உண்மையில் மக்களுக்கு பல்வேறு பொருள்கள் மேல் ஆசை இல்லை என்றும் அனைவரும் எப்பொழுதும் பரமன் மேல் மட்டும்தான் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்றும் வேதம் கூறும் கருத்தை தர்க்கத்தின் மூலம் இந்த பாடம் நிரூபிக்கிறது.
ஆசையின் அடிப்படை
‘உனக்கு யாரை நிறைய பிடிக்கும்? அம்மாவையா அல்லது அப்பாவையா?’ என்று கேட்டு சிறுவயது குழந்தையை பெற்றோர்கள் விளையாட்டுக்காக குழப்பத்தில் ஆழ்த்துவர். இதே கேள்வியை இப்பொழுது நமது பெற்றோர் நம்மிடம் கேட்டால் நாம் என்ன பதில் சொல்லுவோம் என்று அறிவு பூர்வமாக யோசித்தால் ஆசை பற்றிய ஒரு பெரிய குழப்பம் நம் மனதிலிருந்து நீங்கும்.
எல்லோரையும் நேசி, விரோதியையும் நண்பன் போல் கருதி அனைவர் மீதும் சமமான ஆசை கொள் என்று நடைமுறை வாழ்வில் சிறிதும் சாத்தியமில்லாத காரியங்களை செய்யச்சொல்லும் முட்டாள்தனமான அறிவுரைகளை ஒதுக்கி தள்ளிவிட்டால் நமக்கு சிலரை மிகவும் பிடிக்கும், வேறு சிலரை பிடிக்கவே பிடிக்காது என்ற உண்மையை ஒத்துக்கொள்வோம். எல்லோரையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பது ஒரு தவறான குறிக்கோள்.
நமக்கு மிகவும் பிடித்த பத்து பொருள்களை அல்லது மனிதர்களை வரிசையாக பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் ஏன் பிடித்திருக்கிறது என்று ஆராய்ந்தோமானால் எது எனக்கு அதிகம் இன்பம் தருகிறதோ அதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும். ஆசை வெறுப்பாக மாறுவதற்கு வெகு நேரம் ஆகாது. ஒருவர் நமக்கு இன்பம் தரும் ஒரே காரணத்தால்தான் அவரை நமக்கு பிடித்திருக்கிறது. எப்பொழுது அவர் நமக்கு இன்பம் தராமல் துன்பம் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ அப்பொழுதே அவர் நமக்கு பிடிக்காதவராக மாறிவிடுவார்.
நாம் எழுதிய பட்டியலில் ‘என் கணவன் அல்லது மனைவி’ என்பது முதல் இடத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் நமக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தெரிய வந்த அதே நொடியில் பிடித்தவர்கள் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கிவிடுவோம்.
எனவே நாம் ஒரு பொருள் மேல் ஆசை கொள்வது அது நமக்கு இன்பம் தருகிறது என்ற காரணத்தால் மட்டுமே. எனவே இன்பம்தான் ஆசையின் அடிப்படை. நமக்கு இன்பம் தராமல் துன்பம் தரும் ஒரு பொருளை நம்மால் நேசிக்கவே முடியாது.
என்னை பிடிக்கும்
தன்னை பற்றி உயர்வாக மற்றவர்கள் பேசுவதை கேட்க எல்லோரும் விரும்புவார்கள் என்ற உண்மையிலிருந்து எல்லோருக்கும் தன்னை பிடிக்கும் என்ற உண்மை தெளிவாகிறது.
எனக்கு பிடித்த பொருள்கள் அனைத்திலிருந்தும் எனக்கு இன்பம் கிடைக்கிறது. எனக்கு என்னை பிடிக்கும். ஆகவே என்னிலிருந்தும் எனக்கு இன்பம் கிடைக்கவேண்டும் என்ற தர்க்கத்தின் மூலம் வேதம் என் உண்மை சொரூபம் ஆனந்தம் என்று என்னை பற்றி கூறும் உண்மையை அறிந்து கொள்ள முயலலாம்.
