Monday, January 10, 2011

பாடம் 131: சடங்குகளின் அவசியம் (பிரம்மசூத்திரம் 3.3.55-56)

காலை எழுந்தவுடன் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும் என்று ஆரம்பித்து வாரம் ஒரு பொழுது உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது வரை வழக்கில் இருந்து வரும் பல்வேறு சடங்குகளின் அவசியத்தை இந்த பாடம் விளக்குக்கிறது.

சடங்குகள் (rituals) என்றால் என்ன?

ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் நம் நல்லதிற்காக ஏற்படுத்தியுள்ள வழக்கம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் அனைத்துச்செயல்களும் சடங்குகள் ஆகும். சடங்குகள் நமது நல்லதிற்காக என்பது உண்மையென்றாலும் அவை எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்வதில்லை. செய்யாவிட்டால் கடவுள் தண்டனை கொடுப்பார் என்ற தவறான பயத்தினால் இனம், மதம், நாடு என்ற பேதங்களை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு  சடங்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

சடங்குகளின் அவசியம்

இது இதனால் நடக்கும் என்ற காரண காரிய அறிவை ஆதாரமாக கொண்டு மனிதன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறான். பல சமயங்களில் செயல்களின் பலன்கள் அவன் எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு சாதித்தாலும் நிரந்தரமான அமைதி மனதுக்கு கிடைப்பதில்லை. எனவே சடங்குகள் செய்வதன் மூலம் கடவுளர்களை திருப்தி செய்து தம் சொந்த முயற்சியால் அடையமுடியாத நிம்மதியான வாழ்வை அடையலாம் என்ற எண்ணம்தான் சடங்குகள் தொடர்வதற்கு காரணம்.  

சடங்குகளிடையே வேறுபாடு

உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு சடங்குகள் இருந்து வருகின்றன. கடவுளை காரணம் காட்டித்தான் சடங்குகள் தொடங்கப்பட்டிருந்தாலும் யாரும் நேரடியாக கடவுளின் செய்தியை படித்து சடங்குகள் செய்யும் விதத்தை தெரிந்து கொள்வதில்லை. வழிவழியாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அறிவுக்கு எட்டியபடி சடங்குகளை தங்கள் சந்ததியருக்கு கற்றுகொடுப்பதனால் காலம் மாறும்பொழுது தொடர்ந்து சடங்குகளும் மாறிக்கொண்டேவருகின்றன.

காரணம் தெரியாமல் செய்வதுதான் சடங்கு என்பதால் எல்லோரும் ஒரேமாதிரி அவற்றை செய்யவேண்டிய அவசியமில்லை. அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வழக்கங்களை (tradition) பின்பற்றுவதுதான் சரி. தாங்கள் செய்வதைபோல் அல்லாமல் வேறுமாதிரி செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சடங்கையும் தவறு என்று முடிவுசெய்ய முடியாது. தனக்கு சரியாக வழிகாட்ட குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் வேதத்தை படித்து புரிந்து கொண்டவர்களை அணுகி சடங்குகளை செய்யும் விதத்தை கற்று அறியலாம்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், என்ன உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், உறவுகளை எவ்விதம் வளர்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற உலக விஷயங்களில் கூட எவ்வித ஒற்றுமையுமில்லாதபோது காரணம் தெரியாமல் செய்யும் சடங்குகள் வேறுபடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பான்மை

இயந்திரங்கள் போல ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக சடங்குகளை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்ற பயபக்தியுடன் செய்பவர்கள் மட்டுமே காலப்போக்கில் சடங்குகள் செய்வதன் பலனை அடைவார்கள்.

சடங்குகளின் பலன்

அறிவியலின் அடிப்படையில் சடங்குகள் செய்வதன் பலனை ஆராய்வது மிகவும் தவறு. கோலம் போடுவதனால் கால்முட்டி மடங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது என்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரணங்களுக்காக சடங்குகளை செய்யகூடாது. காரணம் தெரிந்துவிட்டால் சடங்குகள் சடங்குகளாக இருக்காது. ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்வில் வளம்பெறவும் சடங்குகளைச்சார்ந்திருக்காமல் அறிவியலின் அடிப்படையில் முயற்சிசெய்வதுதான் புத்திசாலித்தனம்.

காரணம் தெரியாமல் கடவுளுக்காக செய்யப்படும் சடங்குகள் மட்டுமே முக்தி என்னும் சரியான பலனை மக்களுக்கு கொடுக்கும்.

இருவகை மனிதர்கள்

சடங்குகள் செய்வதன் இறுதியான காரணத்தை அறிந்து கொள்ளத்தேவையான புத்திகூர்மை உள்ளவர்கள் வேதத்தை முறைப்படி ஆசிரியரிடம் பயின்றால் ஏன் சடங்குகளை செய்யவேண்டும் என்பதற்கு பதில் தெரிந்துவிடும். கேள்விகேட்டு பதிலை புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பயபக்தியுடன் சடங்குகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் மனம் பண்பட்டு செய்த நல்ல காரியங்களின் பலனாக நல்லாசிரியரைப்பெற்று வேதத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியை அவர்களும் பெற்றுவிடுவார்கள்.

ஆக கேள்வி கேட்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் ஆகிய இருவகை மனிதர்களும் சடங்குகள் செய்வதன் இறுதிப்பலனான முக்தியை பெற்றுவிடுவார்கள். அனைத்து மக்களும் வாழ்வில் சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்வகையில்தான் வேதம் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.

சடங்குகள் சமயத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. எனவே அதற்கு உண்டான விளக்கங்களை அறிவியலின் அடிப்படையில் தேடக்கூடாது. ஒன்றா சடங்குகளை கேள்விகள் கேட்காமல் பின்பற்றவேண்டும். இல்லையெனில் வேதத்தை படித்து சடங்குகள் செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் இரு பகுதிகள் கொண்டது. வேத பூர்வம் என்கிற முதல் பாகம் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டிய சடங்குகளை விவரிக்கும் பகுதி. வேதத்தின் இரண்டாம் பகுதி உபநிஷதங்களை உள்ளடக்கிய வேதாந்தம். இது ‘முடிவான அறிவு’ அல்லது ‘அறிவின் முடிவு’ ஆகிய இருவேறு பொருள்களை கொண்டது. கேள்வி கேட்டு பதிலை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனுடைய மக்கள் படிக்கவேண்டிய பகுதி இந்த வேதாந்தம் மட்டும்தான்.

வேதாந்தத்தை படிக்காமல் இருப்பவர்கள் சடங்குகளை பின்பற்றுவது மிக அவசியம். முறைப்படி வேதாந்தத்தை ஆசிரியரிடம் பயிலுபவர்கள் எவ்வித சடங்குகளையும் செய்யாமல் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் படித்து முடித்தவுடன் சடங்குகளின் அவசியத்தை தெரிந்து கொண்டு அவர்கள் அனைத்தையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

அர்த்தமுள்ள சடங்குகள்

தர்மம் தலைகாக்கும் என்ற தொடருக்கு முடிந்தவரை யாரையும் துன்புறுத்தாமல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயல்களை செய்பவர்கள், தங்கள் புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் என்பது பொருள். மக்களை தர்மமான முறையில் வாழத்தூண்டுவதால் சடங்குகள் அர்த்தமுள்ளவை. குடும்ப வழக்கில் உள்ள அனைத்து சடங்குகளையும் முறையாக செய்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் யார் என்று காட்டிகொடுத்து முக்தியடையச்செய்ய சடங்குகள் உதவுகின்றன.

சடங்குகள் என்பது உடலினால் செய்யப்படும் உபாசனயோகம். மனதில் கடவுளின் நாமத்தையோ புகழையோ ஜெபிப்பது உபாசனயோகம். அவ்வாறு மனதில் தொடர்ந்து கடவுளை உபாசனை செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு சடங்குகள்  கடவுளிடம் பக்திசெலுத்த துணை செய்கின்றன.

இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டுப்பற்று அவசியம். நாட்டிடம் பற்றை வளர்த்துக்கொள்ள அவர்களும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துதல் என்பது போன்ற பல சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள். இப்படித்தான் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்பது போன்ற இராணுவத்தின் சடங்குகளை அவர்கள் கடைபிடிப்பதற்கு அறிவியலின் அடிப்படையில் எவ்வித காரணமும் கிடையாது. உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்று வாயளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இது போன்ற சடங்குகளை பின்பற்றி மனதில் ஆழமாக பதியவைத்துக்கொள்கிறார்கள்.

இதேபோல்தான் மனதில் கடவுள் பக்தியை வளர்த்துக்கொள்ள உடலளவில் சடங்குகள் செய்வது பலருக்கு மிக அவசியமாக இருக்கிறது. எனவே சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று நினைப்பதோ அவற்றை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதோ முட்டாள்தனம். குடியரசுதினத்தை கொண்டாடுவதை விட கடவுளின் பெயரால் வழக்கத்தில் இருந்து வரும் ஆடி அமாவாசை, தைப்பூசம், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களை கொண்டாடுவது மிக அவசியமானது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவப்பது, திருமண ஆண்டுநிறைவை நினைவுபடுத்த ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்துக்கொள்வது என்பது போன்ற சடங்குகள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவை பலபடுத்த உதவுவது போல பொங்கல், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் பின்பற்றும் சடங்குகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை பலபடுத்த உதவுகின்றன.

முடிவுரை :

எப்பொழுதும் பணம், புகழ், பதவி என்று வெளியுலகில் உழைத்துகொண்டிருக்கும் மனிதனுக்கு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவது சடங்குகள் ஆகும். சடங்குகளை செய்வதனால் வெளியுலகில் சஞ்சரிக்கும் மனது உள்நோக்கி திரும்பும். முதலில் உடலளவில் கடவுளுக்காக சடங்குகள் செய்ய ஆரம்பித்து நாளடைவில் மனதளவில் உபாசன யோகம் செய்யும் தகுதியை அடைந்து கடைசியாக வேதத்தை படித்து கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை சடங்குகளை பின்பற்றுவதன் மூலம் மனிதன் பெறுகிறான்.

எனவே முக்தியடைய முதல் படியாக சடங்குகளை பின்பற்றுவது, கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களுக்கு அவசியமாகிறது. முதல்படியை கடந்து முடிவான முக்தியை அடைந்தவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும்பொருட்டு சடங்குகளை பின்பற்றுவார்கள். எனவேதான் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னும்கூட சடங்குகள் தொடர்ந்து உலகில்  பரவலாக வழக்கில் இருந்து வருகின்றன.

பயிற்சிக்காக :

1. சடங்குகள் என்றால் என்ன?

2. சடங்குகளின் அவசியம் என்ன?

3. சரியான முறையில் சடங்குகளை பின்பற்றுவது எப்படி?

4. சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனோபாவம் என்ன?

5. சடங்குகளின் இறுதிப்பயன் என்ன?

6. இருவகை மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1. வேதத்தில் கூறியபடியல்லாமல் வேறுமாதிரி சடங்குகளை செய்வதால் பாவம் ஏற்படுமா?

2. சடங்குகளை பின்பற்றாதவர்களின் நிலை என்ன?

3. தர்மம் எவ்வாறு தலையைக்காக்கும்?

4. வேதாந்தம் என்ற சொல்லின் இருபொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

Sunday, January 9, 2011

பாடம் 130: ஆத்மா உடல் அல்ல (பிரம்மசூத்திரம் 3.3.53-54)

ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது என்ற உண்மையை உணர மனிதன் பயணிக்கும் பாதையை நான்காக பிரித்து இந்த பாடம் விளக்கம் தருகிறது.

முதல் பகுதி : சூத்திரன்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பிறக்கும்பொழுது சூத்திரர்களாகத்தான் பிறக்கிறார்கள். மனம் போனபடி செயல்படுவது, வாய்க்கு வந்ததை உளறுவது, கைக்கு கிடைத்ததையெல்லாம் வாயில் போட்டு சுவைப்பது, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தபடி வாழ்வது, எது சரி எது தவறு என்று ஆராயாமல் யார் எது சொன்னாலும் நம்பிவிடுவது, எதிர்காலத்தை பற்றி எவ்வித சிந்தனையுமின்றி தற்பொழுதைய சூழலை பொறுத்து சிரிப்பது அல்லது அழுவது போன்றவை சூத்திரர்களின் வாழ்க்கை முறை. அனைத்து குழந்தைகளும் சூத்திரர்களாகத்தான் வாழத்துவங்குவர். ஆனால் இது நல்லதல்ல. எனவேதான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்வளர்ச்சிக்கும் தாய் பொறுப்பேற்றுக்கொள்கிறாள். குழந்தையின் அறிவற்ற செயல்பாடுகள் அதை பாதிக்காமல் பேணுகிறாள். ஆபத்து தரக்கூடிய பொருள்களை குழந்தை அணுகாமல் அதை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுகிறாள். 

மனிதர்கள் இதுபோல் சூத்திரர்களாக வாழ்வதை ஒரு குறிப்பிட்ட வயது வரை வேதம் அனுமதிக்கிறது. குழந்தை வளர்ந்து தாயின் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கும்பொழுது இந்த முதல் கட்டம் முடிவடைகிறது. ஆயினும் சுயமாக சிந்தித்து செயல்படும் அளவுக்கு அதற்கு அறிவு வளர்ந்திருக்காது.  எனவே தொடர்ந்து சூத்திரனாக வாழாமல் குழந்தையை கட்டுபடுத்தும் பொறுப்பு  தந்தைக்கு மாற்றப்படுகிறது.

இரண்டாம் பிறவி: அடிமை

தாயின் பொறுப்பிலிருந்து தந்தையின் கட்டுப்பாட்டுக்கு மாற்றபட்டதும் ஏன், எதற்காக என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் சொன்னதை செய்யும் அடிமையாக இந்த இரண்டாம் கட்டத்தில் மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். மனம் போனபடி வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் விதித்துள்ள விதிகளின் அடிப்படையில் உருவான சம்பிரதாயங்களும் சமூக பழக்க வழக்கங்களும் இதுபோல்தான் உடை அணியவேண்டும், இந்த நேரத்தில் இதைத்தான் சாப்பிடவேண்டும், விளையாடுவதற்கு இவ்வளவு நேரம், படிப்பதற்கு மற்ற நேரம் என்று மனிதனின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன.

பக்கத்துவீட்டு பையனுடன் பேசக்கூடாது என்று தந்தை இட்ட கட்டளையை ஏன் என்று எதிர்த்து கேட்க பொதுவாக பெண்ணுக்கு தைரியம் இருக்காது. அப்படியே கேட்டாலும் அது அப்படித்தான் என்பதற்கு மேல் பதில் சொல்லும் திறன் தந்தைக்கு இருக்காது. இது சரியான கட்டளை என்று அறிவுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டாலும் அதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் புத்திகூர்மையும் பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்காது.

சுயமாக சிந்தித்து தமக்கு எது நல்லது எது கெட்டது என்று ஆய்ந்து அறியும் திறன் வரும் வரை இந்த இரண்டாம் கட்டத்தில் பெற்றோருக்கு அடிமையாகவே பிள்ளைகள் வளரவேண்டும். தங்களுக்கு இன்பமான வாழ்வை எப்படி அமைத்துக்கொள்வது என்பது தெரியாவிட்டாலும்கூட சமைய நம்பிக்கையுடன் வேத விதிகளை பின்பற்றும் கலாச்சாரத்தின்படி வாழ்பவர்கள் தங்களை அறியாமல் சரியான பாதையில் பயணம் செய்வார்கள். வேதம் படித்த ஆசிரியர்களை சரணடைந்து  முறையாக படித்தால் மட்டுமே தர்மமாகவும்  ஒழுக்கமாகவும் ஏன் வாழவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தெரியவரும்.

மூன்றாம் பகுதி: மாணவன்

வாலிபபருவத்தை அடைந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு அடிமையாக வாழ்வது பிடிப்பதில்லை. சுதந்திரபறவைகளாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல் வாழ தேவையான பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில் அவர்கள் கவனத்தை செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் ‘இப்பொழுது கஷ்டபட்டு நன்றாக படித்தால்தான் பின்னால் சந்தோஷமாக வாழமுடியும்’ என்று பிள்ளைகளின் விடுதலை முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.

பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்காகவே படிக்கிறார்கள். வேதத்தை படித்தால் மட்டுமே இன்பமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள முடியும். எப்பொழுதும் இன்பமாக வாழ்வதற்கு வேறு வழியேயில்லை. ஆயினும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது தெரியாத காரணத்தால் தாங்கள் செய்த அதே தவறை தங்கள் பிள்ளைகளையும் செய்யத்தூண்டி அவர்களையும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக வாழ வழிகோலுகிறார்கள்.

மனிதவாழ்வின் மூன்றாம் பகுதியான இந்த மாணவப்பகுதி மிக முக்கியமானது. பணம், புகழ், பதவி போன்றவை வாழ்வின் மிக முக்கியமான அங்கங்கள். இவற்றை சம்பாதிக்க உதவும் கல்வியை கற்று தேறுவது அனைவருக்கும் அவசியம். வேதம் படிப்பதால் பணம் கிடைக்காது. ஆனால் இன்பமாக வாழவது எப்படி என்பதை வேதத்தை படித்தால் மட்டுமே கற்றுக்கொள்ளமுடியும்.

ஏழையாக என்றும் இன்பத்துடன் வாழ்வதா அல்லது பணக்காரனாக இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கை வாழ்வதா என்று ஆலோசிக்க அவசியமில்லை. தொழில் கல்வி மற்றும் வேதபாடம் ஆகிய இரண்டையும் கற்கலாம்.

செல்வசெழிப்புடன் என்றும் இன்பமாகவாழும் வழிமுறைகளையும் கற்றுத்தேறும் வாய்ப்பு இந்த மாணவப்பருவத்தில் மனிதர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோர் பணம் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்ற தவறான அறிவுடன் தொழில் கல்வியை மட்டும் கற்று பணத்தில் மட்டும் குறியாய் இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தொடர்ந்து பெற்றோரின் சொல்படி நடக்க அவசியமில்லாததால் ‘விடுதலை விடுதலை’ என்று மனதுக்குள் முழங்கிகொண்டு பழையபடி சூத்திரர்களாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மக்களின் அறிவுத்திறனும் உழைப்புத்திறனும் ஒருவருக்கொருவர் வெகுவாக மாறுகிறது. எனவே அவரவர்களின் வாழ்க்கைதரமும் மாறுபடுகிறது. இன்றைய பொழுதை எப்படி இன்பமாக கழிப்பது என்பது கடைநிலை உழியனின் குறிக்கோளாக இருக்கிறது. மேற்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகத்தில் நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் கடைசிவரை இன்பமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுகிறார்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் தங்கள் உடலும் மனமும் மட்டும்தான் ‘நான்’ என்ற நினைவில் மனம்போனபடி வாழும் சூத்திரர்களே.

நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்பது பொருள் என்றும் அது தங்கள் உடல் மற்றும் மனதிலிருந்து வேறுபட்டது என்றும் உணர்ந்திருப்பவர்கள் மரணத்திற்கு பின் தனக்கு என்ன நேரும் என்பதிலும் கவனத்தை செலுத்துகிறார்கள். இவர்கள் மதகுருக்களை சரணடைந்து வேதத்தின் முற்பகுதியில் கூறப்பட்ட சடங்குகளை பயபக்தியுடன் செய்கிறார்கள். ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்காமல் மதகோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள் அனைவரும் அடிமைகளே.

சூத்திரர்களாக வாழ்வதைவிட இது போல் அடிமைகளாக வாழ்வது சிறந்தது. ஆயினும் சுதந்திரமில்லாமல் ஏன், எதற்காக என்று தெரியாமல் தொடர்ந்து அடிமைகளாக வாழ்வது அறிவுடையோருக்கு ஏற்புடையதல்ல.

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு. அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு. இதுதான் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் குறிக்கோள். சூத்திரர்களாக நிறையபணம் சம்பாதித்து வாழ்பவர்களால் அவ்வப்பொழுது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தவிர்க்க முடிவதில்லை. மதச்சடங்குகளை முறையாக பின்பற்றுபவர்களாக வாழ்பவர்களாலும் என்றும் இன்பமாக வாழ முடிவதில்லை.  இந்த உண்மைகளை உணர்ந்தவர்கள் தொழில்கல்வி கொடுக்கும் பணம் மட்டும் போதாது என்று முடிவெடுத்து வேதம் பயில ஆரம்பிக்கிறார்கள்.

எப்பொழுது வேதம் படித்து முடிக்கிறார்களோ அப்பொழுது இந்த மாணவப்பருவத்தை கடந்து செல்ல இவர்கள் தகுதி பெறுகிறார்கள்.

நான்காம் பகுதி: பிராமணன்

மனம் போனபடி சூத்திரனாக வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் வகுத்த சடங்குகளை அடிமையாக பின்பற்றாமல் என்றும் இன்பமாக வாழும் வழியை அறிந்து ஒழுக்கமாக வாழ்பவன் பிராமணன். நிலையில்லாத உடலும் மனதும் நான் அல்ல என்றும் நான் ஆத்மா என்றும் அறிந்து கொண்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரத்துடனுடனும் ஒழுக்க நெறியுடனும் துன்பகலப்பில்லாத இன்பவாழ்வை வாழத்துவங்குபவன் பிராமணன்.

இன்பத்தின் இருப்பிடம் எது என்று இவனுக்கு தெளிவாகத்தெரிந்திருப்பதால் சுற்றி உள்ள மனிதர்கள் அனைவரும் தவறான இடத்தில் இன்பத்தை தேடுவதால் மனம் மாறி அவர்களுடன் சேர்ந்து தேடும் அவசியம் இவனுக்கில்லை. அதே சமயம் தொடர்ந்து பணம் சம்பாதித்து தர்மமாக செல்வழித்து உல்லாசமாக வாழவும் அவன் தயங்குவதில்லை.

வேதம் கூறும் சடங்குகளை செய்யவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக இவன் அவற்றை செய்யலாம்.


முடிவுரை :

ஆத்மா உடலிலிருந்து வேறானது என்பதை உணராதவர்கள் மனம் போனபடி வாழ்வதுதான் இன்பம் என்று நினைத்து அவ்வாறு வாழ தேவையான பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் மனத்தின் தேவைகளை  இவர்களால் பூர்த்தி செய்யவே முடிவதில்லை. ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் கேளிக்கை விடுதி, போதை மருந்து, ஓரினச்சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற தவறான வழிகளில் இன்பத்தை தேடத்துவங்குவர். இதனால் இவர்களின் வாழ்வே நரகமாகிவிடும். இதுபோன்றவர்களுக்கு கடவுளைத்தொழவோ வேதத்தை கேட்கவோ தகுதியில்லை. சமூக கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நீதி நெறிகளை பின்பற்றி ஒழுக்கமாக வாழ ஆரம்பிக்கும்வரை இவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.

அறிவுத்திறன் உள்ளவர்கள், ஏன் எவ்வளவோ முயற்சி செய்தும் மனம் நிறைவடைவதில்லை என்பதை ஆராயத்துவங்குவார்கள். பணம் இன்பத்தை கொடுக்கும், உலகத்தை சீர்திருத்திவிட்டால் எல்லோரும் இன்பமாக இருக்கலாம் என்பது போன்ற தவறான கருத்துக்களுடன் சூத்திரர்களாக வாழ்பவர்களின் கவனத்தை திருப்பவே பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டும் என்று வேதம் விதித்துள்ளது. இவற்றை பின்பற்றுபவர்கள் உடல் ஆத்மா அல்ல என்பதையும் இன்பத்தின் இருப்பிடத்தையும் ஆசிரியரின் துணைபெற்று அறிந்து கொள்வார்கள். அதன் பின் இவர்கள் மனம் போனபடி சூத்திரர்களாக வாழாமல் தர்மத்தை தன் இயல்பாக கொண்டு பிராமணனாக வாழ்வார்கள்.

இவ்வாறு வாழ்பவர்களுக்கு மட்டுமே முக்தி கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. மனித வாழ்வை நான்காக வேதம் பிரித்துள்ளதின் நோக்கம் என்ன?

2. இந்த நான்கு பிரிவுகள் யாவை?

