Monday, December 20, 2010

பாடம் 120: பரமனை அடைய தியானம் (பிரம்மசூத்திரம் 3.3.33)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று “ஓ கார்கி!, பரமனை உணர்ந்த பிராமணர்கள் இந்த நித்தியமானதை நீளமானதுமல்ல குட்டையானதுமல்ல என்று குறிப்பிடுகிறார்கள்” என்கிறது. பிடிபடமுடியாத, அறிந்துகொள்ள முடியாத அதற்கு ஜாதியும் கிடையாது, குடும்பமும் கிடையாது என்று முண்டக உபநிஷதம் கூறுகிறது. இந்த மந்திரங்களின் விளக்கமாக பரமனை அடைய தியானத்தின் பங்கு என்ன என்ற கருத்தை இந்த பாடம் விவரிக்கிறது.

பரமனுக்கு ஜாதிகிடையாது

சூத்திரனும் பரமனே. ஆகவே பரமனை அடைவது என்பதற்கு பரமன் அல்லாதவைகளை நீக்கி பரமனை அறிந்து கொள்வது என்று பொருள். அதனாலேயே பரமனை அறிந்தவர்கள் பரமனாகவே ஆகிவிடுவார்கள் என்று வேதம் கூறுகிறது. சூத்திரனாய் இருப்பவனுக்கு தான் பரமன் என்பது புரியாது. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவை தனிமனிதனின் அறியும் திறனை தீர்மானிக்கிறது. படிப்படியாக வேதம் கூறும் பாதையில் பயணித்து பரமனை அறிந்து கொள்ள தடையாய் இருக்கும் சக்தி மற்றும் ஜட தனிமங்களின் ஆதிக்கத்தை குறைத்து பிராமணனாய் மாறி பரமனை அடைய வேண்டும்.

பரமனுக்கு குடும்பம் கிடையாது

மாணவப்பருவத்தில் பரமனை அறிந்து கொள்ளாமல் இல்வாழ்வை துவங்கியவர்களுக்கு ‘எதனுடனும் சம்பந்தபடாமல் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன் நீ’ என்ற கருத்தை வேதம் கூறுகிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ள முதலில் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற்று பிறகு தியானம் செய்வதன் மூலம் மனஒருமைப்பாட்டை அடைய வேண்டும்.

வேதம் வகுத்த வழி

இருப்பதை சரியாக உபயோகபடுத்தினால்தான் இல்லாததை பெறமுடியும். எனவே மூன்று தனிமங்களின் இருப்பிற்கு ஏற்றாற்போல் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் தன்மைகேற்றபடி செய்யவேண்டிய செயல்களையும் அவற்றை செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பாங்கையும் (Attitude) வேதம் இங்கு தருகிறது.

சூத்திரர்கள்: இவர்கள் தாங்களாக முயன்று எந்த வேலையையும் செய்யாவிட்டாலும் மற்றவர்களின் தூண்டுதலின் பெயரில் வேலைகள் செய்வார்கள். அவ்வாறு செய்யும்பொழுது இவர்களுக்கு ‘நான் இதை செய்கிறேன்’ என்ற எண்ணமோ இதனால் எனக்கு என்ன நன்மை என்ற ஆராயும் தன்மையோ இருக்காது. இவர்களின் எதிர்பார்ப்பு குறைவாய் இருப்பதால் இறைவன் படியளந்தது இவ்வளவுதான் என்று கிடைப்பதை ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் வறுமையை பற்றியும் வாழ்வின் மற்ற துன்பங்கள் பற்றியும் இவர்கள் அவ்வளவாக புகார் செய்யமாட்டார்கள்.

பல்வேறு பூஜைகளையும், சடங்குகளையும் செய்யவேண்டும் என்கிற சம்பிரதாய பழக்க வழக்கங்கள்  மூலமாக வேதம் இவர்களை அதிக வேலை செய்ய தூண்டுகிறது. பணம் நிறைய பெற்று செல்வசெழிப்புடன் வாழ இவர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி அதை அடைய கடவுளுக்கு படைக்க வேண்டிய பொருள்கள் என ஒரு பெரிய பட்டியலை வேதம் கொடுக்கிறது.  கடவுளுக்கு படைப்பதை பிரசாதமாக பெற்று பழக பழக இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்படுகிறது. வேதத்தின் கட்டளையை ஏற்று அதன் படி நடக்கும் சூத்திரர்கள் அதிகமாக உழைக்க ஆரம்பித்து அதன் விளைவாக அதிக அறிவையும் வேலை செய்யும் திறனையும் பெற்று கூடிய விரைவில் வைசியனாகிவிடுவார்கள்.

வைசியர்கள்: இவர்களுக்கு ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எண்ணங்களின் தாக்கம் மிக அதிகம். எனவே இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைக்கும்பொழுது ‘நான் இந்த பயனுக்காக வேலை செய்கிறேன்’ என்று செய்த வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்று கணக்கு பார்த்து வேலை செய்வார்கள். செய்த வேலையிலும் கிடைக்கும் பலனிலும் எப்பொழுதும் இவர்களுக்கு திருப்தி ஏற்படாத காரணத்தால் தங்களுக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை இவர்கள் உணர ஆரம்பிப்பார்கள். எனவே இவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு தர்ம சிந்தனையுடன் சமூகநல தொண்டுகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.

சுயநலத்தை விட பொதுநலம் கருதி இவர்கள் உழைக்க ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் சத்திரியர்களாகிவிடுவார்கள்.

