நாம் அனுபவிக்கும் உலகத்தை இல்லையென்றும் நம் கண்ணுக்கு தெரியாத பரமன் மட்டும்தான் இரண்டற்ற ஒன்றாக இருக்கிறான் என்ற உண்மையையும் அறிந்து கொண்டால்தான் மனிதர்களின் இயற்கை சுபாவமான அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அடங்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.
அறியும் ஆவல்
குழந்தைப்பருவத்திலிருந்து சுற்றியுள்ள உலகத்தை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, அதன் எல்லைக்கு பின் என்ன இருக்கிறது, இது தோன்ற காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கின்றன.
இந்த அறியும் ஆவலுக்கு அடிப்படைகாரணம் நாம் அறிவுருவமாக இருப்பதுதான். எப்படி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போலவே நிரந்தரமான அமைதியுடன் இருக்க அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் நம் அனைவரிடமும் இயற்கையாகவே இருக்கிறது.
அறிவின்மையும் ஆனந்தமும்
அனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் நம் ஆனந்தத்திற்கு ஒருவகையில் தடையாய் இருப்பதுபோல் தெரிகிறது. ஒன்றும் அறியாதவர்களிடம் ஆசை அதிகமிருக்காது. அறிவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆசைகளும் அதிகரிக்கின்றன. இருப்பது போதாது, இன்னும் வேண்டும் என்ற எண்ணங்கள் நம்மை வெகு வேகமாக செயல்படவைக்கின்றன. அப்பாவிகளாக திரியும் ஒன்றும் அறியா நாடோடிகளிடம் இருக்கும் நிம்மதியும் ஆனந்தமும் அதிகம் படித்தவர்களிடம் இருப்பதாக தெரிவதில்லை.
அறிவின் அவசியம்
அறியாமை மேலானது என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால் கூட நம்மால் அறியாமையில் தொடர்ந்து இருக்க முடியாது. அறிவு என்பது நமது இயற்கையான தன்மை என்பதால் நம்மையறியாமல் தொடர்ந்து நமது அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கும். இதனால் நமது ஆசைகள் அதிகரித்து ஆனந்தத்தை அடைவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினாலும் படிப்படியாக வளரும் அறிவு விரைவில் குறையாத ஆனந்தத்தையும் நிலையான அமைதியையும் நமக்கு பெற்றுதரும். அறிவில் குறைவானவர்களின் தேவைகளும் குறைவாக இருப்பதால் அவர்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றினாலும் அவர்கள் வாழ்வு இன்பமும் துன்பமும் கொண்ட கலவையாக இருக்குமே தவிர என்றும் குறையாத ஆனந்தத்தை அவர்கள் அடையவே மாட்டார்கள். எனவே ஆரம்பத்தில் அவர்களைவிட அதிக கஷ்டப்படுவது போல் தோன்றினாலும் முடிவில் வெற்றி பெற அறிவு மிக அவசியம்.
அறிவு என்றால் என்ன?
அறியும் அறிவு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் அறிகிறோம் என்று அறியும் அறிவு மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான் அறிவை அடைவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அறிவு என்றால் என்ன என்ற ஆராய்ச்சியையும் நம்மால் செய்ய முடிகிறது.
சுற்றியுள்ள உலகத்தின் நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் எண்ணங்களாக மனதில் நுழைகின்றன. இந்த எண்ணங்களை நமக்கு உபயோகமாக இருக்கும் வகையில் முறைபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் திறன்தான் அறிவு. அதிகமாக செயல்பட்டு பல்வேறு உலக அனுபவங்களை பெறுவதன் மூலமும் மற்றவர்களின் அனுபவங்களை படிப்பதன் மூலமும் யார் அதிகமான எண்ணங்களை மனதில் சேர்த்து வாழ்வை இன்பமாக மாற்ற முயல்கிறார்களோ அவர்கள் அறிவாளிகள். அறிவு எப்பொழுதும் அறிபவனைச்சார்ந்து மட்டுமே இருக்கும். எண்ணங்கள்தான் அறிவு என்பதால் அறியாத அறிவு என்று ஒன்றும் கிடையாது.