3. மதச்சடங்குகளை பின்பற்றவேண்டிய அவசியம் என்ன?

4. மாணவனாக கற்க வேண்டிய இருவகை கல்விகள் யாவை? அவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?


சுயசிந்தனைக்காக :

1. மேற்கத்திய நாட்டு மக்களில் பெரும்பாலோர் சூத்திரர்களாகவும் கீழ் நாட்டு மக்களில் பலர் மதச்சடங்குகளின் அடிமைகளாகவும் வாழ்வதன் காரணம் என்ன?

2. பிராமணனைத்தவிர வேறுயாருக்கும் முக்திகிடைக்காது என்பது உண்மையா?

3. வாலிபபருவத்தில் ஆண்களும் பெண்களும் எவ்விதகட்டுப்பாடும் இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பழகுவது ஏன் தவறு?

4. நான் ஆத்மா என்று தெரிந்துகொள்வதால் என்ன பலன்?

Friday, January 7, 2011

பாடம் 129: காயத்திரி மந்திரம் (பிரம்மசூத்திரம் 3.3.44-52)

நான்கு வேதங்களின் சாரமான காயத்திரி மந்திரத்தை ஆண், பெண், இனம், மதம் என்ற பேதமின்றி அனைவரும் ஜெபிக்கலாம் என்று கூறுவதுடன் இந்த மந்திரத்தினால் ஏற்படும் நன்மைகளையும் இந்த பாடம் விவரிக்கின்றது.

மந்திரம்

மந்திரம் என்ற சொல்லுக்கு மனதை வலுப்படுத்தும் இயந்திரம் என்று பொருள். மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து அதை பண்படுத்துவதற்கு மந்திரம் அனைவருக்கும் உதவும். அர்த்தம் புரியாமல் கூட மந்திரத்தை மனதுக்குள் ஜெபித்து மனதின் அலைபாயும் தன்மையை கட்டுப்படுத்தமுடியும். பொருள் புரிந்து மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் முக்தியை பெறலாம்.

காயத்திரி மந்திரம்

எவர் இந்த உலகை படைத்து நம்முடைய புத்தியையும் செயல்படுத்துகிறாரோ அவரிடம் எமக்கு முக்தியளிக்கும்படி பிரார்த்திக்கிறோம் என்ற பொருளுடன் கூடிய காயத்திரி மந்திரம், பக்தி யோகம் முழுவதையும் விளக்குகிறது. இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்கள் மனதூய்மை பெற்று மந்திரத்தின் முழுஅர்த்ததையும் புரிந்து கொண்டு வாழ்வின் இறுதி நோக்கமான முக்தியையும் பெறமுடியும் என்பதாலேயே இதை அனைத்து மந்திரங்களின் தாய் என வேதங்கள் புகழுகின்றன.

காயத்திரி மந்திரத்தின் ஆழ்ந்த பொருள் ‘எந்த பரமன் சச்சிதானந்த ரூபமாக இந்த உலகத்தின் படைப்பிற்கு காரணமாயிருக்கிறதோ அந்த பரமனே ஆத்மா ரூபமாக இருந்து நம் புத்தியை பிரகாசப்படுத்துகிறான்’ என்பதாகும். அதாவது ‘நான் பரமன்’ என்பதுதான் காயத்திரி மந்திரத்தின் உட்கருத்து.

மந்திரத்தின் மகிமை – 1: மனக்கட்டுப்பாடு

மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள மந்திரம் என்கிற இயந்திரத்தின் துணை மிக அவசியம். ஒரு மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தால்தான் மனதின் அலைபாயும் தன்மை நமக்கு தெரியவரும். வெளி உலகில் நடக்கும் நிகழ்வுகளை ஐந்து புலன்கள் மூலம் அறிந்து கொள்வதை போல மனதின் நிகழ்வுகளை அறிந்துகொள்ள நமக்கு துணையாய் இருப்பது மந்திரம். மந்திரம் ஜெபிக்கும்பொழுது முதன்முறையாக நமது கவனத்தை உள்நோக்கி திருப்பி எண்ணங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்வதுடன் நான் என் எண்ணங்களிலிருந்து வேறுபட்டவன்  என்றும் உணரத்துவங்குவோம்.

கயிற்றில் கட்டி நாயை நடத்தி செல்பவர் பெரும்பாலும் நாயின் தேவைகளுக்கு ஏற்ப நிற்பதும் நடப்பதுமாக இருப்பதால் உண்மையில் நாய்தான் எஜமானன். அதுபோல நமது எண்ணங்களின் போக்கில் நாம் போய்கொண்டிருக்கும்வரை நாம் நம் எண்ணங்களின் அடிமையாக இன்பத்திற்கும் துன்பத்திற்குமிடையே அலைகளிக்கபட்டுகொண்டிருப்போம். எண்ணங்களை மந்திரத்தின் மூலம் கட்டுபடுத்தினால்தான் நான் என் மனதிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்ந்து மனதின் எஜமானனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும்.

மந்திரத்தின் மகிமை – 2: மனஅமைதி

மந்திரம் ஜெபிக்கும்பொழுதுதான் எண்ணங்கள் வந்து போகும் விருந்தினர்கள் என்றும் மனதின் சொந்தக்காரன் நிரந்தரமாக இருக்கும் அமைதியென்றும் நமக்கு தெரியவரும். அமைதியை பெற விருந்தினர்களை விரட்டியடிக்க தேவையில்லை என்ற உண்மையையும் நாம் புரிந்துகொள்வோம். ஏனெனில் எந்த ஒரு எண்ணத்திற்கும் தொடர்ந்து நம் மனதில் குடியிருக்கும் சக்தியில்லை. எனவே வந்து போகும் எண்ணங்களை பொருட்படுத்தாமல் என்றும் அமைதியாக இருக்கலாம்.

கடலில் அலை ஓயாது என்பது தெரிந்தால்தான் அலைகள் வருவது போவது ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு வந்து போகும் அலைகளை அனுபவிக்க முடியும். மந்திரம் ஜெபிப்பதன் மூலம் எண்ணங்கள் அலைகள் போல வந்து போகும் தன்மை உடையன என்பதை தெரிந்து கொண்டால் எந்த ஒரு எண்ணத்தையும் வரவேற்கவோ வழியனுப்பவோ காத்திருக்காமல் தொடர்ந்து அமைதியுடன் வாழ முடியும்.

மந்திரத்தின் மகிமை – 3: மனவிசாலம்

எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் நினைவுபடுத்தாமல் அதே வேளையில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் மந்திரம் நம் குறுகிய மனதை விசாலமாக்க உதவுகிறது. என்னுடையவர்கள் என்ற வட்டம் குடும்பம், நண்பர்கள் என்ற குறுகிய பட்டியலுடன் நின்றுவிடாமல் என் ஊரைச்சேர்ந்தவர், என் நாட்டுக்காரர், என் பூமியில் வசிப்பவர், என் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என படைப்பில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பெரிதாக்கப்பட வேண்டும். இதற்கு காயத்திரி மந்திரம் போன்று இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை நினைவுறுத்தும் அனைத்து மந்திர ஜெபங்களும் உதவும்.

உண்மையில் தனிமனிதன் என்பதே நமது தவறான கற்பனை. நம் கைகள் பல வேலைகளை செய்தாலும் உண்மையில் செயல்களை செய்வது நாமென்று நமக்கு தெரிந்திருப்பதுபோல ஒவ்வொரு உயிரினங்களின் செயல்கள் உண்மையில் ஒரே கடவுளின் செயல்கள் என்று நமக்கு தெரிவதில்லை. தன் கிராமத்தை விட்டு வெளியே செல்லாதவரின் குறுகிய மனப்பான்மை உலகை சுற்றிவந்தால் விரிவடையும். விண்வெளி வீரர்கள் நிலவின் வானத்தில் ஒரு சிறு பந்து போல் சுழலும் பூமியை பார்த்தபின் அதில் கண்ணுக்கு தெரியாத துகள்களாக செயல்படும் மனிதர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக பார்க்க தொடங்கினர்.  

நான் வேறு உலகம் வேறு என்ற தவறான எண்ணம் இருக்கும் வரையில்தான் நமக்கு பிரச்சனைகள் இருக்கும். பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கமுடியாதவன் என்ற உண்மையை மந்திர ஜெபத்தின் மூலம் பழகி மனதை விசாலமாக்கிகொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும்.