சத்திரியர்கள்: நாட்டின் முன்னேற்றத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் பாடுபடும் இவர்கள் எவ்வளவுதான் தன்னலமின்றி உழைத்தாலும் தங்கள் உழைப்பு கடலில் கரைத்த பெருங்காயத்தைப்போல் பலனின்றி போவதை பார்க்கும் அதே நேரத்தில் உலகம் தன்னைதானே சரிபடுத்திக்கொண்டு ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் எழுந்து முன்னேறுவதை பார்த்து ‘நான் எதையும் செய்பவன் அல்ல. அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை’ என்ற உண்மையை உணரத்துவங்குவார்கள். அதன் பின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வேதத்தை பயில ஆரம்பிக்கும்பொழுது இவர்கள் பிராமணர்களாக மாறுவார்கள். வேலை செய்வது மனதை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் என்ற மனப்பாங்குடன் இவர்கள் பலனை எதிர்பார்க்காமல் தங்கள் முழுத்திறமையை கொடுத்து கர்மயோகமாக அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

பிராமணர்கள்: மனத்தூய்மை அடைந்தபின் பரமனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் தகுந்த ஆசிரியரின் துணையை நாடி தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான வேலையாக இவர்கள் வேதத்தை படிப்பார்கள். தன் எண்ணம், வாக்கு, செயல் ஆகிய மூன்றையும் பரமரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவன்றி வேறு எதற்கும் உபயோகபடுத்தமாட்டேன் என்று உறுதிபூணுவதற்காக உபநயனம் என்கிற சடங்கில் பூணூலில் மூன்று முடிச்சிட்டு உடலை கட்டிக்கொள்வார்கள. இந்த தீவிரத்துடன் வேதத்தை படிப்பவர்கள் நிச்சயம் பரமனை வெகு விரைவில் அறிந்து கொள்வார்கள்.

ஞானிகள்:  பரமனை அறிந்து கொண்டபின் வேதம் இவர்களை கட்டுப்படுத்தாது. இவர்களது உடல் தொடர்ந்து மூன்று தனிமங்களின் தாக்கத்தில் செயல்பட்டாலும் இவர்களது அறிவின் தரத்தால் தோன்றும் எண்ணங்களும் செய்யும் செயல்களும் கடவுளின் ஆணைப்படியே அமைந்திருக்கும். சிற்பியின் கையில் இருக்கும் உளியைப்போல கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி உலகை செதுக்க இவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள்.

ஜெகசிற்பி

வெறும் கல்லை யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் கற்சிலை கடவுளாக வழிபடபடுகிறது. கல்லிலிருந்து சிலையை உருவாக்க புதிதாக எந்த பொருளையும் சேர்க்கவேண்டியதில்லை. சிலையல்லாத பகுதியாக தெரிபவைகளை கல்லிலிருந்து நீக்குவதால் கல்லில் ஒளிந்துள்ள சிலை வெளிப்படுகிறது.

சாதாரண மனிதனை பரமனாக மாற்ற புதிய பொருள் எதையும் சேர்க்க வேண்டியதில்லை.  பரமனை அடையாளம் கண்டுகொள்ள ஜெகசிற்பியான இறைவன் படிப்படியாக மனிதனை செதுக்கும் செயல் தொடர்ந்து பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை :

மனிதனை பரமனாக மாற்ற மூன்று கட்டங்களை வேதம் வகுத்துள்ளது.

முதல் கட்டம்: கர்ம யோகம்

இன்பத்தையும் துன்பத்தையும் உலகம் நமக்கு தருகிறது என்ற அறியாமை இருக்கும் வரை மனிதன் உலகத்தை மாற்ற முயன்றுகொண்டிருப்பான். கர்மயோகம் செய்வதன் மூலம் இந்த அறியாமை நீங்கி மனிதன் மனப்பக்குவம் பெறுவான்.

இரண்டாம் கட்டம்: தியானம்(உபாசன யோகம், ராஜயோகம், அஷ்டாங்க யோகம்)

உடலாலும் வாக்காலும் செய்யவேண்டிய செயல்களை கர்மயோகமாக செய்தபின் மனிதன் தியானம் செய்ய தயாராகிறான். தியானம் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பரமனை பற்றிய ஞானத்தை பெற மனிதனை தயார் செய்கிறது.

மூன்றாம் கட்டம்: ஞான யோகம்

கர்மயோகம் மற்றும் தியானம் ஆகிய இரு செயல்களையும் முறையாக செய்தபின் தகுந்த ஆசிரியரிடம் சரணடைந்து வேதம் படிப்பதன் மூலம் பரமனை அறிந்து பரமனாகவே மனிதன் கடைசியில் மாறிவிடுகிறான்.

பிரம்ம சூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் இதுவரை கர்மயோகம் பற்றியும் கர்மயோகத்தை சரியாக செய்யத்தேவையான அடிப்படை வசதிகளும் விளக்கபட்டன. இனி இந்த பகுதியில் எஞ்சியுள்ள பாடங்கள் தியானம் செய்வது எப்படி என்றும் தியானம் செய்வதற்கான அடிப்படை தேவைகள் பற்றிய விவரங்களையும் தருகின்றன.   

பயிற்சிக்காக :

1.  பரமனுக்கு ஜாதியில்லை என்ற கருத்தை விளக்குக.

2. பரமனுக்கு குடும்பம் இல்லை என்ற கருத்தை விளக்குக.

3. சமுதாயத்தின் நான்கு பிரிவினர் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

4. செயல்களை செய்யும்பொழுது அவர்களுக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு என்ன?

5. மனிதனை பரமனாக மாற்ற வேதம் வகுத்த மூன்று கட்டங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜெகசிற்பி, ஞானிகள், மக்கள் இந்த மூவருக்கும் உள்ள உறவு என்ன?

