக்கைகள் உண்டு. அவற்றினுள் முதலிடம் வகிப்பது கடவுளுக்கும் உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் பெரும்பாலோர் கடவுள் மக்களிடமிருந்து விலகி எங்கோ இருப்பதாகவும் கடவுளின் கட்டளைபடி நாம் வாழ வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய மூடநம்பிக்கை.

புத்தமதத்தை தவிர மற்ற அனைத்து மதங்களும் கடவுளை ஒரு சர்வ சக்திமான் என்றும் மக்களை அற்பர்கள் அல்லது பாபிகள் என்றும் வர்ணிக்கின்றன. இந்த உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்து பொருள்களும் கடவுளின் சொத்து என்றும் மனிதன் எப்பொழுதும் கடவுளுக்கு அடிபணிந்து பயபக்தியுடன் செயல் படவேண்டும் என்றும் உலகின் பெரும்பான்மை மக்கள் தவறான நம்பி வருகின்றார்கள்.

மூட நம்பிக்கைக்கு காரணம்

பகுத்தறிவை உபயோகித்து கேள்விகள் கேட்காதவரை மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நம்மிடையே வளர்ந்து வரும். பார்ப்பது அல்லது கேட்பதெல்லாம் அறிவாக மாறிவிடாது. ஐந்து புலன்களின் மூலம் பெறும் செய்திகள் பகுத்தறிவின் கூர்மையால் சோதனை செய்யபட்ட பின்தான் அவை அறிவாக மாறும். கிராமத்திலேயே என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படிப்பறிவில்லா மூதாட்டியிடம் மனதில் தோன்றிய கற்பனை கதைகளை கூறி அவற்றை உண்மை என்று நம்பவைப்பது எளிது. ஆனால் ஏன் எப்படி என்று எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்கும் தற்கால இளைஞர்களிடம் உண்மையையே விளக்கினாலும் அவர்களது சந்தேகங்களை நீக்குவது கடினம். எங்கு அறிவுத்திறனும் யுக்திவலிமை அதிகமிருக்கிறதோ அங்கு மூடநம்பிக்கைகள் இருக்காது.

யாரும் தங்களது நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்று ஒத்துக்கொள்வது கிடையாது. அறிவுக்கு எட்டாத கருத்துக்களை நம்பிக்கை என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதைதவிர வேறு வழி கிடையாது. கடவுள் மற்றும் உலகத்தை பற்றி பல்வேறு மதங்கள் கூறிவரும் ஒன்றுடன் ஒன்று முரணான கருத்துக்களிலிருந்து எது உண்மை என்பதை ஆய்ந்து அறிவாக ஏற்றுக்கொள்வதோ அல்லது மூடநம்பிக்கை என்று நிராகரிப்பதோ அவரவரின் அறிவுத்திறனை பொறுத்தது.

வேதத்தில் கூறபட்டிருக்கிறது என்ற காரணத்திற்காக இது சரியாக இருக்கும் என்று எந்த ஒரு கருத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வேதம் இதைத்தான் கூறுகிறது என்று எந்த ஒரு கருத்தையும் நிரூபிக்க முடியும். எனவே வேதத்தின் முடிவான கருத்து என்ன என்பதை அறிய நமது அறிவுகூர்மை மட்டுமே துணை. இதனால் எது சரியான கருத்து என்ற முடிவு ஆளுக்கு ஆள் வேறுபடும்.

வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தோன்றுவதால் வேதத்தை ஒதுக்கிவிட்டு அறிவியலின் துணை மட்டும் கொண்டு நாம் இன்பமாக வாழலாம் என்பதும் நடவாத காரியம். மதங்களில் கூறப்பட்ட தத்துவங்களை சரியாக தெரிந்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு இன்றிமையாத தேவை. ஏனெனில் இன்பமான வாழ்வை அடையும் வழியை மதங்கள் மட்டுமே நமக்கு தருகின்றன. அறிவியலால் என்றும் அறிய முடியாத இவ்வழிகளை நம் அறிவின் திறனால் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதங்கள் கூறும் மூன்று முரண்பட்ட அடிப்படை கருத்துகள் பின்வரும் ஆறு தொகுப்புகளின் கீழ் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. (கருத்து 1: துவைதம். கருத்து 2: விசிஷ்டாத்வைதம். கருத்து 3: அத்வைதம்.)

