வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை வலியுறுத்திய பின் வேலையும் தியானமும் ஒன்றுடன் ஒன்று சேராது என்ற உண்மையை விளக்கி வேலை செய்பவர்கள் தியானம் செய்யகூடாது என்ற அறிவுரையை இந்த பாடம் தருகிறது.
வாழ்வின் அட்டவணை
பள்ளிக்கூடத்தில் எந்த பாடத்தை எப்பொழுது படிக்கவேண்டும் என்பதற்கு ஒரு அட்டவணை இருப்பது போல மனிதன் தன் நூறு வருட வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பதற்கு வேதம் ஒரு அட்டவணையை கொடுத்துள்ளது. முதல் இருபத்தி ஐந்து வருடங்கள் கல்வி கற்க வேண்டும். இரண்டாவது இருபத்தி ஐந்து வருடங்களில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டும். ஐம்பது வயதிற்கு பிறகு ஓய்வெடுத்துக்கொண்டு ஆன்மிக துறையில் நேரத்தை செலவிட வேண்டும். கடைசி இருபத்தி ஐந்து வருடங்கள் துறவு நிலையில் வாழவேண்டும்.
இருபத்தி ஐந்து வருடங்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த நான்கு கட்டங்கள் வெவ்வேறு காலங்களை எடுத்துக்கொள்ளலாம். இருபது வயதில் படித்து முடிக்கலாம். அறுபது வயதில் ஓய்வு பெறலாம். ஆனால் தற்போது நாம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.
மாணவ பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற இந்த நான்கு கட்டங்கள் மனித உடல் பிறந்து வளர்ந்து தேய்ந்து மறையும் என்ற அடிப்படையில் வகுக்கபட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும்பொழுதும் என்னென்ன செயல்களை செய்யலாம் மற்றும் எவற்றை செய்யக்கூடாது என்று வேதம் வகுத்திருக்கும் திட்டவட்டமான கட்டளைகளை நாம் பின்பற்றவேண்டும்.
வாழ்வின் நோக்கம்
வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய செயல்களை வேதம் தந்திருப்பதற்கு காரணம் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான் அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள். இதுதான் முக்தி அல்லது மோக்ஷ்ம். ஆனால் இது பெரும்பாலோருக்கு புரிவதில்லை. குறிக்கோள் என்ன என்று தெரியாவிட்டாலும் அனைவரையும் அவர்களது இந்த ஒரே குறிக்கோளை அடைய உதவி செய்யும் நோக்கத்தோடு வேதம் வாழ்வின் அட்டவணையை நான்காக பிரித்து வழங்கியிருக்கிறது.
என்ன வேலை செய்யவேண்டும் என்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வது முதல் கட்டமான மாணவ பருவத்தில் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில் பணம் சம்பாதித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதை வாழ்வின் நோக்கமாக வேதம் தருகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த முதல் இரண்டு கட்டத்தையும் வேதம் சொல்வதுபோல் செய்துவருகிறார்கள்.
எப்போழுது வாழ்வின் உண்மையான நோக்கம் இன்பமாக இருப்பது என்பது மக்களுக்கு புரிகிறதோ அப்பொழுது பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவத்தை குறைத்துகொண்டு வேதம் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்க துவங்க வேண்டும். இது வாழ்வின் மூன்றாவது கட்டம்.
குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொண்டு இரண்டாவது கட்டத்தில் வாழத்துவங்கிய பின் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முற்றிலும் நிறைவேற்றாமல் மூன்றாவது கட்டத்திற்கு செல்லக்கூடாது. பெற்ற பிள்ளைகள் முதல் கட்டத்தை முடித்து இரண்டாம் கட்டத்தில் நுழையும் தகுதி பெற்ற பின்தான் நாம் நம் பொறுப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.
உலகத்தை முற்றும் துறந்து விட்டு வேதம் படிப்பதற்காக முழுநேரத்தையும் செலவிடுவது நான்காவது கட்டம்.
வாழ்வின் ஒரே நோக்கம் முக்தி என்பதை புரிந்து அதை அடைவது எல்லோருக்கும் ஒரே பிறப்பில் சாத்தியமாகாது. வாழ்வின் அட்டவணையின் நான்கு கட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடப்பதை திரும்ப திரும்ப அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து செய்வதால் மட்டுமே முக்தியை அடைய முடியும்.
வாழ்வு என்னும் செயல் முறைக்கல்வியை தொடர்ந்து கற்று கற்ற அறிவுடன் அடுத்த பிறவிக்கு சென்று நம் பயணங்கள் தொடருகின்றன. ஒவ்வொரு முறை பிறக்கும்பொழுதும் பள்ளிக்கு சென்று அ, ஆ, இ, ஈ என்றுதான் படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோம் என்பது சென்ற பிறவிகளில் எவ்வளவு அறிவை சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை பொருத்தது. எனவேதான் ஒரு சிலர் வேதம் கூறும் உண்மைகளை எளிதில் கற்றுக்கொண்டு இந்த பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். அந்த ஒரு சிலருள் நம் பெயரும் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்ற நம்பிக்கையுடன் நாம் முயற்சி செய்தால் கூடிய விரைவில் முக்தியடைவோம்.