2. உபாசனயோகம் கர்மயோகத்தில் அடங்குமா?

3. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல எதற்காக இறைவன் மக்களை முதலில் அறியாமையுடன் படைத்து பின் படிப்படியாக அவர்களுக்கு அறிவை கொடுத்து பரமனாக மாற்ற முயல வேண்டும் ?

4. கர்மயோகத்தை செய்யத்தேவையான அடிப்படை வசதிகள் (infrastructure) என இந்தப்பாடத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டவை யாவை?

Thursday, December 16, 2010

பாடம் 119: இறைவனின் அவதாரம் (பிரம்மசூத்திரம் 3.3.32)

முக்தியடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்பது பொதுவான உண்மையென்றாலும் கடவுளின் பிரதிநிதியாக அவர்கள் இந்த பூமியில் அவ்வப்பொழுது அவதரிப்பது உண்டு என்று வேதம் கூறும் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

அவதாரம் என்பது யார்?

ஒருவர் வேறொருவராக தோன்றுவதை அவதாரம் என்றால் மறுபிறவியில் வேறு ஒரு உடலில் தோன்றும் அனைத்து உயிரினங்களையும் அவதாரம் என்று அழைக்க நேரிடும். மனித உருவில் வரும் கடவுள் என்ற பொருள் கூட நம் அனைவருக்கும் பொருந்தும். முக்தியடைந்தபின் மீண்டும் மனிதனாக பிறப்பவர்கள் மட்டுமே அவதாரம் என்ற பெயருக்கு தகுதியானவர்கள்.

பொதுவாக ‘நான் பரமன்’ என்ற அறிவுடன் யாரும் பிறப்பதில்லை. இந்த உலகில் இன்பத்தை தேடி வைசியன், சத்திரியன், பிராமணன் என்று படிப்படியாக உயர்ந்து கடைசியில் வேதம் படித்தபின்தான் ‘நான் பரமன்’ என்கிற  ஞானம் கிடைக்கிறது. இந்த ஞானத்தை பெற்றவர்களுக்கு பொதுவாக மறுபிறவி கிடையாது. ஆனால் வெகு அபூர்வமாக கடவுளின் காரியங்களை பூமியில் நடத்திகொடுக்க இவர்களில் ஒரு சிலர் மறுபிறவி எடுப்பதுண்டு. பிறக்கும்பொழுதே ‘நான் பரமன்’ என்ற அறிவுடன்  இவர்கள் பிறப்பதால் இவர்களை அவதாரம் என்று அழைக்கிறோம்.

ஒரே சமயத்தில் பல அவதாரங்கள் இந்த பூமியில் நடமாடலாம். இந்த பரந்த உலகின் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேசங்களில் உள்ள மக்களை சரியான வழியில் நடத்த பல அவதாரங்கள் தோன்றிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அனைவரையும் வேதம் கூறிய பாதைக்கு திருப்புவதுதான் இவர்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அவதாரத்தின் அவசியம்

எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் அதிகமாகிறதோ அப்பொழுது தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியுள்ளான். கடவுள் நம்பிக்கை குறைவாக இருப்பதே அதர்மம் அதிகமாவதற்கு முக்கிய காரணம். எனவே மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வளர்த்து உலகில் தர்மத்தை தழைத்தோங்கசெய்ய அவதாரங்கள் தேவைப்படுகிறார்கள்.

அவதாரங்களும் கடவுளின் தூதர்களும்

உலகத்தின் போக்கை மாற்றியமைக்க அவதாரங்கள் சாதாரணமாக தேவைப்படுவதில்லை. வேதத்தை தங்கள் தவவலிமையால் கேட்டு வழங்கிய முனிவர்கள், பத்து கட்டளைகளை கடவுளிடமிருந்து பெற்ற மோஸஸ், அல்லாவின் அருள்வாக்கான குரானை வழங்கிய முகம்மது போன்றவர்கள் மூலம் கடவுள் தன் உபதேசங்களை மனிதர்களுக்கு தருவது வழக்கம். மேலும் இந்த உபதேசங்களை சரியாக புரிந்து கொண்டு ஞானத்தை பெற்ற பலர் கடவுளின் தூதர்களாக செயல்பட்டு மக்களை நல்வழியில் நடத்திச்செல்லலாம். ஆனால் கடவுளின் செய்தியை புரிந்து கொள்வதற்கோ ஞானிகளின் உபதேசங்களை கேட்கும் அளவிற்கோ அனைத்து மக்களுக்கும் அறிவுத்திறன் இருப்பதில்லை.

பெரும்பான்மையான மக்களை கவர்ந்து ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்தும் சக்தி அவதாரங்களுக்கு மட்டுமே இருப்பதால் ஒரு சில ஞானிகள் அவதாரமாக பிறந்து கடவுளின் பெருமையை நிலைநாட்டுகிறார்கள்.

உதாரணமாக புத்தர், திருவள்ளுவர், விவேகானந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகள் வெவ்வேறு காலகட்டங்களில்  மக்களை நல்வழிபடுத்த தங்கள் வாழ்வை அர்பணித்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீ கிருஷ்ணன், ஏசுநாதர், சாய் பாபா போன்று அதிசயங்கள் செய்து காட்டும் திறமையுள்ள  அவதாரங்களின் தேவையும் அவ்வப்பொழுது ஏற்படுகிறது. கடவுள் யார் என்பதை ஞானிகளின் போதனைகள் மூலம் அறிந்து கொள்வதைவிட கடவுள் இருக்கிறார் என்பதை அவதாரங்களின் மகிமைகளை பார்த்து நம்புவதையே பலரும் விரும்புகிறார்கள்.

அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

பார்வைக்கு சாதாரண மனிதர்களை போல் தோன்றும் அவதாரங்கள் தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள பொதுவாக செய்யும் செயல்கள்:

1.     பிறப்பில் சிறப்பு: பிறப்பைபற்றிய ரகசியம் இவர்களது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருத்தல், அசாதாராண முறையில் கர்ப்பம் தரித்தல், பிறந்தவுடன் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றுவது போன்ற தெய்வீக செயல்கள் நடத்தல் போன்றவை அவதாரங்களின் வருகையை நமக்கு சுட்டிகாட்டும் குறியீடுகள்.

2.     விளையும் பயிர் முளையிலே தெரியும்: அவதாரங்களின் சிறுவயதில் அவர்களை அறியாமல் பல அற்புத செயல்களை நடத்தியிருப்பார்கள்.

3.     பயிற்சியின்றி சாதனை புரிதல்: முறையான பயிற்சி எதுவும் செய்யாமல் மற்றவர்களால் செய்யமுடியாத பல காரியங்களை இவர்கள் சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.

4.     குருவின்றி ஞானம்: யாரிடமும் சீடனாக சேர்ந்து வேதத்தை பயிலாமல் அதில் உள்ள உண்மைகளை தெளிவாக இவர்கள் அறிந்திருப்பார்கள். வேதத்தை முறைப்படி படித்து முக்தியடைந்த பலர் பெற்ற அதே ஞானத்தை இவர்கள் எவ்வித பிரயத்தனமும் இல்லாமல் பெற்றிருப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் திறனும் கொண்டிருப்பார்கள்.

5.     அதிசயங்கள்: மக்களின் கஷ்டங்களை அமானுஷ்ய முறையில் தீர்த்து வைப்பது, குணபடுத்தமுடியாது என்று வைத்தியர்களால் முடிவுசெய்யப்பட்ட வியாதிகளை குணபடுத்துவது, இறந்தவர்களை மீண்டும் உயிர்பிப்பது போன்ற பல அதிசயங்களை இவர்கள் நிகழ்த்தும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

வேதத்தின் ஆழ்ந்த மெய்ப்பொருளை உணர்ந்து அதன் வழியில் மக்களை நடத்திச்செல்வது அவதாரங்களின் மிக முக்கிய கடமை.

அவதாரங்களின் மேல் நம்பிக்கை

ஒருவர் உண்மையிலேயே கடவுளின் அவதாரமா இல்லையா என்பதை பற்றிய விவாதம் அவசியமில்லாதது. உதாரணமாக ஏசுநாதரை கடவுளின் அவதாரமாக ஒரு சிலர் நினைத்தபொழுது பலர் அதை மறுத்து அவரை சிலுவையில் அறைந்தனர். இன்றுவரை ஏசுவை அவதாரம் என்று நம்புபவர்கள் ஒரு புறமும் நம்பாதவர்கள் மறுபுறமும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.  

அவதாரத்தின் மகிமை மக்களின் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டது. ஏசுநாதரை நம்புபவர்களுக்கு அவர் அவதாரம். இதுவும் கடவுள் நம்பிக்கையை போன்றதுதான். கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி யாராலும் நிரூபிக்க முடியாதோ அதேபோல் கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியாது. எனவே ஒருவரை அவதாரம் என்று நம்புவதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவையில்லை.  அதேபோல் மற்றவர்களது நம்பிக்கையை குலைக்க முயல்வதும் தேவையற்றது.

அறியும் திறன் உள்ளவர்களும் இல்லாதவர்களும்

கடவுள் இருக்கிறாரா இல்லையா, அவர் இருந்தால் எங்கே இருக்கிறார், அவர் எப்படியிருப்பார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறியும் திறன் உள்ளவர்களுக்கு அவதாரங்களால் எவ்வித பயனும் இல்லை. ஒருவர் அவதாரமா இல்லையா என்பதை ஆராய வேண்டிய அவசியமோ ஆர்வமோ இவர்களுக்கு கிடையாது. ஏனெனில் தேவைபட்டால் இவர்களுக்கு வழிகாட்ட முக்தியடைந்த ஞானிகள் நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள்.

இத்தகைய அறிவுத்திறன் இல்லாதவர்களுக்கு ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை மேலும் வலுபடுத்திக்கொள்ள அவதாரங்களின் வருகை அவசியம். ‘கடவுள் இல்லை’ என்பவர்களின் வாழ்வில் ஒரு சில அற்புதங்கள் நிகழ்த்த பட்டால் அவர்களும் அவதாரங்களின் மூலம் கடவுளை தொழ ஆரம்பித்துவிடுவார்கள்.

அவதாரங்களின் இரு மகிமைகள்

அற்புதங்களை நிகழ்த்தும் திறன் மற்றும் பூரண ஞானம் ஆகிய இரு மகிமைகள் பொதுவாக அனைத்து அவதாரங்களுக்கும் இருக்கும். இவ்விரண்டில் பூரண ஞானம்தான்  அவதாரத்தின் அடிப்படை தகுதி. வேதம் கூறும் உண்மைகளை பூரணமாக அறியாதவர்கள் அவதாரங்கள் அல்ல. அற்புதங்களை நிகழ்த்தும் திறன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் பொதுமக்கள் அற்புதங்கள் நிகழ்த்தாதவர்களை அவதாரங்கள் என ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய இருவரும் அவதாரங்கள் என்றாலும் எவ்வித அதிசயங்களும் நிகழ்த்தாமல் சாதாரண மனிதன் போல் வாழ்ந்த ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை மட்டுமே அவதாரம் என்று மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் அவதாரங்களின் பூரண ஞானம் சாதாரண மக்களின் அறிவுக்கு பிடிபடுவதில்லை என்பதால் அவர்கள் அற்புதத்தை மட்டுமே நாடுகிறார்கள். உதாரணமாக ஏசுநாதர் தினமும் உபதேசங்கள் நடத்தினார். துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னார். ஆனால் அங்கு கூடிய கூட்டம் அவர் எப்பொழுது பேசி முடிப்பார் என்று காத்திருந்து பின் அவர் அருகில் சென்று தங்கள் குறைகளை நிவர்த்திக்க ஆசீர்வாதம் வாங்குவதையே முக்கியமாக கருதினர். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவரை நாடி அதை உடனடியாக தீர்ப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம், வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் என்றும் இன்பமாய் வாழ அவர் கூறிய அறிவுரைகளை புரிந்துகொள்வதில் இல்லை.