நிபந்தனைகுட்படாத ஆசை
பொதுவாக பிடித்தவை யாவை என்று பட்டியல் எழுதும்பொழுது எனக்கு என்னை பிடிக்கும் என்பதை விட்டுவிட்டு நம்மைசுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் பொருள்களை மட்டும்தான் பலர் எழுதுவார்கள். எனக்கு என்னைப்பிடிக்கும் என்பது மட்டும்தான் நிபந்தனைக்குட்படாத ஆசை. மற்றதனைத்தும் எனக்கு இன்பத்தை தருகின்றன என்ற காரணத்தால் மட்டும்தான் அவற்றின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. அவை துன்பம் தந்தால் பட்டியலிலிருந்து நீக்கப்படும். எனவே உண்மையில் எந்த நிபந்தனையும் இல்லாமல் எனக்கு பிடித்த ஒரே நபர் நான் மட்டும்தான்.
அனைவரும் சுயநலவாதிகள்
அதே போல் நம்மையும் யாராலும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது. எல்லோரும் அவரவரின் சுயநலத்திற்காக மட்டுமே மற்றவரை நேசிக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. நான் என்னுடைய இன்பத்திற்காகத்தான் மற்றவரை நேசிக்கிறேன் என்ற உண்மையை மறுத்து கபட நாடகம் ஆடுவதுதான் தவறு.
நம்மிடம் இருக்கும் ஒன்றைத்தான் இன்னொருவருக்கு தரமுடியும். இரு பிச்சைக்காரர்கள் ஒருவரை ஒருவர் செல்வந்தர் என்று எண்ணி நட்புகொண்டால் சிறிது நாளில் உண்மை வெளியாகி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வர். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லிக்கொள்ளும் இரு காதலர்களின் நிலைமையும் இது போல் தான். தன்னிடம் இல்லாத இன்பம் மற்றவரிடமிருந்து கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு மிக விரைவில் ஏமாற்றமாக மாறி காதலை அழித்துவிடும். இன்பமாக இருக்கும் ஒருவரால்தான் மற்றவருக்கு இன்பத்தை கொடுக்க முடியும். குறையுடன் கூடிய இருவர் ஒன்றானால் குறை அதிகரிக்குமே தவிர நிறையாகாது. மற்றவர்கள் நமக்கு இன்பம் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு பிடித்த வகையில் நடந்து கொண்டு தானும் ஏமாறி மற்றவர்களையும் ஏமாற்றும் வழக்கம் அறியாமையால் தொடர்கிறது.
உலகின் மிகப்பெரிய பொய்
‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்பது ஒரு மிகப்பெரிய பொய். இது உண்மையாய் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை மிக எளிதான சோதனை மூலம் நிரூபிக்கலாம். ஏன் ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்ற காரணத்தை ஆராய்ந்தால் அவரை அவருக்காக நாம் நேசிப்பதில்லை என்றும் அவரிடம் உள்ள செல்வம், உடல் அழகு, திறமை, பேச்சுத்திறன், நாணயமான செயல்பாடு, இங்கிதம் போன்றவற்றிக்காக மட்டுமே என்று தெரியவரும்.
ஏனெனில் அவர் உண்மையில் யார் என்றே நமக்கு தெரியாது. அவரிடம் உள்ள பொருள்கள், குடும்ப பின்னணி, வெளிப்புறத்தோற்றம், குணம், பண்புகள், உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் அவரைச்சார்ந்தவை. இவை அனைத்தும் மாறக்கூடியவை. மேலும் நம் எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கின்றன. எனவே யாராலும் எவருக்கும் தொடர்ந்து இன்பம் தர முடியாது என்ற காரணத்தால் இன்று உண்மை போல் தோற்றமளிக்கும் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்ற வசனம் கூடியவிரைவில் பொய்யாகிவிடும். இதற்கு விதிவிலக்கே கிடையாது.
நான் யார்?
