இரண்டற்ற ஒன்றாக இருக்கும் பரமனை நேரடியாக அறிந்து கொள்ள இயலாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பரமன் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கடவுளாக வேதம் காட்டிக்கொடுக்கிறது. கடவுள் நம்பிக்கையின் நன்மைகளை விவரித்து உண்மையான பக்தர்கள் பரம பதத்தை அடைவார்கள் என்று இந்த பாடம் விளக்குகிறது.
கடவுள் இருக்கின்றானா?
ஆம். நிச்சயம் கடவுள் இருக்கிறான். இந்த உண்மையை யார் வேண்டுமானாலும் தங்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்று கவனிப்பதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
சின்ன அம்மை அல்லது பெரிய அம்மை போன்ற நோய்கள் ஏற்படுவதன் காரணத்தை அறிந்திராத மக்கள் இவை கடவுளின் தண்டனை என்று நினைத்துக்கொண்டிருந்தனர். அறிவியல் உலகம் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு கண்ணுக்கு தெரியாத கிருமிகள்(வைரஸ்) தான் காரணம் என்று கண்டுபிடித்ததனால் நோய்களுடன் சேர்ந்து கடவுளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதே போல் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடவுளின் செயலாக கருதப்பட்ட காலம் மாறி இவையனைத்திற்கும் அறிவியல் உலகம் சரியான காரணங்களை கண்டுபிடித்துவிட்டதாக பரவலாக நம்பப்படுவதால் கடவுள் நம்பிக்கை தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது.
ஆயினும் ஏன் என்ற கேள்விக்கு ஓரிரு படிகள் வரைதான் அறிவியல் விடை கண்டுபிடித்திருக்கிறது என்பதை பலர் அறிவதில்லை. எந்த ஒரு துறையிலும் அறிய வேண்டியதனைத்தையும் அறிந்து கொண்டுவிட்டோம் என்று யாரும் இதுவரை கூறவில்லை. கூறவும் முடியாது.
ஒரு சில தொற்று நோய்களை ஒழித்து விட்டதால் நோய்கள் எதுவும் உலகில் இல்லை என்ற நிலை இன்னும் வரவில்லை. வரவும் வராது. ஒரு நோயை ஒழிப்பதற்குள் ஒன்பது புதுவகையான நோய்கள் தோன்றுகின்றன. இந்த நோய்க்கு இது காரணம் என்று மட்டும் பதில் கண்டுபிடித்து பயனில்லை. அந்த காரணத்திற்கு காரணம் என்ன என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டால் முடிவில் கடவுள் என்ற பதில்தான் கிடைக்கும்.
இதை நம் அனுபவத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம். நமது எந்த ஒரு சாதனைக்கோ சோதனைக்கோ அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கடவுள் இருக்கிறான் என்பது தெளிவாக தெரியும்.
தற்செயல் என்று நாம் நினைப்பது உண்மையில் கடவுளின் செயலே.
கடவுளின் செயல்
கடவுள்தான் அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் என்றாலும் கடவுள் தான்தோன்றித்தனமாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் செயல்களை சரியாக சீர்தூக்கி பார்த்து அதற்கேற்ற பலனை கடவுள் முறையாக அவனிடம் சேர்ப்பிக்கிறான்.
ஒருவன் மற்றவனை அடித்து காயபடுத்தினால் அடிபட்டவனின் வருத்தத்திற்கு அடித்தவன் காரணமல்ல. அவரவர்களின் கர்மபலத்தின் காரணமாக அவரவர்களுக்கு இன்பமோ துன்பமோ வந்து சேர்கிறது. அடித்தவனை ஒரு ஆயுதமாக கொண்டு அடிபட்டவனுக்கு சேரவேண்டிய துன்பத்தை கொடுத்தது ஆண்டவன்தான். அடித்தவன் தன் செயலுக்கு ஏற்ற தண்டனையை நிச்சயம் பெறுவான். ஆண்டவன்தானே அவனை தவறான செயலை செய்ய தூண்டியது, பின் அவனுக்கேன் தண்டனை என்பது தவறான கேள்வி. ஏனெனில் கடவுள் யார் கனவிலும் வந்து ‘நீ போய் அவனை அடி’ என்று உபதேசம் செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சுயசிந்தனையோடு மட்டுமே செயலாற்றுகிறார்கள். இந்த செயல்பாடுகள் மூலம் எல்லோருக்கும் வந்து சேரவேண்டிய இன்ப துன்பங்களை சரியாக கொண்டு சேர்க்கும் அளவில்லா சக்தி வாய்ந்தவன் இறைவன்.