ஒருவேளை ஏசுநாதர் அற்புதங்கள் மூலம் மக்களின் குறைகளை நிவர்த்திக்காமல் உபதேசங்களை மட்டும் செய்திருந்தாரேயானால் அவரை மக்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் சாக்கிரடீஸ் பிளேட்டோ என்பது போன்ற தத்துவவாதிகளின் வரிசையில் சேர்த்திருப்பார்கள்.

மனிதர்களின் வளர்ச்சி

அனைத்து உயிரினங்களும் கடவுளின் அவதாரங்கள்தான். ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் ‘நான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிபட்டவன்’ என்ற தன்னுணர்வு (self-awareness) உள்ளது. அனைத்து மனிதர்களுக்கும் தன்னுணர்வு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு நான் யார் என்ற சரியான தன்னறிவு (self-knowledge) இருப்பதில்லை. மனப்பக்குவமும் அறிவுத்திறனும் உள்ளவர்கள் ஆசிரியரின் துணையுடன் வேதத்தை படித்து இந்த தன்னறிவை பெற்று முக்தியடைவார்கள். அனைத்து உயிரினங்களும் தொடர்ந்து பிறவிகளெடுத்து மனிதனாக அவதரித்து முடிவில் ஞானத்தைபெற்று முக்தியடைவார்கள். முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் கடவுளின் ஆணைப்படி மீண்டும் பிறந்து மற்றவர்களின் வளர்ச்சிக்கு துணை செய்வார்கள்.

சாதாரண மனிதர்களும் அவதாரங்களும்

அவதாரங்கள் பாவ புண்ணியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றவர்கள். எனவே பொதுமக்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்க பிறப்பதுபோல் அவதாரங்கள் பிறப்பதில்லை.

அனைத்து மக்களுக்கும் குறையாத இன்பத்தை அடைவதுதான் வாழ்வின் இறுதி குறிக்கோள். இந்த குறிக்கோளை அவதாரங்கள் தங்கள் சென்ற பிறவியிலேயே அடைந்து விட்டாதால் இந்த பிறப்பில் இவர்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது.

ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களினால்தான் அவதாரங்களின் உடலும் செய்யபட்டிருக்கும் என்பது உண்மையானாலும் இவர்கள் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட மாட்டார்கள்.

முடிவுரை :

ஆண்டவனின் அருள்கட்டளையை நிறைவேற்ற முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் மரணத்திற்கு பின் மீண்டும் அவதாரங்களாக பிறந்து உபதேசங்கள் மூலமும் அற்புதங்கள் மூலமும் பொதுமக்களை ஆன்மீக பாதையில் வழிநடத்துகிறார்கள்.

பகுத்தறிவாளர்கள் தங்கள் அறிவை அவதாரங்களின் அற்புதங்களை ஏமாற்று வேலை என்று நிரூபிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து அவதாரங்களின் உபதேசங்களை ஆராய பயன்படுத்த வேண்டும். அவதாரங்களின் அடியார்களை முட்டாள்கள் என்பதை நிரூபிக்க தங்கள் அறிவை செலவிடுவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. மேலும் அற்புதங்களை மறுப்பதன் மூலம் கடவுளின் மேலும் வேதத்தின் மேலும் நம்பிக்கை குறைவதால் இவர்கள் முக்தியடையும் வாய்ப்பு குறைகிறது. எனவே இவர்களது அறிவு இவர்களுக்கு இன்பமான வாழ்வை பெற்றுத்தர உதவுவதில்லை.

அறிவுத்திறன் குறைவாக உள்ள மக்கள் யார் மந்திரஜாலங்கள் செய்தாலும் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை. மேலும் இதுபோன்ற செயல்கள் கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அவர்களை தர்மத்தின் வழியில் செலுத்துகிறது. யார் மீது நம்பிக்கை என்பது முக்கியமல்ல. நம்பிக்கை என்பதுதான் முக்கியம். மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவர்களை சரியான பாதையில் செலுத்தி கூடிய விரைவில் அவர்கள் முக்தியடைய வழிவகுக்கும்.

அறிவுடையவர்கள் அவதாரங்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் மற்றவர்கள் அவதாரங்களின் மேலுள்ள நம்பிக்கையினால் தர்மமாக நடப்பதன் மூலமும் இந்த பிறவியிலேயே அனைவருக்கும் முக்தியடையும் வாய்ப்பை வழங்குவதுதான் இறைவன் அவதாரங்களை அனுப்பிவைப்பதன் நோக்கம்.

பயிற்சிக்காக :

1.  அவதாரம் என்பது யார்?

2. அவதாரத்தின் அவசியமென்ன?

3. ஞானிகளால் செய்யமுடியாத செயல் என்ன?

4. அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

5. மக்களை எந்த இருபிரிவாக பிரிக்கலாம்?

