Thursday, May 6, 2010

பாடம் 058: கிருத்துவ மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.33-36)

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய ஏசுநாதரின் உபதேசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகிய கிருத்துவ மதம் இன்று உலகமதங்களில் முதன்மையிடம் வகிக்கிறது. ஒரு சில உட்பிரிவுகள் இருந்தாலும் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான அடிப்படை கருத்துக்களில் உள்ள தவறுகளை இப்பாடம் விவரிக்கிறது.

ஏசுநாதரும் கிருத்துவ மதமும்

கண்ணனின் வாழ்க்கை வரலாறும் அவனது உபதேசமான கீதையும் வியாசரால் எழுதபட்ட மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்கு கிடைத்துள்ளது. அதேபோல் ஏசுநாதரின் உபதேசங்களையும் மற்றும் அவரது வாழ்க்கை சரித்திரத்தையும் அவரது சீடர்களின் குறிப்புகளை (Gospels) உள்ளடக்கிய பைபிள் மூலம் நாம் அறிகிறோம். இருவரது உபதேசங்களிலும் எவ்வித வேறுபாடும் இல்லாவிட்டாலும் அவர்களை பின்பற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. யாதவ குலத்தில் பிறந்த கண்ணன் மட்டும்தான் ஒரே கடவுள் என்று ஒரு சிலர் (ஹரே கிருஷ்ணா இயக்கம்) கொண்டாடுவது போல யூத குலத்தில் பிறந்த ஏசுதான் கடவுளின் ஒரே மகன் என்று நினைப்பவர்களின் மதம்தான் கிருத்துவ மதம்.

அவதார புருஷர்களின் உபதேசங்களை முறையாக கற்காமல் அவர்களது வாழ்க்கைசரிதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மதங்கள் உருவாகுமே தவிர மக்களது துயரம் அகலாது.

உலகின் துன்பங்களை நீக்கி அனைவரும் எப்பொழுதும் இன்பமாக வாழ்வது எப்படி என்கிற உபாயத்தை காலந்தோறும் வெவ்வேறு ஞானிகள் அவதரித்து உபதேசித்து வந்தாலும் ஒரு சிலர் அத்தகைய அவதாற புருஷர்களின் பெயரில் மதங்களை உருவாக்கி தங்கள் சுயலாபத்திற்காக வியாபாரம் செய்துவருகின்றனர். உதாரணமாக தனது ஆட்சியின் செல்வாக்கை அதிகபடுத்திக்கொள்ளும் ஒரே நோக்கில் ரோம் நாட்டு மன்னன் கான்ஸ்டன்டைன் உருவாக்கியதுதான் கத்தோலிக்க மதம். அப்பாவி மக்களிடமிருந்து பொருளை அபகரிக்கும் திட்டமாக அன்று தொடங்கய கிருத்துவ மதம் இன்றுவரை தொடர்ந்து அதே பாதையில் வளர்ந்து வருகிறது.

கிருத்துவ மதம் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கு பதிலளிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் ஏன் செய்ய வேண்டும், கடவுள் யார், மனிதன் யார், அவனது துன்பத்திற்கு காரணம் என்ன என்பது போன்ற தத்துவ விளக்கங்களை ஏசுநாதரின் உண்மை உபதேசத்துக்கு மாறாக இன்றைய கிருத்துவ மதம் உபதேசித்துவருகிறது.

கிருத்துவ மதத்தில் உள்ள தவறுகளை தர்க்கரீதியாக ஆராயும்பொழுது ஏசு நாதரின் உபதேசங்களிலிருந்து இன்றய கிருத்துவ மதம் முற்றிலும் மாறியுள்ளது என்ற உண்மை தெரியவரும். ஏன், எப்படி என்று ஏசுநாதர் தம் ஆறாம் வயதில் கோவில் குருக்களை கேள்விகள் கேட்டது போல் நாமும் கேட்டால்தான் நமக்கு முக்தி கிடைக்கும்.

மனிதன் பாவியா?

கிருத்துவ மதத்தின் கொள்கைபடி அனைத்து மக்களும் பாவிகளே. பாவமன்னிப்பு கோரி ஏசுவிடம் சரணடைந்தவர்கள் மட்டுமே சுவர்க்கத்துக்கு செல்லும் வாய்ப்புடையவர்கள். மற்றவர்கள் நரகத்தில் முடிவில்லாமல் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவார்கள். சற்றும் தர்க்கத்திற்கோ அறிவுக்கோ பொருந்தாத இக்கருத்துக்கள் வேதம் கூறும் 'நீ பரமன்' என்ற உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டது.