ஒரு கொசுவை நாம் அடித்தால் அடுத்த பிறவியில் நாம் கொசுவாக பிறந்து மனிதனாக இருக்கும் அதே கொசுவால் கொல்லப்படுவோம் என்பது முற்றிலும் தவறு. கடவுள் இதுபோல் செயல்படுவதில்லை. நாம் கொசுவை கொன்ற குற்றத்திற்கு உண்டான தண்டனையை கடவுள் வேறு யார் மூலமாகவோ அல்லது தற்செயலாகவோ நம்மிடம் சேர்ப்பிப்பார்.
அனைத்தும் தொடர்புடையவை
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதுடன் உயிரற்ற ஜடப்பொருள்களும் கூட பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒருபகுதியாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
வேகமாக ஓடுபவனின் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ஓட்டத்தில் பங்கேற்பது போல பிரபஞ்சத்தின் ஓயாத இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் பங்கேற்கின்றன. ஓடுபவனை ஒரு தனி மனிதன் என்று குறிப்பிடுவது போல் தொடர்ந்து இயங்கும் இந்த பிரபஞ்சத்தை இறைவன் என்று இனங்காண வேண்டும். ஓடும் மனிதனின் உடலோ மனமோ மட்டும் ஓட்டத்திற்கு காரணமல்ல. அவனுக்கு உயிர் இருந்தால்தான் அவனால் இயங்கமுடியும். உயிர் மட்டும் இருந்தால் ஓட முடியாது. வலுவான உடலும் மனமும் ஓட்டத்திற்கு அவசியம். அது போல இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அதில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் அவற்றின் ஆதாரமான பரமன் ஆகிய இரண்டும் தேவை. இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தால் இறைவன் நம் கண்ணுக்கு தென்படுவான்.
பில்லியர்ட்ஸ் டேபிள் மேல் பந்துகள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு ஆடுபவனே காரணம். அது போல் உலகம் எனும் களத்தில் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் தொடர்ந்த இயக்கத்திற்கு கடவுள் மட்டுமே காரணம். ஒரு பந்து குழிக்குள் விழுவதற்கு காரணம் அதை மற்றோன்று தள்ளி விட்டது என்பது போன்ற ஆராய்ச்சி வீண். அனைத்து இயக்கத்திற்கும் ஒரே காரணம் கடவுள்.
இறை நம்பிக்கை
இவ்வாறு கண்ணால் காணக்கூடிய விளைவுகளிலிருந்து இறைவனின் இருப்பை அறிபவர்கள் அதிகம் இருப்பதால்தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே கடவுள் இல்லை என்று சொல்பவர்களை விட இவ்வுலகில் அதிகம். இறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பின்வரும் பலன்கள் ஏற்படுகின்றன.
1. சுமைதாங்கி: தலையில் பாரத்தை தூக்கிகொண்டு நடப்பவர்களின் சுமையை சிறிது நேரத்திற்கு சுமக்கும் பாதையோரங்களில் அமைக்கபட்ட சுமைதாங்கி போல் வாழ்க்கையின் கஷ்டங்களை கோவிலுக்குபோய் இறைவன் மேல் இறக்கி வைக்கும் வசதி கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கே சாத்தியம்.
2. நடப்பது நன்மைக்கே: இறைவன் நம் வாழ்வுக்கு பொறுப்பு என்று அறிந்தவர்கள் இது ஏன் இப்படி நடந்தது என்று நொந்து கொள்ளாமல் எல்லாம் அவன் செயல் என்று நிம்மதியுடன் வாழ்வார்கள்.
3. நன்னடத்தை: தர்மமாக வாழ்வது இன்பமாக வாழ்வதற்கு அடிப்படை தேவை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ முயல்வார்கள்.
4. மனத்திண்மை: வாழ்வில் நிகழும் இன்பதுன்பங்களுக்கு இறைவனே காரணம் என்றிருப்போர்கள் முதலில் எனக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து என்னை காப்பாற்று என்று பிரார்த்திக்க ஆரம்பித்தாலும் விரைவிலேயே எந்த துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு நீக்கும் மனத்திண்மையை கடவுளிடம் கேட்டுப்பெறுவார்கள்.
5. மனப்பக்குவம்: நான், எனது, என் உறவினர்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்து படிப்படியாக ‘உலகம் என் குடும்பம்’ என பரந்த மனப்பான்மையுடையவர்களாவர்.
ஆசை பட்டவரை அறிதல்
இறைவனை முழுதும் அறிந்து கொள்ள தேவையான மனப்பக்குவத்தை நமக்கு தருவது இறைநம்பிக்கை. கணித பாடங்களில் வரும் x ஒரு எண் அல்ல, அது ஒரு எழுத்து என்று விதண்டாவாதம் செய்யாமல் அதை எண்ணாக ஏற்றுக்கொண்டவர்களாலேயே கேள்வியின் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியும். அது போலவே இருக்கும் உலகத்தை பார்த்து இல்லாத பரமனை அறிவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
பரமன் யார், நான் யார் போன்ற கடினமான கேள்விகளை கேட்பதை விடுத்து கடவுள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள் விரைவில் மனப்பக்குவம் பெற்று கடவுள் யார் என்பதை அறிவதன் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை அறிந்து குறையாத இன்பத்தை அடைவார்கள்.