தன்னை யார் என்று அறிந்தவர்களால் மட்டுமே மற்றவர்களை சரியாக அறிந்து கொள்ள முடியும். ஒரு ஆசிரியரின் துணையில்லாமல் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு யாராலும் பதில் கண்டுபிடிக்க முடியாது. தன்னிடம் ஒரு நாய் இருக்கிறது என்பதால் ‘நான் ஒரு நாய்’ என்று சொல்வது போல் அனைவரும் நான் பணக்காரன், ஏழை, மருத்துவன், பொறியாளன், ஆண், பெண், மனிதன் என்று பல தவறான பதில்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சரியான பதிலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு ஆசிரியரிடம் சரணடைந்து முறையாக வேதத்தை படிக்க வேண்டும்.
ஆசிரியரின் தேவை
காதில் மாட்டியிருக்கும் மூக்குக்கண்ணாடியை தலைமேல் தள்ளிவிட்டு விட்டு அரைகுறை பார்வையுடன் அறை முழுவதும் ‘என் கண்ணாடி எங்கே’ என்று தடவி தடவி தேடிக்கொண்டிருப்பது போல்தான் யாரேனும் நமக்கு இன்பம் தருவார்களா என்று அனைவரும் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார்கள். தலை மேல் இருக்கும் மூக்கு கண்ணாடியை நம்மேல் அக்கறை கொண்ட ஒருவரின் உதவியில்லாமல் சுயமுயற்சியால் கண்டு பிடிக்கவே முடியாது. அது போல ஆனந்த மயமான பரமன் நான்தான் என்ற உண்மையை ஆசிரியர் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.
முடிவுரை :
சிறுவயது முதல் இன்று வரை நிறைய ஆசைகள் நமக்கு இருக்கின்றன. எதன் மீது ஆசை என்று கேட்டால் ஒரு பொருளின் பெயரையோ அல்லது ஒரு நபரின் பெயரையோ நாம் குறிப்பிடுவோம். ஆனால் உண்மையில் நாம் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான் நம்மிடம் இருக்கிறது.
குலோப் ஜாமூனின் மீது இருக்கும் ஆசை சக்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்தால் துக்கமாக மாறிவிடும். அலுவலகத்தில் வேலை செய்யும் நமக்கு பிடித்த நண்பர் ஒருவர், கூட இருந்தே நமக்கு குழி பறிக்கிறார் என்று தெரிந்தால் அவரை எதிரியாக கருத ஆரம்பித்துவிடுவோம்.
ஆக நாம் உண்மையில் ஆசை படுவது குறைவில்லா இன்பம்.
நமக்கு நம் மீது இருக்கும் ஆசை எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல. ஒரு திருமண விழாவில் அழகாகவும் சூட்டிகையாகவும் ஒருவரை பார்த்தால் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படும். அது போல் நமக்கு நம்மை எப்பொழுதும் பிடித்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல் எழும். திருமண விழாவில் நமக்கு தெரிந்தவர்களிடம் நமது கவனத்தை கவர்ந்த அந்த நபர் யார் என்று கேட்டு தெரிந்து கொள்வது போல் வேதங்களை படித்து தேர்ந்த ஒரு ஆசிரியரிடம் நான் யார் என்று முறையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் என்றும் ஆனந்தமயமான பரமன் என்று வேதம் சொல்வதால் நாம் எல்லோரும் எப்பொழுதும் பரமன் மீது மட்டும்தான் ஆசை கொண்டிருக்கிறோம் என்பது இப்பொழுது தெளிவாகிறது.
பயிற்சிக்காக :
1. உங்களுக்கு யாரை நிறைய பிடிக்கும்? ஏன்?
2.ஏன் எல்லோரையும் சமமாக நேசிக்க முடியாது?
3.ஆசையின் அடிப்படை என்ன?
4.எந்த நிபந்தனைக்கும் உட்படாமல் நாம் நேசிக்கும் ஒரே நபர் யார்?
5. உலகின் மிகப்பெரிய பொய் எது?
சுயசிந்தனைக்காக :
1. பரமனை அறிந்தோர்களால் கூட எல்லோரையும் சமமாக நேசிக்க முடியாதா?
2.தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் மும்தாஜை காதலிக்கவில்லையா?
3.என்னிடம் இருப்பதை என் வாழ்க்கைதுணைவருக்கு கொடுத்து எனக்கு தேவையானதை அவரிடமிருந்து பெற்று ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடன் வாழ்வது உண்மையான காதல் இல்லையா?