மந்திரத்தின் மகிமை – 4: மனஒழுக்கம்

எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற அறிவு நம்மிடமிருந்தாலும் பழக்கத்தின் காரணமாக அண்டை வீட்டுக்காரரை அவதூறு செய்யாமல் இருக்கமுடிவதில்லை. தவறு செய்துவிட்டு இப்படி செய்திருக்க கூடாது என்று நம்மை நாம் கண்டித்துக்கொள்வதற்கு பதிலாக நல்லொழுக்கம் தரும் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். அன்பு, தயை, இன்சொல், கருணை, திருப்தி, உதவிசெய்தல், தூய்மை போன்ற நல்லொழுக்கங்களில் எது நம்மிடம் குறைவாக இருக்கிறதோ அதை அதிகப்படுத்தும் வகையில் மந்திரத்தை தேர்ந்தெடுத்து தியானம் செய்து பழகவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எனவே மந்திரஜெபத்தின் மூலம் மனதை அழகுபடுத்தினால் அந்த அழகை நம்மை சுற்றியுள்ளவர்கள் உணர துவங்கி வாழ்வு இனிதாகும். நாமும் உலகை சரியான பார்வையில் பார்ப்போம்.

மந்திரத்தின் மகிமை – 5: மனபக்குவம்

நமது பிரச்சனைகளை தீர்க்க மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதற்கு பதில் மந்திரஜெபம் மூலம் நம் மனதை மாற்றிக்கொண்டால் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் சிறிதுகாலம் தியானம் செய்து பழகியபின் நமக்கு தெரியவரும். இந்த மனப்பக்குவம் இருந்தால்தான் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்ற காயத்திரி மந்திரத்தின் உட்கருத்தை புரிந்து கொண்டு முக்தியை அடைய முடியும்.

மந்திரத்தின் மகிமை – 6: முக்தி

மந்திரம் ஜெபிப்பதால் மட்டும் முக்திகிடைத்துவிடாது. முறையாக ஆசிரியரிடம் பயின்று நான் பரமன் என்ற காயத்திரி மந்திரத்தின் உட்பொருளை அறிந்து கொண்டபின்தான் முக்தி கிடைக்கும். ஆனால் கிடைத்த முக்தியின் பலனான நிரந்தர இன்பத்துடன் வாழ நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற வேண்டும். இதற்கு காயத்திரி மந்திர ஜெபம் மிகவும் உதவி செய்யும்.     

முடிவுரை :

மந்திரம் நம் மனதை பண்படுத்தும் இயந்திரம். மந்திரத்தை ஜெபித்து மனதை பண்படுத்தாதவர்களுடைய மனம், பாக்கு மரம் ஏறி பழம் பறிப்பவர்கள் மரத்தை வளைத்து ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு தாவுவது போல தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் ஒரு தவறு செய்துவிட்டால் வேலை பறிபோய் விடுவது போலவும், வாடகை கொடுக்காததால் வீட்டை காலிசெய்து தெருவில் நிற்பதுபோலவும், தெரிந்தவர்கள் எல்லோரும் நம்மை எள்ளி நகையாடுவது போலவும் நடக்காததையெல்லாம் கற்பனை செய்து இவையெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டால் ஏற்படும் துன்பத்தை தவறு செய்த பத்து நிமிடத்திற்குள் நம்மை நம் மனம் அனுபவிக்கசெய்துவிடும்.

தென்னை மரம் ஏறுபவர்கள் அடுத்த மரத்தில் ஏறுவதற்கு முன் தரையில் இறங்க வேண்டும். அதுபோல மந்திரஜெபம் ஒரு எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு செல்வதற்குமுன் நமது இயல்பான அமைதியில் சில நொடிகள் இருக்க பழக்கப்படுத்துகின்றன. எனவே வேண்டாத கற்பனைகளை தவிர்த்து ஆக வேண்டிய காரியத்தில் கவனத்தை செலுத்த மந்திர ஜெபம் நமக்கு உதவும். எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நான் என்றும் அமைதியானவன் என்ற உண்மையை தெரிந்து கொள்ள ஜெபம் நமக்கு உதவும்.

பயிற்சிக்காக :

1. மந்திரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

2. காயத்திரி மந்திரத்தின் பொருள் என்ன?

3. மந்திரம் ஜெபிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. தயானந்த சரஸ்வதி அவர்கள் ஜெபம் பற்றி எழுதிய கருத்துக்களை (BMW thinking, listless thinking, noodle thinking, peanut thinking, monkey thinking) படிக்கவும் (Two Talks on Japa Mantra Meditation)

2. மந்திரம் ஜெபிப்பதால் மட்டும் முக்தியடைந்துவிட முடியுமா?

3. முக்தியடைந்தபின் மந்திரம் ஜெபிப்பது அவசியமா?

4. மரமேராமல் மந்திரத்தினால் மாங்காயை பறிக்க முடியுமா?

Wednesday, January 5, 2011

பாடம் 128: மந்திர ஜபம் (பிரம்மசூத்திரம் 3.3.43)

நம் மனதில் தோன்றும் எண்ணங்களை உபாசனயோகத்தின் மூலம் எப்படி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை இந்த பாடம் விவரிக்கிறது.

எண்ணங்களின் பொறுப்பற்ற செயல்

ஐந்து புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள்தான்  எண்ணங்களாகும். பணம் கொடுக்காமல் ஒருவன் நம்மை புகழ்ந்தால் நாம் இன்பமடைகிறோம். அடிக்காமல் வெறுமே வாய்வார்த்தையாக முட்டாள் என்று திட்டினால் நாம் வருத்தமடைகிறோம். உண்மையிலேயே நாம் முட்டாளாக இருந்தால் வருத்தபட்டு பயனில்லை. அறிவாளியாக இருந்தால் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் நம் எண்ணங்கள் முறைப்படி  கட்டுப்படுத்தபடாமல் பக்குவமற்று இருப்பதால் இதுபோன்ற வசவு வார்த்தைகள் நமக்கு துன்பத்தை தருகின்றன.

நம் துன்பத்திற்கு யார் காரணம்?

உடலை அடித்து நம்மை துன்புறுத்தும் சக்தி அனைவருக்கும் உள்ளது. ஆனால் மனதளவில் நாம் துன்பமடைந்தால் அதற்கு காரணமான ஒரே ஆள் நாம் மட்டும்தான். நம்மைத்தவிர வேறு யாராலும் அல்லது எந்த பொருளாலும் நமக்கு துன்பத்தை தரவே முடியாது. கத்தியால் குத்தப்பட்டால் ரத்தம் வரும். வார்த்தைகளுக்கு அதுபோல நம் மனதை துளைக்கும் சக்தி கிடையாது. மற்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து நம்மை நாமே துன்புறுத்திக்கொண்டு பழியை அவர்கள் மீது போடுகிறோம். நம் மன வருத்தத்திற்கு நாம் மட்டும்தான் காரணம் என்பதை உணர்ந்தால்தான் மற்றவர்களை மாற்ற முயலுவதற்கு பதில் நம் மனதை மாற்ற முற்படுவோம்.

மற்றவர் நம்மை முட்டாள் என்றால் அதை கேட்டு வருத்தபடுகிறோமா இல்லையா என்பது நாம் நம் எண்ணங்களை எந்த அளவு கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்துள்ளது.
 
சலனமான மனதுள்ளவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் புதிய ஆடையை பார்த்து தெரிவில் போகும் யாரோ ஒருவர் முகம் சுளித்துவிட்டால் பத்து நாட்கள் தொடர்ந்து அழுவார்கள். திடமான நெஞ்சுடைய பகத்சிங் போன்றவர்கள் சிறையில் பல மாதங்கள் தொடர்ந்து பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும் கலக்கமடையாமல் தெளிவான உறுதியுடன் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழக்கமிட்டுகொண்டிருப்பார்கள்.

எனவே துன்பங்களிலிருந்து முற்றிலுமாக மீளுவதற்கு உபாசனயோகம் மூலம் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம்.

எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு முன் எண்ணங்களை பற்றிய ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

எண்ணங்கள் தாமாக நம் மனதில் தோன்றுகின்றன. இது தெரியாமல் நாம்தான் எண்ணங்களை உருவாக்குகிறோம் என்று நினைத்துகொண்டு இருக்கிறோம். ‘நான் இப்பொழுது என் அலுவலக பிரச்சனையை பற்றி ஆலோசனை செய்யப் போகிறேன்’ என்று நாம் தீர்மானித்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் பற்றிய எண்ணங்கள் நம் மனதை ஆக்ரமிப்பதை நம்மால் தடை செய்ய முடிவதில்லை.

சுற்றுப்புற சூழ்நிலைகளும் நாம் தொடர்ந்து செய்யும் செயல்களும்தான் நம் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை தீர்மானிக்கின்றன. எனவே நம் மனம் பெரும்பாலும் இவ்விரண்டின் கைதியாகவே இருக்கிறது.

நாம் என்ன எண்ணங்களை எண்ண வேண்டும் என்று நம்மால் நேரடையாக கட்டுப்படுத்த முடியாதென்பதால்தான் பலர் ‘இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்று இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டிருக்கிறார்கள்.

உபாசனயோகத்தை முறையாக பயின்று எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தால் இருக்கும் ஒரு மனதை செம்மையாக்கி என்றும் இன்பமுடன் வாழலாம்.

உபாசனயோகத்தின் மூலம் எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

கன்றுக்குட்டி இங்குமங்கும் கட்டுப்பாடில்லாமல் ஓடுவதை ஒரேயடியாக தடுத்து அதை ஓரிடத்தில் நிறுத்திவைக்க முடியாது. அதுபோல உலகெங்கும் சுற்றித்திரியும் மனதை ஒருமுறை தியானம் செய்வதால் கட்டிப்போட்டுவிட முடியாது.

ஒரு நீளமான கயிறினால் கட்டி மனம்போனபடி எல்லா இடங்களையும் சுற்றிவந்த கன்றுகுட்டியை முதலில் ஒரு பெரிய வட்டத்துக்குள் அடைக்கலாம். பின் தொடர்ந்து கயிற்றின் நீளத்தை சுருக்கி கடைசியில் அதை ஓரிடத்தில் நிற்கவைத்து பழக்கிவிடலாம். அதுபோல மனதை படிப்படியாகத்தான் கட்டுப்படுத்த முடியும்.

இஷ்டதெய்வம், எல்லாம் வல்ல இறைவன் அல்லது எங்கும் நிறை பரப்பிரம்மன் போன்றவற்றை பொருளாக கொண்டு செய்யப்படும் தியானம் உபாசனயோகம் ஆகும். பொதுவாக கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டமில்லாதவர்களால் எடுத்தவுடன் உபாசன யோகம் செய்ய முடியாது. எனவே பழக்கப்பட்ட துறைகளில் சிறிதுகாலம் தியானம் செய்து பயின்றபின் மனதை கடவுள்மேல் திருப்புவது எளிதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கி தினமும் தியானம் செய்து பயிலவேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்தில் தொடங்கி படிப்படியாக தியானம் செய்யும் நேரத்தை இருபது நிமிடம் வரை  அதிகரிக்க வேண்டும். பின்வரும் நான்கு படிகள் தியானபயிற்சியை எளிதாக்கும்.

முதல் படி: விரும்பிய பொருளின் மேல் தியானம்

உலகில் நமக்கு பிடித்த நபர் அல்லது பொருளை பற்றி நினைப்பது கடினமான செயல் அல்ல. ஆனால் அதைத்தவிர வேறு எதன்மீதும் எண்ணம் செல்லாமல் பார்த்துக்கொள்வது அவ்வளவு எளிது அல்ல. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு சமீபத்தில் பார்த்த திரைப்படத்தை பற்றி மட்டும் நினைத்துக்கொண்டிருப்பேன் என்று தீர்மானம் செய்துவிட்டு தியானத்தில் அமரவேண்டும். மனதில் ஏற்படும் எண்ணங்களின் ஓட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் நம் எண்ணங்கள் திரைப்படத்தை விட்டு வெளியே வந்து நடிகையின் நிஜவாழ்வில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடலாம். எப்பொழுது இது நமக்கு தெரிகிறதோ அந்தக்கணமே மனதை திரைப்படத்துக்குள் திரும்ப அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

மனதை தேர்ந்தெடுத்த பொருளைபற்றி மட்டும் சிந்திக்க பயிற்றுவிக்க வேண்டும் என்பது இந்த படியின் நோக்கம் என்றாலும் உண்மையில் நம் எண்ணங்களின் போக்கை கண்காணிக்க நம்மை பயிற்றுவிப்பதே இந்த பயிற்சியின் உள்நோக்கம். நம் மனதில் எண்ண ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஆரம்பத்தில் நாம் உணர்ந்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு எண்ண ஓட்டத்தில் ஐக்கியமாகி அதன்போக்கில் நாம் போக ஆரம்பித்துவிடுவோம்.

சுழலும் இராட்டினத்தில் எத்தனை இருக்கைகள் இருக்கின்றன என்பதை எண்ண ஆரம்பித்தவன் மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருக்கும் அழகியைபார்த்ததும் எண்ணிக்கையை மறந்து அவளுடன் மனதார பயணிக்க ஆரம்பித்துவிடுவதை போல நம் வீட்டு தோட்டத்தை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சிறிது நேரத்தில் மறந்துவிட்டு பக்கத்துவீட்டுக்காரனுடன் நேற்று நடந்த சண்டையை மனதினுள் தொடர ஆரம்பித்து விடுவோம்.   

இரண்டாம்படி: குறிப்பிட்ட வேலை மேல் தியானம்

எப்பொழுது ஒரு ஐந்து நிமிடமாவது தொடர்ந்து முதல்படியில் விளக்கப்பட்ட தியானத்தை நம்மால் செய்யமுடிகிறதோ அப்பொழுது நாம் செய்யவேண்டிய ஏதேனும் ஒரு வேலையை எப்படி செய்வது என்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கலாம். உதாரணமாக மனதிற்குள் கோவில்கட்டுவது அல்லது ஒரு திருமணத்தை நடத்த திட்டமிடுவது போன்ற ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு செய்து பழகவேண்டும். இதைத்தவிர வேறு எண்ணங்கள் ஏற்படுவது குறைந்தபின் அடுத்த படிக்கு செல்லலாம்.

மூன்றாம்படி: உபாசனயோகம் (இஷ்டதெய்வம்)

கந்த புராணம், சிவபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற நூல்களை படிப்பதன் மூலமோ உபன்யாசங்களை கேட்பதன் மூலமோ தொடர்ந்து கடவுளை பற்றிய சிந்தனைகளை மனதில் நிலைத்துவைக்க பயிலவேண்டும். நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் மனதில் ஊறும்வரை இந்த படியில் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

நான்காம்படி: உபாசனயோகம் (மந்திரம்)

அனேக எண்ணங்கள் நம் மனதில் அலைமோதுவது போல் தோன்றினாலும் உண்மையில் ஒரு கணத்தில் ஒரு எண்ணம் மட்டும்தான் நம் மனதில் இருக்கும். அந்த எண்ணம் சென்றபின்தான் அடுத்த எண்ணம் தோன்றும். முதல் எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கும். அல்லது வெளியுலகத்திலிருந்து நாம் பெறும் செய்திகள் அடுத்த எண்ணம் உதிப்பதற்கு காரணமாய் அமையும். எப்படியிருந்தாலும் நம் மனதில் தோன்றும் அடுத்த எண்ணம் என்ன என்பதையோ அல்லது பத்து நிமிடங்களுக்கு பிறகு நம் மனதில் என்ன எண்ணம் இருக்கும் என்பதையோ நம்மால் பொதுவாக தீர்மானிக்கமுடியாது. இந்த நிலையை மாற்றி எனது அடுத்த எண்ணம் மட்டுமில்லாமல் பத்தாவது இருபதாவது அல்லது நூறாவது எண்ணம் என்னவென்று என்னால் தீர்மானிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது மந்திர ஜபம். ஓம் நமோ நாராயணா அல்லது ஓம் நமசிவாய என்ற ஒரு மந்திரத்தை திரும்பதிரும்ப ஜபிப்பதன் மூலம் கட்டுபாடற்ற மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவரலாம். பத்து நிமிடங்களுக்கு பிறகும் இந்த மந்திரத்தை பற்றித்தான் நான் நினைத்துக்கொண்டிருப்பேன் என்ற தீர்மானம் செய்து பின் அதன் போல் செய்வதால் மனம் நம் விருப்பபடி நடக்கத்துவங்கும்.