கோப்பை பாதி காலியாயிருக்கிறது என்று சொல்வதும் பாதி நிரம்பியிருக்கிறது என்று சொல்வதும் எப்படி ஒரே நிலையை வர்ணிக்கிறதோ அதேப்போல் கிருத்துவ மதமும் வேதமும் மனிதனின் நிலையை வெவ்வேறு கண்ணோட்டத்தில் வர்ணிக்கின்றன. 'நீ பாவி. உன்னை கடவுளிடம் முழுதாக அர்ப்பணம் செய்தால்தான் உனக்கு விடுதலை கிடைக்கும்' என்ற கிருத்துவமதத்தின் கொள்கையை 'நீ என்ற சொல்லுக்கு அழியும் உடலையும் மனதையும் பொருளாக நினைத்து மயங்கியிருக்காமல், நான் பரமன் என்ற அறிவை பெற்று விழித்தெழு' என்ற வேதத்தின் முழக்கத்தோடு ஒப்பிட்டால் எது சரியான பார்வை என்று விளங்கும்.


யார் காரணம்?

ஆடம் (Adam) செய்த தவறுக்கு நான் ஏன் பிராயசித்தம் செய்ய வேண்டும். என்னுடைய பாவங்களுக்கு ஏன் ஏசு சிலுவையில் மரிக்கவேண்டும் என்பது போன்ற நியாயமான கேள்விகளுக்கு கிருத்துவ மதத்தில் முறையான பதில் கிடைப்பதில்லை. மறுபிறவி என்ற கோட்பாடை ஏற்றுக்கொள்ளாததனால் கூன், குருடு, செவிடு, பேடு என்ற குறைகளோடு ஏன் ஒரு சில குழந்தைகள் பிறக்கின்றன என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் திருப்தியளிப்பதாக இல்லை.

நம் வாழ்வில் உள்ள துயரத்துக்கு மற்றவர்கள் மீது பழி சொல்வது ஆரோக்கியமான வழியல்ல. நாம் செய்யும் பாவங்களை பாவமன்னிப்பு கோரினால் அழித்துவிடலாம் என்ற கோள்கை பணக்காரர்களை மேலும் பாவம் செய்ய அனுமதிக்கிறது. வாழ்வு முழுவது நம் விருப்பம்போல் வாழ்ந்துவிட்டு இறக்கும்பொழுது இறைவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஞாயமான கொள்கையல்ல.

பரலோகம் எங்கிருக்கிறது?

இங்கிலாந்தில் இருந்து கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்த இராணியை போல இப்பூவுலகில் வசிக்காமல் எங்கோ தொலைதூரத்தில் அமர்ந்து நமது செயல்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிருத்துவ கடவுளுக்கு நாம் எதற்காக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அடிமை வாழ்வை துறந்து விடுதலை பெறுவதுதான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை வேட்கை. அப்படியிருக்க நாம் ஏன் கடவுளுக்கு அடிமையாக மாறி வாழ்நாழ் முழுவதும் சேவை செய்ய வேண்டும்?

மரித்தபின் சுவர்க்கத்துக்கு செல்லுவதற்காக இந்த பூலோக சுவர்க்கத்தை சுதந்திரமாக அனுபவிக்காமல் ஆண்டவன் கட்டளை படி வாழ்வதென்பது இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முற்படும் செயலாகும்.

ஆறு நாட்களில் உலகை படைத்து ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டார் என்று கூறுவது கடவுளின் அளவுகடந்த சக்தியை குறைத்து மதிப்பிட்டு அவரை அவமதிப்பதற்கு சமம்.

இது போல நம்பமுடியாத கருத்துக்களை உண்மை என்று அறிவுக்கூர்மையும் படிப்பறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இக்காரணத்தால் வளர்ந்த நாடுகளில் கிருத்துவ மதம் மெதுவாக தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இன்னும் வறுமையில் பிடியிலிருந்து விடுபடாமல் பின்தங்கியுள்ள நாடுகளில்தான் கிருத்துவ சமயம் வளர்ந்து வருகிறது.

நம்பிக்கையுடன் மதக்கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு தத்துவங்களை முறையாக கற்பித்து நம்பிக்கை ஞானமாக மாற சமயம் உதவ வேண்டும். இந்த முக்கியமான செயலை கிருத்துவ மதம் செய்யத்தவறுவதால் ஆரம்ப கால நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக மாறுகின்றன. எனவே கிருத்துவ மதம் தவறு.