1.உயிரினங்கள்
கருத்து 1: ஜீவாத்மாக்கள் பல. அவை பரமாத்மாவிலிருந்து வேறுபட்டவை.
கருத்து 2: ஜீவாத்மாக்கள் பல. அவை பரமாத்மாவின் அங்கங்கள்.
கருத்து 3: ஜீவாத்மாக்கள் ஒரே பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள்.

2.உலகம்
கருத்து 1: உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளிடமிருந்து வேறுபட்டது.
கருத்து 2: உலகம் கடவுளின் ஒரு பகுதி. கடவுளிடமிருந்து தனிபட்டது அல்ல.
கருத்து 3: உலகம் ஒரு மாயை. உண்மையில் அது இல்லை.

3.கடவுள்
கருத்து 1: சகல நல்குணங்களுடன் கூடிய இறைவன் இந்த பிரபஞ்சத்தை ஆட்சிபுரிகிறான்.
கருத்து 2: சகல குணங்களுடன் கூடிய இறைவன் இந்த பிரபஞ்சத்தை காவல்புரிகிறான்.
கருத்து 3: எவ்விதகுணமோ பாகங்களோ இல்லாத இறைவன் பிரபஞ்சமாக காட்சியளிக்கிறான்.

4.துன்பத்திற்கு காரணம்
கருத்து 1: நான் சுதந்திரமானவன் என்ற அஞ்ஞானம்.
கருத்து 2: நான் கடவுளின் ஒரு பகுதி என்ற உண்மையை அறியாமை.
கருத்து 3: நான் உலகத்தை சார்ந்து இருப்பவன் என்ற அஞ்ஞானம்.

5.துன்பத்தை நிவர்த்திக்கும் வழி
கருத்து 1: கடவுளுக்கு தொண்டு செய்து அவன் புகழை தோத்திரம் செய்வது.
கருத்து 2: கடவுளிடம் சரணடைந்து அவனை உறுதியாக பற்றிக்கொள்வது.
கருத்து 3: நான்தான் உலகத்தின் ஆதாரம் என்று அறிந்து கொள்வது.

6.முக்தி
கருத்து 1: மரணத்திற்கு பின் கடவுளின் அடியை சேர்ந்து தொண்டு புரிவது.
கருத்து 2: மரணத்திற்கு பிறகு மீண்டும் பிறவாமல் கடவுளுடன் ஒன்றாகிவிடுதல்.
கருத்து 3: குறைவில்லா இன்பத்துடன் உலக வாழ்வை மரணம்வரை அனுபவித்தல்.

ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைபடுத்தப்பட்டுள்ள இந்த கருத்துகளில் எது உண்மை என்பதை நம் அறிவுகூர்மையால் ஆராய்ந்து அறிந்து அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மூன்றில் ஏதாவது ஒரு கருத்துதான் உண்மையாக இருக்கமுடியும். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று ஏதோ இந்த விஷயம் நமக்கு சம்பந்தபடாத ஒன்றாக நினைத்து ஒருவித முடிவும் எடுக்காமல் இருக்கமுடியாது. ஏனெனில் வாழ்வில் சரியான பாதையில் நாம் பயணிக்கிறோமா இல்லையா என்பது இந்த மூன்றில் எந்த கருத்தை நாம் ஏற்றுகொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

துவைதம் ஆன்மீக பாதையில் முதல் படி. விசிஷ்டாத்வைதம் இரண்டாம் படி. அத்வைதம் ஆன்மீக பாதையின் முடிவு. பாதையின் முடிவை அடைய படிகள் அவசியம். எனவே கடவுள் மேல் நம்பிக்கையில்லாமல் இருப்பதைவிட கடவுள் மேல் மூடநம்பிக்கையுடன் இருப்பது சிறந்தது. நம்பிக்கையின் அடிப்படையில் ஆரம்பித்த கடவுள் பக்தி, வேதங்களை முறைப்படி படிக்கவும் அதன் பின் கடவுளை பற்றிய சரியான அறிவை அடையவும் துணை செய்யும்.