வாழ்வின் அட்டவணை என்பது வாழ்வின் நோக்கமான முக்தியை அடைவதற்காக வேதத்தால் வகுக்கபட்டது. முக்தியடைந்த பின் வேதம் நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நம் வாழ்வை எவ்விதத்திலும் வாழலாம். ஆனால் வாழ்வின் அட்டவணை உடலின் மாற்றத்தின் அடிப்படையில் கொடுக்கபட்டுள்ளது என்பதாலும் உடலின் மாற்றம் என்பது ஒருவர் முக்தியடைந்தவரா இல்லையா என்பதை பொருத்து மாறாது என்பதாலும் முக்தியடைந்தவர்களும் இந்த அட்டவணையை தானாக பின்பற்றுவார்கள்.
வாழ்க்கை அட்டவணையின் நான்கு கட்டங்களையும் வேதம் சொல்லும் முறைப்படி கடந்தால் வாழ்வின் நோக்கத்தை நாம் விரைவில் அடையலாம். அவ்வாறு அடைந்தபின் நமது உடல் வலிமைக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இன்பமாக கழிக்கலாம்.
உலகியல் வாழ்வும் ஆன்மிக வாழ்வும் (Material life and Spiritual life)
வாழ்க்கை அட்டவணையின் முதல் இரு கட்டங்களும் அடுத்த இருகட்டங்களுக்கு படிகட்டுகள். பொருள் சம்பாதித்து ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வது என்பது உலகியல் வாழ்வு என்றும் அது ஆன்மிக வாழ்விலிருந்து வேறானது என்றும் பரவலாக நம்பபட்டு வருகிறது. குடும்பவாழ்வின் பொறுப்புகளை சரிவர செய்ய முடியவில்லை என்பதற்காக அதை உதறிவிட்டு ஆன்மிக வாழ்க்கைக்கு செல்கிறேன் என்பது பள்ளியில் சரியாக படிக்க முடியவில்லை என்பதற்காக கல்லூரிக்கு போகிறேன் என்பதற்கு சமம்.
உலகத்தில் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளை சரிவர செய்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய நம்மால் முடியும். இது தெரியாமல் பலர் ஆன்மிக வாழ்வு என்பது குடும்ப வாழ்விலிருந்து வேறுபட்டது என்ற எண்ணத்தில் இதிலிருந்து அதற்கு தாவ முயற்சிகள் செய்கிறார்கள். தியானம் என்பது ஆன்மிக சாதனையாக கருதப்பட்டு குடும்பவாழ்வில் துன்பம் அதிகரிக்கும்பொழுது மக்கள் தியானம் செய்ய முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
முடிவுரை :
வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வேதம் விதித்த அட்டவணையின் படி நான்கு கட்டங்களையும் முறையே கடந்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த முயற்சியின் பலனாக இந்த பிறவியில் நம்மால் வேகமாக முன்னேற முடியும். ஆயினும் ஏற்றுக்கொண்ட கடமைகளை முறைப்படி முடித்தபின்தான் அடுத்த கட்டத்துக்குள் நுழைய வேண்டும். ஒரு வகுப்பில் நன்றாக படித்து தேர்வில் தேறியபின்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடிவதுபோல இல்வாழ் பருவத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய பின்தான் ஓய்வு நிலைக்கோ துறவு நிலைக்கோ செல்ல முடியும்.
துரோணரையும் பீஷ்மரையும் கொல்வதை தவிர்க்க அர்ஜுனன் காட்டுக்கு தவம் செய்ய சென்றிருந்தால் அவனால் அங்கு ஒரு சில நாட்கள் கூட தியானத்தில் அமர்ந்திருக்க முடியாது. அவன் மனம் போரில் என்ன நடந்ததோ என்ற எண்ணத்தில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் போர்க்களத்திற்கு திரும்பியிருப்பான். வாழ்வு அட்டவணை என்பது ஒரு வழிப்பாதை. ஓய்வு நிலைக்கு சென்ற பின் அல்லது துறவு நிலைக்கு சென்ற பின் மீண்டும் மாணவப்பருவத்திற்கோ இல்வாழ் பருவத்திற்கோ திரும்பமுடியாது. தொட்டில் முதல் சுடுகாடுவரை நடக்கும் வாழ்வு ஒருவழிப்பாதை என்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்து முடித்தபின்தான் அடுத்த கட்டத்தின் கடமைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
வேலை செய்து பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்தும் இரண்டாம் கட்டத்தில் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முறையே செய்து முடிக்காமல் மூன்றாம் கட்டத்தில் செய்ய வேண்டிய தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது.
பயிற்சிக்காக :
1.வாழ்வின் அட்டவணையின் உள்ள நான்கு கட்டங்கள் யாவை?
2.இந்த அட்டவணை எதன் அடிப்படையில் வேதத்தால் கொடுக்க பட்டுள்ளது?
3.இந்த அட்டவணையை கொடுக்கும் நோக்கம் என்ன?
4.முக்தி என்றால் என்ன?
5.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் ஏன் தியானம் செய்யக்கூடாது?
சுயசிந்தனைக்காக :
1.வாழ்வின் அட்டவணையை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை?
2.ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகள் யாவை?
3.அட்டவணையில் இரண்டாவது கட்டத்தில் உள்ளவர்களைத்தவிர மற்ற மூன்று கட்டங்களில் உள்ளவர்கள் தியானம் செய்யலாமா?
4. மனம் ஒருமைப்படவும் மனதை அமைதிபடுத்தவும் தியானம் செய்யக்கூடாதா?
5. மாணவப்பருவம் முடிந்ததும் இல்லறத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் துறவறம் மேற்கொள்ளலாமா?
6. உலகியல் வாழ்வு என்றும் ஆன்மிக வாழ்வு என்றும் வாழ்வை இரு பகுதிகளாக பிரிப்பது ஏன் தவறு?