முடிவுரை :

கிருத்துவனாக பிறந்து வளர்வது மிகவும் நல்லது. ஆனால் கிருத்துவனாகவே மடிவது துர்பாக்கியம். ஞாயிறுதோறும் தேவாலையத்துக்கு சென்று பாதிரிமார்களின் உபதேசங்களை கேட்டு கருணையுடனும் அன்புடனும் மற்றவர்களுக்கு உதவுவது நமது இளவயதில் மிகவும் அவசியம். இது வேதத்தின் கர்மகாண்டம் போல மனதை தூய்மை படுத்தவும் பக்குவபடுத்தவும் உதவும். ஆனால் அதற்கு பிறகு ஏன், எப்படி என்பது போன்ற கேள்விகளை கேட்க கிருத்துவமதம் அனுமதிப்பதில்லை. மேலும் ஏசு நாதரின் உபதேசங்களுக்கு அது தவறான விளக்கங்களை கொடுப்பதால் நமக்கு முக்தி கிடைக்க வாய்ப்பேயில்லை.

உதாரணமாக 'கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள்ளே இருக்கிறது' (Luke 17:21) மற்றும் 'உண்மையை உணர்ந்தால் நீ விடுதலையடைவாய்' (John 8:32) போன்ற வசனங்கள் 'நீதான் பரமன்' என்ற வேதத்தின் கருத்தை தெளிவாக வெளியிட்டாலும் கிருத்துவ மதத்தின் கட்டுக்கோப்புக்குள் இவற்றை புரிந்து கொண்டு முக்தியடைய முடியாது. எனவே கிருத்துவமதம் தவறானது.

பயிற்சிக்காக :

1. பைபிள் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் அடங்கியுள்ள இரு விஷயங்கள் என்னென்ன? இரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது?

2. மனிதன் பாவி என்று கிருத்துவ மதம் சொல்வதில் என்ன தவறு?

3. பகுத்தறிவாளர்கள் கிருத்துவ மதத்திலிருந்து விலகி செல்வதன் காரணம் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. கிருத்துவ மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.

2. உலகில் இவ்விரு மதங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதற்கு காரணம் என்ன?


Wednesday, May 5, 2010

பாடம் 057: இஸ்லாமிய மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.28-32)


தர்ம-அதர்ம விவேகமும் சமூக கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாடோடிகளாக அரேபிய பாலைவனத்தை சூழ்ந்து வாழ்ந்து வந்த மக்களிடையே கடவுள் பக்தியை ஏற்படுத்த அல்லாவின் அருளால் குரானை எடுத்து ஓதினார் முகமது நபி அவர்கள். கடவுளின் இவ்வார்த்தைகளின் அடிப்படையில் தோன்றிய இஸ்லாமிய சமயம் இன்று உலகின் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்துள்ளது. இந்த மதத்தில் உள்ள வேதத்துக்கு மாறான கருத்துக்களை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.  

குரானும் வேதம்

எப்படி கடவுளின் செய்தியை முனிவர்கள் கேட்டு நமக்கு வேதமாக வழங்கினார்களோ அதே போல்தான் முகமது நபி அவர்களும் கடவுளிடமிருந்து குரானை பெற்றார். மக்களின் மனமுதிர்ச்சிக்கு ஏற்றாற்போல் குரானில் ஏழு அடுக்குகளாக செய்திகள் கொடுக்க பட்டுள்ளன. கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் இல்லாதவர்களை வேதத்தின் கர்மகாண்டம் வழிநடத்துவது போல குரானின் வாக்கியங்களின் மேல்கட்ட பொருள்கள் மக்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகளை கொடுத்துள்ளன.

முறையான ஆசிரியர் பரம்பரை இல்லாததால் குரானின் மற்ற ஆழ்ந்த பொருள்கள் மக்களுக்கு தெரியாமல் சமயத்தின் தொடக்க கட்டத்திலேயே இஸ்லாமிய மதம் தேக்கமடைந்து விட்டது. எனவே ஏன், எப்படி என்ற கேள்விகள் கேட்கும் பகுத்தறிவாளர்களுக்கு கடவுளின் உண்மையான செய்தி குரானிலிருந்து கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

லா இலாஹி இல்லல்லா!

அல்லாவைத்தவிர வேறு கடவுள் யாருமில்லை என்பது இதன் முதல் கட்ட பொருள். கடவுள் பக்தியில்லாத நாடோடிகளை கடவுள் பக்கம் திருப்ப கூறப்பட்ட இந்த கருத்து தவறுதலாக மற்ற மதங்களின் கடவுளர்கள் பொய்யானவர்கள் என்ற அர்த்தத்தில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பது ஒரு கடவுள். ஒவ்வொரு மதத்தினரும் அந்த ஒரு கடவுளை வெவ்வேறு பெயரில் அழைக்கிறார்கள் என்ற உண்மையை மூடநம்பிக்கையுடையோர் மட்டுமே ஏற்றுக்கொள்வதில்லை.