எண்ணங்கள் என்றால் என்ன?
எண்ணங்கள் என்பவை நாம் வசிக்கும் உலகின் புகைப்படம். ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவங்களின் அடிப்படையில் எண்ணங்களை வெவ்வேறு முறையில் சேகரித்து முறைபடுத்தி அறிவாக மாற்றிவைத்துள்ளான். எனவே அறிவு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பெரும்பான்மை மக்களுடைய அறிவு சரியான அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எது சரியான அறிவு என்பது அதன் பயன்பாட்டை பொறுத்து மட்டுமே தீர்மானிக்கபட வேண்டும். வாழ்வை ஆனந்தமயமாகவும் சுகமானதாகவும் மாற்றிக்கொள்வது மட்டுமே அறிவின் பயன்.
இன்டர்நெட் போன்ற ஊடங்கங்கள் அனைத்து மனிதர்களின் எண்ணங்களை பதிவு செய்து எப்பொழுது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் அவற்றை அறிந்து கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதால் தனிமனிதன் தனக்கு வேண்டிய அறிவை பெறுவது எப்படி என்ற அளவுக்கு அறிவை அடைந்தால் மட்டும் போதுமானது. எல்லாவற்றையும் எண்ணங்களாக மாற்றி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது இல்லை.
அறிவும் ஆனந்தமும்
அறிவு அதிகமாக அதிகமாக ஆனந்தத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் அது போதவில்லை மேலும் வேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது. இந்த வேட்கை சாதாரண மக்களிடம் குறைவாக இருப்பதனால் அவர்கள் அதிக நிம்மதியுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.
அறிவை உபயோகபடுத்தி பணம் சம்பாதித்து சுற்றியிருக்கும் உலகை தன் ஆசைக்கேற்றவாறு அறிவாளி மாற்றிக்கொள்கிறான். போதும் என்ற மனம் இல்லாத ஒரே காரணத்தால்தான் மென்மேலும் அறிவை பெருக்கி பணம் சம்பாதிக்கிறான். எனவே போதும் என்ற மனம்தான் நிம்மதியை தரும் என்று கூறுவது வறட்டு உபதேசம். எது போதுமான அளவு? ஒருவேளை சாப்பிடுவதே ஆரோக்கியமாக வாழ போதுமெனினும் நாம் அதனுடன் நிறுத்திக்கொள்வதில்லை.
சிறிதளவுகூட துன்பபடாமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பதுதான் போதிய அளவு. இந்த போதிய அளவை அடையும் வரை அனைவரும் தொடர்ந்து முயன்று அறிவைபெற்று அதனால் பொருளை ஈட்டி உலகத்தில் இன்பத்தை தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இதை மாற்றவே முடியாது. போதும் என்ற மனது முக்தியடைந்த பின்தான் ஏற்படும்.
அறிவும் ஆசையும்
ஒரு பொருளை பற்றிய அறிவு வரும் வரை அதன் மேல் ஆசை ஏற்பட வாய்ப்பில்லை. ஆசை ஏற்பட்டபின் அதை நிறைவேற்ற பல நாட்கள் முயற்சி செய்து அது நிறைவேறியதும் சில மணி நேரம் இன்பமடைகிறோம். பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நான்கு வருடம் கஷ்டபட்டால் அதனால் கிடைக்கும் இன்பம் ஓரிரு மாதம் கூட நீடிப்பதில்லை. எனவே வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகம் என்று தோன்றுகிறது.
பசியோடு இருக்கும் நேரம் பசியில்லாமல் இருக்கும் நேரத்தைவிட மிகவும் குறைவு என்றாலும் அந்த நேரம்தான் மனதில் மேலோங்கி இருக்கிறது. இதற்கு காரணம் நமது எண்ணங்கள்.