6. அவதாரங்கள் எவ்வாறு மக்களுக்கு உதவுகின்றனர்?

7. சாதாரண மக்களுக்கும் அவதாரங்களுக்கும் உள்ள மூன்று வித்தியாசங்கள் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தியானம் செய்வதன் மூலம் அற்புதங்கள் செய்யும் சக்தியை பெற முடியுமா?

2. அவதாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் அதிக வட்டி தருவதாக கூறி மக்களை மோசடிசெய்யும் நிதிநிறுவனங்கள நடத்துபவர்களுக்கும் என்ன வேற்றுமை?

3. அஷ்டமஹா சித்தி என்றால் என்ன?

4. அவதாரங்களின் செயல்களுக்கு பாவ புண்ணியங்கள் உண்டா? இருந்தால் அவை யாரைச்சேரும்?


Monday, December 13, 2010

பாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு (பிரம்மசூத்திரம் 3.3.31)

மக்கள் ஒருவருக்கொருவர் வெகுவாய் வேறுபட்டாலும் அனைவரும் இன்பமாக வாழ வழி வகுக்கும் வகையில் நான்கு பிரிவுகள் கொண்ட சமுதாய அமைப்பையும் நான்கு கட்டங்கள் கொண்ட வாழ்வு அட்டவணையையும் வேதம் அருளியுள்ளது என்ற கருத்தை கூறி நாம் அனைவரும் வேதம் கூறும் வழியில் நடந்து கூடியவிரைவில் முக்தியடைய முயல வேண்டும் என இந்த பாடம் கூறுகிறது.

மனிதன் மூன்று தனிமங்களின் கலவை

ஒளி (சத்வம்), சக்தி (ரஜஸ்), ஜடம் (தமஸ்) ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாகத்தான் அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்த தனிமங்களின் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். மேலும் ஒரு நாளில் நேரத்தை பொறுத்து விடியற்காலையில் ஒளியின் அளவு அதிகமாகவும் முற்பகலில் சக்தியின் அளவு அதிகமாகவும் இரவில் ஜடத்தின் அளவு அதிகமாகவும் இந்த விகிதம் ஒரே மனிதனுக்குள் தொடர்ந்து மாறுபட்டுகொண்டிருக்கும்.

எந்த ஒரு தனிமமும் தனித்து இருக்காது. எப்பொழுதும் மூன்று தனிமங்களும் சேர்ந்து ஒரு கலவையாகவே இயங்கும். ஒளி மற்ற இரு தனிமங்களைவிட சிறந்தது. ஜடம் நமக்கு அவசியமான ஒரு தனிமம் என்றாலும் இதன் அளவை நாம் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் தரம் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தாலேயே தீர்மானிக்கபடும். ஒளியின் அளவு அதிகமானால் நம் வாழ்வு அதிக நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்கும். இதனாலேயே புத்தர், ஏசு போன்ற முக்தியடைந்த மனிதர்களின் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம் வரையும் பழக்கம் ஏற்பட்டது.  நாம் நம் ஒளியின் அளவை கிரில்லியன் புகைப்படம் எடுத்து அறிந்து கொள்ளலாம். இது (Aura imaging) நம்மிடம் உள்ள ஒளியின் அளவை அளக்க மட்டுமே உதவும். வேதம் கூறும் பாதையில் நடந்து நமது சுயமுயற்சியால்தான் ஒளியின் அளவை அதிகபடுத்திக்கொள்ள முடியும்.

சமுதாய பிரிவில் தமக்கேற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுத்து வாழ்வு அட்டவணையில் கூறப்பட்ட கடமைகளை முறையாக செய்து அனைத்து மனிதர்களும் இந்த விகிதத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு கடைசியில் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

நான்கு வகை மனிதர்கள்

தங்கத்துடன் கலக்கபட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்து நகைகளை தரம் பிரிப்பது போல ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

வகை/ தனிமம்
ஒளி
சக்தி
ஜடம்
பிராமணர்கள்
60
30
10
சத்திரியர்கள்
30
60
10
வைசியர்கள்
10
60
30
சூத்திரர்கள்
5
25
70

மேலே குறிப்பிட்ட விகித அளவுகள் எந்த வகை மனிதர்களிடம் எந்த தனிமம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் என்பதை விளக்குவதற்காக கொடுக்கபட்டவை. ஓய்வெடுக்கும்பொழுது இருக்கும் இரத்த அழுத்தம் வேலை செய்யும்பொழுது அதிகரிப்பது போல இந்த அளவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே நகைகளில் இருக்கும் உலோக கலவைகளின் விகிதத்தை நிர்ணயிப்பதுபோல் ஒரு மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை எண்கள் மூலமாக நிர்ணயிக்க முடியாது.

மூன்று தனிமங்களும் மனிதனை ஏதாவது ஒரு வகையில் பந்தபடுத்தி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வை வாழும்படி செய்யும் குணம் உள்ளவை. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டுமென்றால் இந்த மூன்று தனிமங்களின் பிடியிலிருந்தும் நாம் முழுதாக விடுபடவேண்டும். படிப்படியாக இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை மாற்றி பிராமணனாக மாறி பரமனை அறிந்து கொண்டால் பிறகு வீடுபேறு பெற்று இன்பமாக வாழலாம்.

மனிதனின் முன்னேற்றம்

ஒளித்தனிமத்தின் விகிதத்தை அதிகரித்து பிராமணனாக மாற ஒவ்வொரு மனிதரும் தங்கள் தற்போதைய நிலைக்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும். உண்ணும் உணவு, செய்யும் செயல்கள், பழகும் மனிதர்கள் மற்றும் படிக்கும் நூல்கள் இவற்றை சரியானபடி மாற்றினால் அனைவரும் முன்னேறி முக்தி அடையலாம்.  