தாகத்தை போக்குவதற்கு உபயோகப்படும் பொருளை தண்ணீர் என்று தமிழர்களும் பானி என்று ஹிந்தி மொழி பேசுபவர்களும் வாட்டர் என்று ஆங்கிலேயர்களும் குறிப்பிட்டாலும் இருப்பது ஒரு பொருள்தான். அது போல எந்த பெயரில் அழைத்தாலும் இருப்பது ஒரே கடவுள்தான் என்பது குரானின் லா இலாஹி இல்லல்லா என்ற தொடரின் பொருள்.

இது முதல் கட்ட பொருள்தான். மன பக்குவம் பெற்றபின் இதே தொடர் கடவுளைத்தவிர வேறு ஒன்றுமேயில்லை என்ற பொருளை கொடுக்கும். கடவுள்தான் இந்த உலகமாக காட்சியளிக்கிறார் என்ற சரியான கருத்தை அறிந்து கொண்டால்தான் முக்தி கிடைக்கும்.

முக்தி என்பது அல்லாவின் கருணையால் மரணத்துக்குபின் கிடைப்பது

இதுவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு கருத்து. குழந்தை பிறப்பதை இஸ்லாமிய மதத்தவர்கள் ஒரு சோக நிகழ்வாக கருதுகின்றனர். அல்லாவிடமிருந்து விலகி இவ்வுலகில் வந்து மனிதனாக பிறப்பதாகவும் பிறந்தது முதல் சிறிது சிறிதாக 'நான்', 'எனது' என்ற மனிதனுக்கே உரித்தான அகங்காரத்தை வளர்த்து அல்லாவின் பாதையிலிருந்து மேலும் விலகுகிறான் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். குரானில் கூறப்பட்ட ஐந்து கட்டளைகளை தொடர்ந்து கடைபிடித்து பின் மரணமடைந்தால் அல்லாவின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து சுகமாக வாழும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களின் தவறான நம்பிக்கை.

எனவேதான் அவர்கள் மரணத்தை ஒரு மகிழ்வான சம்பவமாக நினைக்கிறார்கள்.

உண்மையில் 'நான்', 'எனது' என்ற அகங்காரத்தை தொலைப்பது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எப்பொழுது நான் வேறு இந்த உலகம் வேறு என்ற எண்ணம் ஏற்படுகின்றதோ அப்பொழுது நாம் இறைவனின் பாதையிலிருந்து அகலுகிறோம் என்பது உண்மை.

குரானில் கூறப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றி நாம் கடவுளின் ஒரு அங்கமாகத்தான் இந்த உலகில் செயல் படுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் நாம் இங்கேயே இப்பொழுதே முக்தியடையலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் குரானில் குறிபிடப்பட்டுள்ள இந்த ஆழ்ந்த பொருளை அறிவதில்லை.

அல்லாவின் கருணையை பெற இடைத்தரகர்கள் தேவையில்லை

இறுதி கட்டளை நாளன்று (Judgment Day) கடவுள் சிபாரிசு கடிதம் இருக்கிறதா என்று யாரிடமும் கேட்கப்போவதில்லை என்பது உண்மை. ஆனால் எல்லா மக்களும் நேரடியாக குரானை படித்து அதில் என்ன எழுதியுள்ளது மற்றும் அதன் உண்மை பொருள் என்ன என்பதை அறியும் சக்தியற்றவர்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டால் சமய ஞானிகளின் அவசியம் புரியும். செய்ய வேண்டிய செயல்களை முதல் பாகமான கர்மகாண்டத்திலும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையை இறுதிபகுதியான ஞானகாண்டத்திலும் வேதம் தொகுத்து கொடுத்திருப்பதுபோல் குரான் அமையவில்லை. ஒரே சொற்றொடருக்கு பல்வேறு பொருள் கிடைக்கும்படி அனைத்து செய்திகளும் ஒன்றினுள் ஒன்று புதைக்கப்பட்டுள்ளன. சமய ஞானியின் வாய்மொழியாக கேட்டாலன்றி சாமான்ய மக்களால் குரானில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களையும் உண்மை பொருளையும் அறிந்து கொள்ள முடியாது.

முடிவுரை :

இஸ்லாம் மதத்தை பின்பற்றாத அனைவரும் நரகத்துக்கு செல்வார்கள் என்ற ஒரு கொள்கை மட்டுமே அம்மதத்தை தவறான மதம் என்று நிறுவ போதுமான சான்று. மேலும் இவ்வுலக வாழ்க்கையின் ஒரே நோக்கம் அல்லாவை திருப்தி படுத்தும் வகையில் வாழ்ந்து மரணமடைந்தபின் சொர்க்கத்தில் இடம் பிடிப்பது மட்டும்தான். குரானில் சொல்லியபடி நம் வாழ்க்கையை முற்றிலுமாக அமைத்துகொண்டாலும் அல்லாவின் கருணை இருந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும். இது போன்ற தவறான கொள்கைகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் தடைபடாத அமைதி நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது என்பதை தெளிவு படுத்துகின்றன.