நம்மிடம் இல்லாத பொருள்களை பற்றிய எண்ணம்தான் நம் மனதில் மேலோங்கி இருக்கும். இருக்கும் பொருள்களை பற்றி எண்ணுவதில்லை. உடன் இருக்கும் மனைவியை பற்றிய எண்ணத்தைவிட அடுத்தவீட்டுப்பெண் எப்பொழுது கண்ணில் தென்படுவாள் என்ற எண்ணம்தான் அடிக்கடி மனதை ஆக்ரமிக்கும். இல்லாத பொருள் மேல் ஆசைபட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றியவுடன் அதை பற்றிய எண்ணங்கள் மறைந்து விடும். காதலிக்கும்பொழுது எப்பொழுதும் இருக்கும் காதலரை பற்றிய எண்ணம் கல்யாணம் ஆனவுடன் எப்பொழுதாவது கூட வருவதில்லை. கணவர்அலுவலக வேலையாக வெளியூர் சென்றால் மட்டும் அவரை பற்றிய எண்ணங்கள் மனதில் அவ்வப்பொழுது தோன்றும். இது இயற்கை. எனவே எண்ணங்கள் நமது நிம்மதியை குலைக்கின்றன என்பது தவறான அறிவு.
இல்லாத பொருள்களை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் பிரபலமாக இருக்கும். இந்த எண்ணங்கள் அந்த பொருளை அடைய நம்மை செயல் செய்ய தூண்டும். செயல்களில் ஈடுபடும்பொழுது அந்த பொருள்களை பற்றிய எண்ணங்கள் அதிகமாகி அடங்காத ஆவலாக மாறும். நாம் ஆசை பட்ட பொருள்களை அடைய ஏதேனும் தடை ஏற்பட்டால் இந்த எண்ணங்கள் கோபமாகவோ வருத்தமாகவோ மாறும். நமது இயல்பான ஆனந்தத்திலிருந்து நாம் வெகு தூரம் சென்றுவிடுவோம்.
வெளியூர் சென்ற கணவர் திரும்பி வருவேன் என்று சொன்ன நாளில் அவரை வரவேற்க கொஞ்சம் ஆவல் இருக்கும். அன்று வராமல் ஏமாற்றம் ஏற்பட்டால் அந்த ஏக்கம் ஆவலை அதிகபடுத்தும். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்கும்பொழுது அவர் சுவாரஸ்யமில்லாமல் பதில் சொன்னால் கோபம் ஏற்படும். அவருக்கு ஏதாவது விபத்து என்று கேள்விபட்டால் அவர் உயிருடன் திரும்பினால் போதும் என கடவுளை பிரார்த்திப்போம். அவர் திரும்பி வந்தவுடன் ஏற்படும் இன்பம் ஒரு சில மணிநேரங்களில் மறைந்து விட்டு பழயபடி நம்மிடம் இல்லாத நகையை பற்றிய ஏக்கம் மீண்டும் நமது மனதில் குடியேறிவிடும். இதுபோல் தொடர்ந்து அறிவு ஆசையாகி பெரும்பான்மையான நேரம் மனதை பசியுடன் வைத்திருப்பதனால் நம் இயற்கை சொரூபமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரம் மிக குறைவாக தோன்றுகிறது. எண்ணங்களின் இந்த தன்மையை மாற்ற முடியாது.
அறிவும் ஆனந்தமும் முரண்பாடற்றவை
அறிவு – ஆசை – துன்பத்துடன் வெகு காலம் செயல் – ஆசை நிறைவேறியதால் சிறிது நேரம் ஆனந்தம் – செயல் செய்ததால் அதிக அறிவு – அதிக ஆசை. இப்படி அறிவு, ஆசை, செயல்கள்,ஆனந்தம் இவை நான்கும் தொடர் வண்டி போல் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டிருப்பதே தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை காரணம். எனவே அறிவும் ஆனந்தமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அதிக ஆனந்தத்தை தேடும் இந்த முயற்சி நாம் முக்தியடைந்த பின்னரே நிற்கும்.
முக்தி என்றால் என்ன?
என்றும் குறையாத ஆனந்தத்துடன் இருப்பதே முக்தி. ஆனால் இந்த நிலையை அடைய இனி அறிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைய வேண்டும். எல்லாவற்றையும் அறிந்து கொள்வது என்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றிய முழு அறிவு ஆகும். வேதம் இந்த அறிவை நமக்கு வழங்குகிறது.