இதுபோன்ற எந்த கேள்விகளும் அனாவசியம், இருப்பது இந்த உலகம் ஒன்றுதான் என்று உலகில் உள்ள பொருள்களின் மீது மட்டும் ஆசைவைத்து உலகை அறிந்து கொள்ள மட்டும் முயன்று கொண்டிருந்தால் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற நிலை மாறவே மாறாது. ஆகவே உலகை தன் விருப்பபடி மாற்றி என்றும் இன்பமாக இருக்கலாம் என்பது இறைநம்பிக்கையில்லாதவர்களுடைய நிறைவேறா பகல் கனவாகும்.
உலக ஆசைகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு உதவி செய்யவே வேதம் கடவுளை அறிமுகபடுத்தி பல்வேறு வழிபாட்டு முறைகளை விவரித்துள்ளது. மேலும் பல பண்டிகைகளை கொண்டாட தூண்டி வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சுட்டிகாட்டுகிறது. இதுபோல் கடவுள் இருக்கிறார் என்று அடிக்கடி மக்களுக்கு நினைவு படுத்தி அவர்களுக்கு உலக வாழ்வில் இன்பமாக வாழ கடவுள் நம்பிக்கை அவசியம் என்ற உண்மையை படிப்படியாக போதிக்கிறது. தொடக்கத்தில் அவ்வப்பொழுது கடவுளிடம் உதவி பெற்று பின் கடவுளை முழுதாக அறியும் ஆசை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் ஆனந்தமாக வாழும் வழி கைகூடும்.
முடிவுரை :
பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் ஆகிய மூன்று யோகங்களை முண்டக உபநிஷத் விவரிக்கிறது. முக்தியை அடைய இந்த மூன்றுயோகங்களும் வெவ்வேறு பாதைகளை காண்பிக்கின்றன என்பது தவறான கருத்து. முக்தியை அடைய ஒரே பாதைதான். அது பக்தியோகம் மட்டும்தான். கடவுளை சரணடைந்து அனைத்து செயல்களையும் அவனுக்காகவே செய்து அவனை அறிந்து கொள்பவர்கள் முக்தியடைவார்கள் என்பதுதான் பக்தியோகம் காட்டும் பாதை.
கர்மயோகம் என்பது பக்தியோகத்தின் முதல் படி. நாம் செய்யவேண்டிய செயல்களை கடவுளுக்கு அர்ப்பணமாக செய்து நமது செயல்களின் பலனை கடவுள் கொடுக்கும் பிரசாதமாக ஏற்றுக்கொள்வதே கர்மயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் கர்மயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஞானயோகம் என்பது பக்தியோகத்தின் இறுதி படி. கர்மயோகம் செய்து மனப்பக்குவம் பெற்ற பின் குருவின் துணையுடன் வேதத்தை முறையாக படித்து கடவுள் யார் என்பதை முழுவதும் அறிந்து கொள்வது ஞானயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் நான்காவது பகுதியில் ஞானயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேதத்தின் முதல் பகுதி கர்மயோகம். வேதத்தின் இறுதிப்பகுதி (வேதாந்தம்) ஞானயோகம். ஆக முக்தி அடைய வேதம் காட்டும் பாதையின் பெயர்தான் பக்தியோகம்.
பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களின் மேல் உள்ள ஆசையை துறந்து கடவுள் மேல் ஆசை வைக்க வேண்டும் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.
பயிற்சிக்காக :
1. வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுக படுத்தும் காரணம் என்ன?
2.கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபிக்கவும்.
3.வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு யார் காரணம்?
4.இறைநம்பிக்கையால் ஏற்படும் பலன்கள் யாவை?
5.வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று யோகங்கள் யாவை?
6. அந்த மூன்று யோகங்களுக்கிடையே உள்ள தொடர்பை விளக்குக.
சுயசிந்தனைக்காக :
1. வழக்கில் இருந்து வரும் அஷ்டாங்க யோகம், ராஜயோகம், உபாசன யோகம் போன்றவை பற்றி வேதத்தில் எவ்வித குறிப்பும் இல்லையா?
2.ஆண்டாள், மீரா, துளசிதாஸ் போன்றவர்கள் முறையாக வேதம் பயிலாமலேயே முக்தியடையவில்லையா?
3.எல்லாம் கடவுள் செயல் என்றால் நாம் கர்மயோகம் செய்யவேண்டிய அவசியமென்ன?