சொர்க்கம் எங்கிருக்கிறது, அதில் பணிபுரியும் அடிமை பெண்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது போன்ற கேள்விகளை அறிவை பயன்படுத்தி கேட்க இயலாதவர்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பின்பற்ற தகுதியானவர்கள். இப்படிபட்ட மக்களை, குரானை தவறாக மேற்கோள் காட்டி தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவது மிக எளிதான செயல். எனவே இஸ்லாமிய மதம் இருப்பதால் உலகம் பெறும் நன்மையைவிட தீமைகள்தான் அதிகம். ஆயினும் ஆண்டவனின் குறிப்பிட்ட ஐந்து கட்டளைகளை (ஐந்து முறை தொழுதல், ரமதான் மாதம் விரதம் இருத்தல், தானம் கொடுத்தல், அல்லாவை ஒரே கடவுளாக நம்புதல் மற்றும் வாழ்நாளில் ஒரு முறை மெக்காவுக்கு பயணித்தல்) கேள்வி கேட்காமல் பின்பற்றினால் மட்டும் போதும் என்ற மனோபாவத்துடன் பலர் இவ்வுலகில் இருப்பதால் இஸ்லாமிய சமயம் வெகு வேகமாக பரவி வருகிறது.

பயிற்சிக்காக :

1. இஸ்லாமிய மதம் தோன்றியதன் அவசியமென்ன?

2. இஸ்லாமிய மதம் தவறானது என்ற முடிவுக்கு வர என்னென்ன காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன?

3. குரானில் கூறப்பட்ட கடவுளின் செய்தியை அறிய ஆசிரியர்கள் தேவையா?

சுயசிந்தனைக்காக: :

1. அல்லாவின் ஐந்து கட்டளைகளை முழுதாக கடைபிடிக்காமல் சுவர்க்கத்தில் உறுதியாக இடம்பிடிக்க ஏதேனும் குறுக்கு வழி குரானில் கூறப்பட்டுள்ளதா?

2. பயங்கரவாதத்துக்கு காரணமாயிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இயக்கங்கள் தொடர்ந்து அதிகரிப்பதை கடவுள் அனுமதிப்பதன் காரணம் என்ன?

Monday, May 3, 2010

பாடம் 056: புத்த மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.18-27)


புத்தர் முறையாக வேதத்தை படித்தபின் இந்த துயரமான வாழ்விலிருந்து விடுதலை அடைவது எப்படி என்ற ஞானத்தை போதிமரத்தடியில் பெற்று மக்களுக்கு எடுத்து சொன்னார். அவரது உபதேசங்களை அடிப்படையாக கொண்டு தொடங்கிய புத்தமதம் இன்று உலகில் நான்காவது பெரிய மதமாக வளர்ந்துள்ளது. இதன் கொள்கைகள் எவ்வாறு தவறானவை என்றும் அவற்றை பின்பற்றி ஏன் முக்தியடைய முடியாது என்றும் இந்த பாடம் விளக்குகிறது.

மறுபிறப்பு, கர்ம பலன் போன்ற பல முக்கியமான தத்துவங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் இந்து மதமும் புத்த மதமும் சகோதர மதங்கள் என்று கருதப்படுகின்றன. ஆயினும் புத்தமதம் பின்வரும் விதங்களில் இந்து மதத்திலிருந்து வேறுபடுகிறது. இந்த வேற்றுமைகள் என்னென்ன என்றும் அவை ஏன் தவறானவை என்பதையும் இப்பொழுது ஆராயலாம்.

வேற்றுமை 1: சூனியவாதம்

உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் இந்த உலகின் ஆதாரம் என்று உண்மையில் ஒன்றுமேயில்லை என்கிறது புத்தமதம். உண்மையை அடிப்படையாக கொள்ளாமல் ஒரு பொய்யை சொல்ல முடியாது. ஐந்து புலன்கள் மூலமாகவோ அறிவியல் பூர்வமாகவோ அறியமுடியாது என்ற காரணத்தால் பரமனை இல்லை என்று சொல்ல முடியாது.

சூனியம்தான் இருக்கிறது என்ற வாக்கியத்திலேயே முரண்பாடு உள்ளது. இருப்பதை சூனியமென்று புத்தமதமும் பரமனென்று வேதமும் சொல்கிறது. வார்த்தையில்தான் வேறுபாடே தவிர பொருளில் எவ்வித வேற்றுமையும் இல்லை. இதை புரிந்து கொள்ளாமல் சூனியம் என்பதற்கு ஒன்றுமேயில்லை என்று பொருள் சொல்வது 'நான் இல்லை' என்று சொல்வதற்கு சமம்.