மூன்று கேள்விகள்
பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது? காலம் என்பது தோற்றத்தின் ஒரு பகுதி. எனவே இது தவறான கேள்வி. மலடியின் மகனுடைய பெயர் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.
பிரபஞ்சத்தின் எல்லை எவ்வளவு தூரம்? அதன் அளவு என்ன? தூரம், அளவு ஆகியவை வெளி(space)ஐ குறிக்கின்றன. காலமும் வெளியும் (time and space) ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இதுவும் தோற்றத்தின் ஒரு பகுதி என்பதால் இது தவறான கேள்வி. வானத்தில் பூத்த மலரின் வண்ணம் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.
பிரபஞ்சம் எப்படி தோன்றியது? தோற்றம் மற்றும் மறைவு ஆகிய இரண்டும் மாற்றத்தின் ஒரு பகுதி. வட்டமான பாதை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.
தீர்க்கமான அறிவு இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதிலை அறிய முடியாது என்ற அறிவு நமக்கு கிடைக்கும். ஜென் மதகுரு ஒருவர் ஒரு கையை தட்டினால் ஏற்படும் ஓசை எப்படி இருக்கும் என்று கண்டுபிடுத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். பதில் கூற முயன்ற அத்தனை சீடர்களையும் அவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே பளார் என்று கன்னத்தில் அடித்தார். பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தவன் மட்டும் எந்த பதிலும் சொல்ல முயலவில்லை.
முடிவுரை :
மாறும் உலகத்தில் உள்ள பொருள்கள் மீதும் மனிதர்கள் மீதும் ஆசைகொள்வது முதல் படி. இது போன்ற உலக ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்களில் ஈடுபடுவது இரண்டாவது படி. செயல்கள் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொள்ள ஆசை படுவது மூன்றாவது படி.
பரமன் நீதான் எனும் வேதத்தின் கருத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்றால் இவ்வுலகம் மாயை என்று புரியும். ஆகவே இருப்பதுபோல் தோற்றமளிக்கும் உலகம் எப்பொழுது தோன்றியது அல்லது ஏன் தோன்றியது போன்ற கேள்விகள் அனாவசியம் என்று புரியும். மாயையை புரிந்து கொள்ள முடியாது என்பதை முறையாக பயின்று புரிந்து கொண்டால் பின் நம் அறியும் ஆவல் முற்றிலும் அகன்று விடும்.
கனவில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு இது ஏன் இப்படி நடந்தது என்று யாரும் ஆராய்ச்சி நடத்துவதில்லை. ஏதோ கனவில் அது மாதிரி நடந்தது, அவ்வளவுதான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளால் ஒரு பயனும் இல்லை. அது போலவே நாம் வாழும் உலகும் மாயை என்று அறிந்து கொண்ட பின் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எனவே இருப்பது இரண்டற்ற ஒன்றான நான் மட்டுமே. என் உடல் மனம் உள்ளிட்ட உலகம் மாறிக்கொண்டிருக்கும் மாயை. நான் மாறா பரமன். இந்த உண்மையை புரிந்து கொள்வதே நமது முடிவான ஆசையாக இருக்கவேண்டும்.
பயிற்சிக்காக :
1. அறியும் ஆவல் மனிதர்களிடம் இருப்பதற்கு காரணம் என்ன?
2. அறிவின்மையும் ஆனந்தமும் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?
3. அறிவு என்றால் என்ன?
4. எண்ணங்கள் என்றால் என்ன?
5. அறிவின் அவசியம் யாது?
6. முக்தி என்றால் என்ன?
சுயசிந்தனைக்காக :
1. பிரபஞ்சத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொள்ள முடியாது என்றால் வேதத்தை படித்து என்ன பயன்?
2.நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றால் உலகம் என் கற்பனையா?
3. முக்தியடைய அறிவு மட்டும் இருந்தால் போதுமா, கடவுள் அவசியமில்லையா?