முடிவுரை :

ஆத்மா ஒன்றுதான். உலகில் வாழும் பல்வேறு ஜீவாத்மாக்கள் உண்மையில் தனித்தனியானவை அல்ல. ஆத்மாவின் பிரதிபிம்பங்கள் உடல் மனது ஆகிய ஜடப்பொருள்களுடன் சேர்ந்து ஜீவாத்மாக்களாக காட்சியளிக்கின்றன.

தச்சன் கருவிகளை உபயோகிக்கும்பொழுது தச்சனாகவும் மற்ற சமயங்களில் சாதாரண மனிதனாகவும் இருக்கிறான். அதுபோல ஜீவாத்மா மனம் உடல் போன்ற கருவிகளை உபயோகிக்கும்பொழுது கர்த்தாவாகவும் மற்ற சமயங்களில் ஆனந்தமயமாயும் இருக்கிறதா என்ற சந்தேகம் பல ஜீவாத்மாக்கள் இவ்வுலகில் செயல்படுவதை காணும்பொழுது ஏற்படலாம். உண்மையில் ஆத்மா என்பது எதனுடனும் சம்பந்தபடாமல் தானும் கர்த்தாவாக இல்லாமல் மற்ற யாரையும் செயலுக்கு தூண்டிவிடாமலும் இருப்பது.

ஆத்மாவின் பிம்பமான அகம்பாவம் ஒவ்வொரு உயிரினத்தின் மனதில் பிரதிபலித்து ஆத்மாவின் உணர்வை கடன் வாங்கி உடலுக்கு கொடுத்து அதை ஜடப்பொருளிலிருந்து வேறுபடுத்திகாட்டுகிறது. உண்மையில் ஜடப்பொருள்கள் கூட தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கும் அணுகூட்டத்தின் தொகுப்புகள் என்பதை அறிவியல் நமக்கு தெளிவாக காட்டித்தருகிறது. எனவே மற்ற ஜடப்பொருள்களைப்போல உயிரினங்களின் பருவுடல்களும் தொடர்ந்து தோன்றி வளர்ந்து மாற்றமடைந்து மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அறியாமையால் நமது மனம் உயிரினங்களின் செயல்பாட்டுக்கு அகம்பாவம்தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. தன்னை அகம்பாவம் மற்றும் உடலுடன் ஒன்றுபடுத்தி வாழ்வு துன்பமயமானது என்ற முடிவுக்கு பெரும்பாலோர் வந்துள்ளனர்.

கர்த்தா என்று யாருமில்லை. உலகம் என்று ஏதுமில்லை. எவ்வித துன்பங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆனந்தமான ஆத்மா நான் என்று எப்பொழுது நமது மனதிற்கு புரிகிறதோ அப்பொழுதிலிருந்து குறைவில்லா இன்பத்துடன் நம் வாழ்வு அமையும்.

பயிற்சிக்காக :

1. மதங்கள் கூறும் ஆறு கருத்து தொகுப்புகள் யாவை?

2. வேதத்தில் கூறப்படும் மூன்று கருத்துக்களில் எது சரியானது?

சுயசிந்தனைக்காக :

1. அறிவுத்திறன் குறைவாயிருப்பவர்களுக்கு முக்திகிடைக்காதா?

2. துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகிய கருத்துக்கள் தவறா?

3. அனைத்து கருத்துக்களையும் சரி என்று அத்வைதம் ஏற்றுக்கொள்ள முடிவதற்கு காரணம் என்ன?