வேற்றுமை 2: வாழ்க்கை துன்பகரமானது

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பத்திற்கு வித்திடுகிறது என்ற காரணத்தால் வாழ்வு துன்பகரமானது என்று முடிவெடுப்பது தவறு. வாழ்வு இன்பமயமானதா அல்லது துன்பகரமானதா என்பது நம் பார்வையை பொறுத்தது. உலகே மாயை. இருப்பது நான் மட்டும்தான் என்ற உண்மை புரிந்துவிட்டால் உலகில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாம் சரியான பார்வையில் பார்க்க முடியும். அதன் பின் வாழ்வு துன்பம் கலப்பற்ற இன்ப மயமானது என்று புரியும்.

வாழ்வே துன்பகரமானது என்று கூறுவது, மரணமடைந்தால்தான் பிறப்பு-இறப்பு-மறுபிறப்பு என்ற பிறவிச்சுழலிருந்து விடுபட முடியும் என்ற தவறான செய்தியை அளிக்கிறது. துன்பமான வாழ்வை விட்டு எப்பொழுதும் இன்பமான வாழ்வை அடைவது என்பது உயிரோடு இருக்கும்பொழுது மட்டும்தான் சாத்தியம். எனவே முக்தியடையும் வரை வாழ்க்கை துன்பகரமானது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வேற்றுமை 3: ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஆசைக்கு காரணம் உலகப்பொருள்களில் இன்பம் இருக்கிறது என்ற தவறான எண்ணம்தான். நான்தான் ஆனந்தத்தின் உண்மை சொரூபம் என்ற அறிவுடன் ஆசைப்பட்டால் அந்த ஆசை நம்மை பந்தபடுத்தாது. ஆசைபட்ட பொருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம் மனநிலை ஒன்றாகவேயிருக்கும். நம் இன்பத்திற்காக என்று அல்லாமல் நாம் இன்பமாக இருப்பதால் நம்மிடம் தோன்றும் ஆசைகள் உலகிற்கு நன்மைகள் அளிக்கும்.

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை போன்றவை மட்டுமே துன்பத்திற்கு காரணம்.
கடவுள், உலகம் மற்றும் வாழ்வு பற்றிய உண்மை அறிவை அடைய வேண்டும் என்னும் ஆசை நம்மை என்றும் குறையாத இன்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். அவ்விலக்கை அடைந்த பின் ஏற்படும் ஆசைகள் மற்றவர்களின் வாழ்வை செம்மைபடுத்த உதவும்.

வேற்றுமை 4: கடவுள் இல்லை

கண்ணுக்கு தெரியும் உலகை மாயை என்று மறுத்துவிட்டதால் இல்லாத உலகை படைக்க புத்த மதத்தில் கடவுள் என்று ஒருவர் தேவைபடவில்லை. ஆனால் மாயை என்பதற்கு 'இல்லை' என்று அர்த்தம் கற்பிப்பது தவறு. எது உண்மையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறதோ அதைத்தான் மாயை என்று குறிப்பிட முடியும். குதிரை கொம்பு என்பது மாயை அல்ல. அது பொய். உலகம் குதிரை கொம்பு போல் இல்லாதது அல்ல. எனவே மாயாஜாலத்தை செய்ய ஒரு மந்திரவாதி எப்படி அவசியமோ அது போல மாயமான இவ்வுலகை உருவாக்க கடவுள் என்று ஒருவன் இருக்க வேண்டும்.
மனிதனுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு சக்தியையும் ஒத்துக்கொள்ளாத ஒரே சமயம் புத்தமதம் தான். அறிவுபூர்வமாக இறைவன் இருக்கிறானா என்று ஆராயமுடியாத பலருக்கு இறை நம்பிக்கை என்பது முக்தியை அடைய தேவையான ஒரு படிக்கட்டு. இறைவன் இல்லை என்ற மூடநம்பிக்கை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை விட மோசமானது. ஏனெனில் இறைவன் யார் என்ற கேள்வியை கேட்கவும் அவனை பற்றிய பூரண அறிவை அடையவும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அடிப்படை தேவை.

பிறவிப்பெருங்கடலை இறைவனடி சேராமல் நீந்திக்கடப்பது அரிது.

வேற்றுமை 5: வேதம் அவசியமற்றது

கர்மகாண்டத்தில் கூறப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனதை சுத்தபடுத்தி ஞானம் பெற வழி வகுக்கின்றன. ஆனால் கர்மகாண்டம் மட்டுமே முக்தி கொடுக்கும் என்று நம்புவது தவறு. ஞானகாண்டத்துக்கு வந்தால் மட்டுமே வேதத்தின் அருமை நமக்கு புரியும். அதை விடுத்து கடவுளை பிரார்த்திப்பதற்கு மட்டும் நம் காலத்தை செலவிடுவது தவறு. இந்த தவறை தவிர்க்க வேதமே அவசியமல்ல என்று போதிப்பதும் தவறு.