மந்திரம் ஜெபித்து பழக பழக மனம் நம் கட்டுக்குள் வரும். நாளடைவில் நம்மை துன்புறுத்தும் சக்தியை நம் மனம் இழந்து விடும்.  

மன அமைதி

இரண்டு மந்திரங்களுக்கு நடுவே எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனம் அமைதியாக இருப்பதை இவ்வித தியானம் செய்யஆரம்பித்த சில நாட்களில் உணரத்துவங்குவோம். மன அமைதி என்பது நமது இயற்கை சுபாவம். இடைவிடாமல் காலை முதல் இரவு வரை வெவ்வேறு செயல்கள் செய்வதன்மூலம் மனதில் நிறைய எண்ணங்களை சுமந்து தொல்லைபட்டுவிட்டு அமைதியை தேடி மேலும் செயல்களில் ஈடுபடுகிறோம். ஓசையை எழுப்ப நாம் ஏதாவது செய்யவேண்டும். அமைதியை ஏற்படுத்த நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. அதுபோல அமைதியான மனதைப்பெற நாம் சும்மா இருந்தால் போதும் என்ற உண்மை தியானம் செய்து பழகியபின் நமக்கு தெரியவரும்.

தியானம் செய்யாத காலங்களிலும் மனதினுள் தொடர்ந்து இருக்கும் அமைதியை அனுபவிக்கத்தொடங்கிவிட்டோமானால் வாழ்வே ஒரு தொடர் தியானமாகிவிடும். அதன்பின் தனியாக தியானம் செய்ய நேரம் ஒதுக்க அவசியமில்லை.

முடிவுரை :

உலகம் என் துன்பத்திற்கு காரணம் என்ற எண்ணம் இருக்கும்வரை உபாசனயோகம் மூலம் மனதை செம்மையாக்க முடியாது. உலகின் நிகழ்வுகள் நம் எண்ணங்களாக மாறியபின்தான் அவற்றால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மையை அறிந்து கொண்டால் மந்திரம் ஜெபித்து மனதை செம்மைபடுத்தும் உபாசனயோகத்தை படிப்படியாக பயின்று நிரந்தர அமைதியை பெறலாம். அவ்வாறில்லாமல் கடவுள் நம் துன்பங்களை அகற்றுவார் என்ற நம்பிக்கையில் கடவுள் பெயரை ஜெபித்தால் தியானம் செய்யும்பொழுது மட்டும் மனதில் அமைதியிருப்பதுபோல் தோன்றும். தியானம் செய்து முடித்தபின் பழையபடி நம் மனது சோகத்தில் மூழ்கும்.

கடவுளை பற்றிய தியானம், வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் தரும் அனஸ்தீஷியா அல்ல. ஆயினும் பெரும்பாலான மக்கள் தங்கள் துன்பத்தை தற்காலிகமாக மறக்க கடவுள் பெயரை ஜெபித்துவிட்டு கண் திறந்தவுடன் துன்பம் மறைந்துவிடவேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை இறைவன் முன் வைக்கிறார்கள். இது நிறைவேறாதபோது அந்த கடவுளை கைவிட்டுவிட்டு வேறு கடவுளை உபாசிக்க தொடங்குவார்கள். இது போன்ற மனிதர்களின் தேடல் என்றும் தொடரும்.

உபாசனயோகம் உலகத்தை மாற்ற பயன்படும் ஒரு கருவியல்ல என்பதை புரிந்து கொள்வதுதான் சரியான பாதையில் எடுத்துவைக்கும் முதல் அடி. அது மனதை செம்மை செய்து உலகில் ஏற்படும் நிகழ்வுகளை சரியான மனப்பக்குவத்துடன் அணுகி வாழ்வில் துன்பத்தை முற்றிலும் தவிர்த்து இன்பமாக வாழ வழிவகுக்கும் சாதனம் என்பதை அறிந்து மேற்குறிப்பிட்ட படிகளில் பயணித்து பயிற்சி செய்தால் முக்தியடைவது நிச்சயம்.

பயிற்சிக்காக :

1. உபாசன யோகத்தின் நோக்கம் என்ன?.

2. நம் துன்பங்களுக்கு யார் காரணம்?

3. நம் மனதில் தோன்றும் எண்ணங்களை எந்த இரண்டு தீர்மானிக்கின்றன ?

4. உபாசனயோகத்தில் தேர்ச்சி பெற கொடுக்கப்பட்ட நான்கு படிகள் யாவை?

5. மன அமைதியை பெற நாம் என்ன செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நம் எண்ணங்களுக்கு உலகை மாற்றும் சக்தியிருக்கிறதா? (Power of positive thinking, Alpha Mind Power போன்றவை உண்மையா?)

2. கடவுளை பிரார்த்திப்பதன் மூலம் நமது துன்பங்களை போக்க முடியாதா?


Tuesday, January 4, 2011

பாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)

பரமனுடன் ஒன்றி முக்தி பெற விழையும் மக்களுக்கு வழிகாட்ட வழக்கில் இருந்துவரும் பல்வேறு யோகங்களை ஒப்பிட்டு விளக்குவதுடன் உபாசனயோகத்தின் அறிமுகத்தையும் இந்த பாடம் செய்கிறது.

கிரியாயோகம்: புலன்களை கட்டுப்படுத்துதல், வேதத்தை படித்தல், கடவுளிடம் சரணடைதல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கிய கிரியாயோகம் ஆன்மீக பாதையில் பயணத்தை ஆரம்பிக்க உதவும் முதல் படிகட்டு என்று பதஞ்சலியின் யோகசூத்திர விளக்கத்தில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

கர்மயோகம்: மனம், மொழி, மெய்யால் செயல்களை செய்து பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை பக்குவபடுத்திக்கொள்ள உதவுவது கர்மயோகம்.

ஞானயோகம்: முறைப்படி வேதாந்தத்தை பயின்று, கற்றதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெளிவுற்று, பெற்ற ஞானத்தில் நிலைபெறுவது ஞானயோகம்.

பக்தியோகம்: கர்மயோகம் செய்த பின் ஞானயோகம் செய்து முக்தியடையும் முழுப்பாதையையும் குறிப்பது பக்தியோகம். பக்தியோகம் இறைவனை துதிக்கும் சடங்குகளில் தொடங்கி பரமனை முழுதாக அறிந்து கொள்வதில் முடிவடையும்.

அஷ்டாங்கயோகம் அல்லது ராஜயோகம்: வேதத்தின் சாரமான பக்தியோகத்தை கோர்வையாகவும் எட்டுஅங்கங்களாக முறைப்படுத்தியும் யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார்.   ஹதயோகம், மந்திரயோகம், தந்திரயோகம், பூர்ணயோகம், காயகல்பயோகம், குண்டலினியோகம் ஆகிய அனைத்தும் இந்த அஷ்டாங்க யோகத்தின் வெவ்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற்கால ஆசிரியர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.

உபாசனயோகம்: கர்மயோகத்தின் ஒருபகுதியான உபாசனயோகம், மனதால் மனதை பண்படுத்த செய்யும் செயல்களை மட்டும் உள்ளடக்கியது. போல் வால்ட் என்ற உயரம் தாண்டும் போட்டியில் இலக்கை நோக்கி ஓடுவது கர்மயோகம். இலக்கை நெருங்கும்பொழுது கோலை ஊன்ற வேண்டிய இடத்தில் மனதை குவிப்பது உபாசனயோகம். கோலை உபயோகித்து தரையிலிருந்து உயரே எழும்புவது ஞானயோகம். கோலையும் விட்டுவிட்டு இலக்கை கடப்பதுபோல் அனைத்து யோகங்களையும் கடந்து பரமனுடன் ஒன்றாவது முக்தி.   