சூத்திரர்கள் செய்யவேண்டிய செயல்கள்

தாங்களாக முயன்று முன்னேறும் திறனோ அறிவோ சூத்திரர்களுக்கு கிடையாது. எனவே ஜடத்தின் வீரியத்தை குறைத்து சக்தி தனிமத்தின் விகிதத்தை அதிகபடுத்தி இவர்களை வைசியர்களாக மாற்ற இவர்களது நண்பர்களோ குடும்பத்தை சேர்ந்த மற்ற பிரிவினரோ இவர்களை பின்வரும் செயல்களை செய்விக்க வேண்டும்.

1.     ஜடத்தனிம ஆகாரத்தை குறைத்து சக்தி தனிமம் அதிகமுள்ள உணவை உண்ண வேண்டும்.

2.     மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை மெதுமெதுவாக விட்டுவிட வேண்டும்.

3.     முடிந்தவரை சூத்திரர்களுடன் பழகாமல் வைசியர்களுடன் மட்டுமே பழகவேண்டும். உதாரணமாக தம் குடும்பத்தில் யார் உழைத்து பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் பழகவேண்டும். யார் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது.

4.     இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளை கேட்கவேண்டும்.

5.     உழைப்பின் மூலம் ஏழை பணக்காரானாக உயருதல், காசேதான் கடவுள் போன்ற கருத்துக்களை தரும் திரைப்படங்களை பார்க்கவேண்டும்.

6.     தினமும் நிறைய நேரம் எதாவது வேலை செய்ய வேண்டும்.

வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையை அதிகபடுத்தி அதற்காக உழைக்க ஆரம்பித்தால் விரைவில் வைசியனாக மாறிவிடலாம்.

வைசியர்கள் செய்யவேண்டிய செயல்கள்

இவர்களிடம் சத்திரியர்களுக்கு சமமான சக்தியிருந்தாலும் போதிய ஒளிதனிமத்தின் துணையில்லாததால் சுயநலத்திற்காகவே இவர்கள் செயல் செய்கிறார்கள். ஜடத்தின் அளவை குறைத்து ஒளியின் அளவை அதிகரித்து கூடிய விரைவில் சத்திரியர்களாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1.     சூத்திரர்கள் போல வேலை செய்யக்கூடாது. வசியர்களின் வேலைகளை விட்டு சத்திரியர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

2.     அதிக நேரத்தை இறைவனுக்காக செலவிட வேண்டும். தனக்கு என்ற பார்வையிலிருந்து விலகி இறைவனுக்கு என்று முன்னேறி பின் பொதுநலம் என்ற சத்திரியர்களின் குறிக்கோளை எட்ட வேண்டும்.

3.     ஜடத்தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4.     காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து ஆன்மிக நூல்களை படிக்க வேண்டும்.

5.     வைசியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு சத்திரியர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.

6.     புலன் இன்பங்களை அனுபவிப்பதை குறைத்துக்கொண்டு கர்னாடக இசை கேட்டல், சிறுகதை அல்லது நாவல்களை படித்தல், ஓவியம் வரைதல் போன்ற மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம்.

7.     அதர்மத்தையும் முற்றிலும் தவிர்த்து விருப்பு வெறுப்புகளுக்கு வசப்படாமல் கடமைகளை தர்மமான முறையில் நிறைவேற்ற வேண்டும்.

சூத்திரர்கள் வேலை செய்ய ஆரம்பித்து வைசியர்களாக வளர்ந்த பின் சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக உழைக்கும் சத்திரியர்களாக உயர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக செயல்களை சுயநலம் இல்லாமல் செய்வதுபோல பாசாங்கு செய்தாலும் பரவாயில்லை. நாளடைவில் இந்த பாசாங்கு  இயல்பாக மாறி வைசியனை உண்மையிலேயே சத்திரியனாக மாற்றிவிடும்.    

சத்திரியர்கள் செய்யவேண்டிய செயல்கள்

தன் குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்கள், சமுதாயம் ஆகிய அனைத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைப்பவர்கள் சத்திரியர்கள். உலகத்தை மாற்ற வேண்டும் என்ற தவறான அறிவிலிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்ற சரியான அறிவை பெற்று பிராமணனாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1.     வைசியர்கள் போல் வேலை செய்வதை தவிர்த்து சத்திரியர்களின் வேலைகளை குறைத்துக்கொண்டு பிராமணர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

2.     இறைவனை வழிபடும் நேரத்தை குறைத்துக்கொண்டு தான் யார், இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியை அதிகரிக்க வேண்டும்.
3.     சக்திதனிம ஆகாரத்தை குறைத்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4.     சத்திரியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு பிராமணர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.

5.     அறிஞர்களின் எண்ணங்கள், சுயமுன்னேற்றம் பற்றி சமயங்கள் கூறும் கருத்து ஆகியவற்றை விளக்கும் புத்தகங்களை படிக்கவேண்டும்

6.     மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களை குறைத்துக்கொண்டு அறிவு சம்பந்தபட்ட தத்துவ நூல்களை படிப்பதிலும் வானவியல், ஜோதிடம், போன்ற அறிவியல் துறைகளில் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

7.     புலன்கள் மனதின் கட்டுப்பாட்டிலும் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

வைசியர்களாக பணம் சம்பாதித்தபின்னும் சத்திரியர்களாக பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த பின்னும் நிரந்தரமான அமைதி கிடைக்காததால் அதை மேலும் வெளி உலகத்தில் தேடி பயன் இல்லை என்பதை உணர்ந்தால் அடுத்த நிலையான பிராமணனாக உயர்ந்து வேதத்தை பயில துவங்கலாம்.