பள்ளிபடிப்பை முடித்தவனுக்கு மட்டும்தான் பாடபுத்தகம் தேவையில்லை. மற்ற அனைவருக்கும் அது மிக அவசியமான ஒன்று. அது போல் புத்தருக்கு வேதம் அவசியம் அல்ல என்பதால் யாருக்குமே அதனால் உபயோகம் இல்லை என்று முடிவு செய்வது தவறு.

வேற்றுமை 6: குரு தேவையில்லை

புத்தர் யாருடைய துணையுமில்லாமல் தானாகவே ஞானத்தை பெற்றார் என்பது தவறான கருத்து. புத்தர் பல வருடங்கள் முறையாக குருவின் உபதேசங்களை பெற்று வேதத்தை பயின்ற பின், போதி மரத்தடியில் அமர்ந்து தான் கற்ற பாடங்களை ஆழ்ந்து சிந்திக்கும்பொழுதுதான் ஞானம் பெற்றார். வகுப்பில் ஆசிரியர் கற்றுகொடுத்ததை முறையாக கேட்ட மாணவன் வீட்டுகணக்கை தானாக எவ்வித உதவியுமின்றி செய்வதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை.

மேலும் புத்த மதமே புத்தரை ஆசிரியராக மதித்து அவரின் உபதேசங்களை அடிப்படையாக கொண்டுதான் அமைந்துள்ளது. புத்தர் உயிரோடு இருக்கும்பொழுது அவர் கூறிய கருத்துக்களுக்கு வெவ்வேறு பொருள்களை கற்பித்து அவர் மறைவுக்குபின் புத்த மதம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துவிட்டது. புத்தர் உண்மையில் கூறியது என்ன என்பதை அறிய நமக்கு நிச்சயம் ஆசிரியரின் துணை தேவை.

முடிவுரை :

இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையை எப்படி குறையாத இன்பமயமாக மாற்றுவது என்ற உபாயத்தை கொடுப்பதுதான் சரியான சமயம். அதை விடுத்து வாழ்வு துன்பகரமானது என்றும் அந்த துன்பத்திலிருந்து விடுபட சரியான நம்பிக்கை, சரியான நோக்கம், சரியான பேச்சு, சரியான செயல்கள், சரியான வேலை, சரியான முயற்சி, சரியான மனசாட்சி, சரியான தியானம் என்கிற எட்டு வழிபாதையில் பயணிக்க வேண்டும் என்று மட்டும் உபதேசம் செய்வது பயனளிக்காது. என்றாவது ஒரு நாள் புத்தரை போன்று நாமும் நிர்வாண நிலையை அடைவோமா என்ற நம்பிக்கையில்லாத எதிர்பார்த்தலுடன் வாழ்வு முடிந்து விடும்.

பக்கத்து வீட்டுக்காரன் எட்டு வழிப்பாதையில் நடந்து புத்தரைப்போல் ஞானம் பெற்றுவிட்டான் என்ற செய்தி நாமும் முயன்று அந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுக்கும். ஆனால் ஆசிரியரின் துணையில்லாமல் சரியான பாதை எது என்பதிலோ அடைய வேண்டிய நிர்வாணம் என்பது என்ன என்பதிலோ முழு தெளிவு கிடைக்காது. எனவே புத்தரின் சிலைக்கு முன் காணிக்கைகள் செலுத்திவிட்டு அவர் உபதேசங்களை தொடர்ந்து கடைபிடித்து மனதை செம்மை படுத்த முடியுமே தவிர புத்த சமயத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைவது என்பது நடக்காது.

பயிற்சிக்காக :

1. புத்தமதம் வேதத்தின் கருத்துக்களிலிருந்து எவ்விதங்களில் வேறுபடுகிறது?

2. ஏன் புத்தமதம் நமக்கு முக்தியை கொடுக்காது?

சுயசிந்தனைக்காக :

1. புத்தருக்கு பின் ஞானமடைந்தவர்கள் புத்தமதத்தில் யாரேனும் இருக்கிறார்களா?

Saturday, May 1, 2010

பாடம் 055: வேதம் தவறு என்றால் முக்தி கிடைக்காது (பிரம்ம சூத்திரம் 2.2.12-17)


வேதத்துக்கு மாறாக ஜடம்தான் படைப்பிற்கு காரணமென்றோ அணுவிலிருந்துதான் அனைத்தும் தோன்றியதென்றோ கூறுபவர்களின் வாதம் தவறு என்றும் புலனறிவுக்கு புலப்படாத உணர்வுதான் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும் என்றும் தர்க்கத்தின் மூலமும் அறிவியல் ஆய்வின் மூலமும் நிலைநாட்டிய பின் இந்த முடிவுகள் தவறாக இருந்தால் மனிதனுக்கு நிலையான அமைதியும் குறையாத இன்பமும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற முக்கியமான கருத்தை இந்த பாடம் தருகிறது.