கடவுள்பக்தி உபாசன யோகத்தின் அடிப்படை. பிறவிச்சுழலில் அகப்பட்டு உலகத்தின் இன்பதுன்பங்களில் அலைக்களிக்கப்படும் மானிடர்களுக்கு கடவுள் ஒரு பாய்மரக்கப்பல். அதில் ஏறி அமர்ந்துகொண்டாலும் கடலின் சீற்றத்திலிருந்து முழுதும் தப்ப கப்பலை சரியாக செலுத்தி வீடுபேறை அடையவேண்டும். கடவுளிடம் நம்பிக்கைகொள்வது கப்பலில் ஏறி அமர்வது போல. கடவுளை தெரிந்து கொள்வது கப்பலை செலுத்தி வீடு திரும்புவதற்கு ஒப்பாகும்.

பெரும்பாலான மக்கள் கடவுளை நம்புவதோடு தங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் உபாசன யோகம் செய்தால் மட்டும் முக்தியடைந்துவிடமுடியாது.

முக்தியடையும் வழி

செயல்கள் செய்து மனதை பக்குவபடுத்திக்கொண்டபின் பரமனை அறிந்து ‘நான் பரமன்’ என்ற ஞானத்தில் நிலைபெறுவது முக்தி. எவ்வித செயல்களும் செய்யாமல் ஞானம் பெறுவது அசாத்யம்.  எனவே முதலில் செயல்கள் செய்து பின் ஞானம் பெற்று அதில் நிலைபெறுவதுதான் முக்தியடைய மக்களுக்கு இருக்கும் ஒரேவழி. எந்த யோகத்தை பின்பற்றினாலும் மனபக்குவம் பெறுவது ஞானம் பெறுவது ஆகிய இரு படிகளை கடந்தால் மட்டுமே முக்தியடைய முடியும்.

உபாசன யோகத்தின் பங்கு

நமது ஆளுமை (personality), நடத்தை மற்றும் செயல்கள் ஆகியவை நம் மனதில் இருக்கும் எண்ணங்களை சார்ந்து இருக்கின்றன. ஒருவன் கோழையா அல்லது வீரனா என்பதை உடல் வலிமையை பொறுத்து முடிவுசெய்வதில்லை. அதே போல் நடப்பவை நல்லவையா தீயவையா என்பதை வெளியுலகம் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவரவர் மனதில் உள்ள எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

எனவே எண்ணங்களை தூய்மையாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்பது அவசியம். சரியான உணவும் திட்டமான உடற்பயிற்சியும் எப்படி உடலை பாதுகாக்க அவசியமோ அதுபோல நம் மன வலிமையை பாதுகாக்க கடவுளை பற்றிய எண்ணம் அவசியம். எப்பொழுதும் புலன்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கவனம் சென்றுகொண்டிருந்தால் மனம் ஆசை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களின் இருப்பிடமாகத்தான் இருக்கும்.

வெளியுலக தேடல்களை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்து கடவுள் பற்றிய சிந்தனைகளை வளர்த்து மனதை சுத்தீகரிக்கும் முயற்சிதான் உபாசனயோகம். நாம் என்ன செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்துதான் நம் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. சதா சர்வகாலமும் காதலருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசிக்கொண்டிருந்தால் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் அவரைபற்றியதாகவே இருக்கும். உலகில் தம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் கூட மனதில் பதியாது. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லகூட தெரியாது. இதற்கு பதில் இரண்டு வாரங்கள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உண்பது உறங்குவது தவிர மற்ற நேரங்கள் முழுவதையும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றை கேட்பதில் மட்டும் செலவிட்டால் மனதில்  கடவுள் பற்றிய எண்ணங்களை நிறைந்திருக்க செய்யலாம்.

உலக வாழ்க்கையில் பற்று இருக்கும்வரை நம்மால் உபாசனயோகத்தில் ஈடுபடமுடியாது. வாழ்வில் அடிபட்டு எப்பொழுது நமக்கு புத்திவருகிறதோ அப்பொழுதுதான் கடவுளை தொழவேண்டும் என்ற எண்ணம் வரும். கடவுள்தான் நம் வாழ்வை இன்பகரமாக மாற்ற வல்லவர் என்ற அறிவு மட்டும் நம் எண்ணங்களை மாற்றிவிடாது. உபாசன யோகம் என்ற பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் மனதை பக்குவபடுத்தமுடியும்.

உபாசனயோகத்தின் அடிப்படை தேவைகள்

தேவை 1: உலகத்தின் இயலாமை:- உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதராலோ அல்லது பொருளாலோ நமக்கு நீடித்த இன்பத்தை தர இயலாது என்பதை புரிந்திருக்க வேண்டும்.

தேவை 2: இறைவனின் மகிமை:- எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதன் மூலம் எதையும் தாங்கும் இதயத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

தேவை 3: உபாசன யோகத்தில் நாட்டம்:- எதற்காக உபாசன யோகம் செய்ய வேண்டும் என்றும் உபாசன யோகம் செய்வதில் ஈடுபாடும் இருக்க வேண்டும்.

தேவை 4: வாழ்க்கை முறையில் சீர்திருத்தம்:- இல்வாழ் பருவத்திலிருந்து விடுபட்டு ஓய்வு நிலைக்கு செல்லும் நிலையில்தான் உபாசனையில் மனம் ஈடுபடும்.

உபாசன யோகத்தின் வகைகள்

வகை 1: இறைவனின் நாமத்தை ஜபிப்பது

வகை 2: செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணமாக செய்வது

வகை 3: இறைவனின் புகழை உபன்யாசர்கள் சொல்ல கேட்பது

வகை 4: வேத பாராயணம் செய்தல் மற்றும் புராணங்களை படித்தல்

முடிவுரை :

எண்ணங்களின் தரம்தான் வாழ்க்கையின் தரத்தை நிச்சயிக்கின்றன. மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை நம்மால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அண்டங்காக்கையை பற்றி நினைக்காதே என்று மருத்துவர் சொன்னால் அதை நிச்சயமாக யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் மனதில் ஏற்படும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதில் நமக்கு முழுசுதந்திரம் உள்ளது. சரியான செயல்களை மட்டும் செய்வதன் மூலம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்.

உபாசன யோகம் செய்வதன் மூலம் கடவுளைபற்றிய தியானத்தில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்தி அதனால் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை சுத்திகரித்துக்கொள்ளலாம். உலகவாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளினால் தொடர்ந்து அலைபாயும் மனதை உபாசனயோகத்தால் சீர் செய்து பரமனைபற்றிய ஞானத்தை பெற தயார் செய்துகொள்ளவேண்டும்.

யோகம் என்ற சொல்லுக்கு ஒன்றாவது என்பது பொருள். உண்மையில் பரமனுடன் ஒன்றாவது என்பது ஒரு செயல் அல்ல. நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் ‘நான் பரமன்’ என்ற உண்மை மாறாது. இந்த உண்மையை புரிந்து கொள்ள மனபக்குவமும் வேதத்தை முறையாக ஆசிரியரின் துணையுடன் படித்து தெளிதலும் அவசியம். இந்த இரு செயல்கள்தான் வெவ்வேறு யோகங்களாக வழக்கில் போதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைக்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட யோகத்தை தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்றபின் கடைசியாக ஞான யோகத்திற்கு முன்னேறி பின் முக்தியடைய வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனதை ஒருமுகபடுத்தவேண்டிய அவசியம் ஏற்படுவதால் முக்தியடைய முயலும் அனைவருக்கும் உபாசனயோகம் மிக உதவியாக இருக்கும்.

பயிற்சிக்காக :

1. இந்த பாடத்தில் குறிப்பிடபட்ட யோகங்களின் பெயர்களை பட்டியலிடுக.

2. முக்தியடைய நாம் செய்யவேண்டிய யோகங்களை வரிசைபடுத்துக.

3. உபாசன யோகம் என்றால் என்ன?

4. உபாசன யோகம் செய்ய அடிப்படைத்தேவைகள் என்னென்ன?

5. உபாசன யோகத்தின் வகைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஏதாவது ஒரு யோகத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைய முடியுமா?

2.உபாசன யோகம் செய்யாமல் முக்தியடைய முடியாதா?

3. உபாசன யோகம் செய்வது எப்படி?