பிராமணர்கள் செய்யவேண்டிய செயல்கள்

ஒளித்தனிமம் முதலிடத்திலும் சக்தி தனிமம் இரண்டாம் இடத்திலும் பெரும்பாலான நேரங்களில் இருந்தால் அவர்கள் பிராமணர்கள். இவர்களும் ஏற்ற தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி ஆகிய வாழ்வின் இருமைகளிடையே சிக்கி தவிப்பவர்கள்தான். முக்தியடையவேண்டுமானால் மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்தும் விடுபடும் ஞானத்தை அடையவேண்டும். இதற்காக இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1.     செயல்களை குறைத்துக்கொண்டு வேதம் படிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அவசியமான வேலைகளை மட்டும் செய்யலாம்.

2.     ஆத்மஞானத்தை அடைவது என்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டு குரு காட்டும் பாதையில் கடுமையாக உழைக்க வேண்டும்.

3.     சக்தி தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4.     தர்ம அதர்ம பாகுபாடுகளை கடந்து பரமன் மட்டும் உண்மை இந்த உலகம் பொய் என்ற விவேகத்தை அடையவேண்டும்.

5.     வேதம், ஆசிரியர், இறை வழிபாடு, தியானம் போன்றவை பரமனை அறிந்து கொள்ள தேவையான சாதனங்கள். இவற்றின் மீது பற்றுகொண்டு தொடர்ந்து வேதத்தை படிப்பதனாலோ இறைவழிபாட்டில் ஈடுபடுவதாலோ சடங்குகளை பின்பற்றுவதாலோ முக்தியடைய முடியாது.

6.     செயல்களின் மீதுள்ள பற்றை சத்திரியன் துறந்து அறிவின் மீது பற்று கொண்டு பிராமணான பின் அறிவின் மீதுள்ள பற்றையும் துறந்து முக்தி அடையவேண்டும்.

இறுதித்தேர்வில் தேறாவிட்டால் பன்னிரண்டு வருடம் பள்ளியில் படித்ததன் பலன் கிடைக்காது. அது போல வைசியன், சத்திரியன் என்று படிப்படியாக வளர்ந்து பிராமணனான பின் முக்தி பெறாவிடில் அது வரை செய்த முயற்சி வீணாகிவிடும்.

எனவே அனைத்து பிராமணர்களும் விரைவில் முக்திபெற முழு முயற்சியுடன் முயல வேண்டும்.

முடிவுரை :

பிறப்பின் அடிப்படையில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் இந்த பிறவியிலேயே முக்தி அடைவதற்கு சம வாய்ப்பு வேதத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதியின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு செய்ய முடியாது. அனைவரும் வாழ்வு அட்டவணையின் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை ஆகிய நான்கு கட்டங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்து தங்களை படிப்படியாக பிராமணனாக உயர்த்திக்கொள்ள வேண்டும். பின் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைவது எளிது.

மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்து விடுதலை பெற்று முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இறக்கும்பொழுது இன்னும் நிறைய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வைசியர்களும் உலகத்தை திருத்த இன்னும் உழைக்க வேண்டும் என்று சத்திரியர்களும் வேதத்தை இன்னும் ஆழமாக படிக்கவேண்டும் என்று பிராமணர்களும் ஆசை கொண்டிருந்தார்களேயானால் மறுபடியும் பிறந்து இவர்கள் அனைவரும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியை தொடர்வர். வேதத்தில் பரமன் யார் என்று விளக்கப்பட்ட உண்மையை அறிந்து ஞானம் பெற்று இந்தப்பிறவியிலேயே பிறவிச்சுழலிலிருந்து விடுதலை பெற நாம் அனைவரும் முயல வேண்டும்.

நாம் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் எந்த ஜாதியினரின் வேலையை செய்பவராக இருந்தாலும் குணத்தின் அடிப்படையில் நாம் இப்பொழுது வைசியனாகவோ சத்திரியனாகவோ இருந்தாலும் நம் சுயமுயற்சியால் வேதம் வகுத்த பாதையில் பயணித்து பிராமணனாக மாறி இந்த பிறவியிலேயே முக்தியடைந்து விடலாம்.


பயிற்சிக்காக :

1.  மனிதர்கள் எதன் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்?

2. சூத்திரர்கள் வைசியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

3. வைசியர்கள் சத்திரியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

4. சத்திரியர்கள் பிராமணர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

5. பிராமணர்கள் முக்தியடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை?

6.மனிதர்களின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய செயல்களின் அடிப்படையாக கூறப்பட்ட நான்கு செயல்கள் யாவை?


சுயசிந்தனைக்காக :

1. பிராமணர்களைத்தவிர வேறு யாரும் முக்தியடைய முடியாதா?

2. அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாடத்தின் தலைப்பிற்கு என்ன பொருள்?

3. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா என்று மனைவி கணவனை அதிக பணம் சம்பாதிக்கும்படி தொடர்ந்து தூண்டுவது சரியா?

4. தீவிரவாதம், அரசியலில் ஊழல் புரிதல், திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த பிரிவினை சேர்ந்தவர்கள்? இவர்கள் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?

5. செயல்களை குறைத்து வாழ்வின் அடிப்படை தேவைகளுக்காக உழைக்கும் பிராமணனுக்கும் தேவைகளை அதிகபடுத்திக்கொள்ளாமல் சோம்பியிருக்கும் சூத்திரனுக்கும் என்ன வித்தியாசம்?