அடிப்படை கேள்விகள்

பிரபஞ்சம் எப்படி தோன்றியது, உலகம் தானாக உருவானதா, ஜடப்பொருள்கள் எவ்வாறு உயிரினங்களாக மாறின என்பது போன்ற அடிப்படை கேள்விகள் மனித மனதை தொடர்ந்து ஆட்கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் மனிதன் கலையாத நிம்மதியை தேடிக்கொண்டிருப்பதுதான்.

முயற்சிகள் பல செய்தும் அடையமுடியாத பலன் ஒரு சிலசமயம் நாம் எதிர்பாராத சமயத்தில் தானாக கிடைக்கிறது. உண்மை உழைப்பும் ஊக்கமும் உள்ள அறிவாளிகள் ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேற முடியாத போது அறிவில்லாத சோம்பேறிகள் பலர் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். செயலுக்கும் விளைவுக்கும் (Input-output) இடையே உள்ள தொடர்பு புரியாத புதிராகவே உள்ளது. இது போன்ற அனுபவங்களை ஆராயும்பொழுது நாம் எல்லோரும் கடவுளின் விளையாட்டு பொம்மைகளா அல்லது நமது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளும் முன்கூட்டியே தீர்மானிக்க பட்டுவிட்டனவா என்பது போன்ற கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தொடர்ந்து செயல் புரிவது கடினமாக இருக்கிறது.

இது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு தங்கள் கொள்கைகளின் அடிப்படையில் மதங்களும் கோட்பாடுகளின் அடிப்படையில் அறிவியல் அறிஞர்களும் வெவ்வேறு பதில்களை அளிக்கிறார்கள். இவற்றில் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற ஒரு பதிலை சரியான பதிலாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். ஆயினும் இந்த பதில்கள் நமக்கு திருப்தி அளிப்பனவாக இல்லை. அதனால்தான் நாம் இன்னமும் கலையாத நிம்மதியை நாடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலை முறைப்படி பயின்று புரிந்துகொண்டவர்கள் மட்டுமே இனி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நிம்மதியாக இருக்கிறார்கள்.

வேதத்தை தவிர மற்ற மதங்களோ அறிவியலோ வகுத்த பாதையில் பயணிப்பவர்களுக்கு ஏன் முக்தி கிடைப்பதில்லை என்பதை இப்பொழுது ஆராயலாம்.

ஜடம் அல்லது அணுவை ஆதாரமாக கொண்ட உலகம்.

அணுக்கள் தானாக ஒன்றுடன் ஒன்று இணைந்து ஜடப்பொருள்கள் உருவாகி அதில் தற்செயலாக உயிர் தோன்றியது என்பது உண்மையானால் நாம் எதற்கும் காரணம் கேட்க கூடாது. ஏதோ எல்லாம் எப்படியோ நடக்கிறது என்ற மனப்பான்மையுடன் எவ்வித கேள்வியும் கேட்காமல் மிருகங்கள், பறவைகள் போன்ற மற்ற உயிரினிங்களை போல நாமும் நிம்மதியாக வாழலாம். ஆனால் நம் பகுத்தறிவு இதை உண்மை என ஏற்றுக்கொள்ளாது. எனவே நாம் நிலையான அமைதியை அடைவது என்பது நடக்கவே நடக்காது.

எதிர்காலம் மனிதனின் கையில்.

ஜடப்பொருளிலிருந்து தானாக உலகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று நம்புபவர்களில் பலர் இந்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்துக்கு மனிதன் பொறுப்பேற்றுள்ளான் என்று நம்ப விழைகிறார்கள். மனிதன் நல்லவன் ஆனால் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்ற கூற்றுக்கு இவ்வுலகில் நடைபெறும் போர், தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற நிகழ்வுகளே அத்தாட்சி.

பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து அதனுள் இருக்கும் அனைத்து தங்கத்தையும் அடைய நினைக்கும் முட்டாள்தனமான பேராசையுடன் மனிதன் இந்த வளமிக்க பூமியை சூறையாடி வருகிறான். அறிவியல் வளர்ச்சி ஆக்கபூர்வமான செயல்களுக்கு உதவுவதை விட மனித இனம் உள்ளிட்ட பெரும்பாலான உயிரினங்களை முழுதும் அழிக்கும் சக்தியை அதிகப்படுத்துவதில்தான் முனைந்துள்ளது.

இந்த நிலையில் மனிதன்தான் இவ்வுலகின் எதிர்காலத்துக்கு பொறுப்பாளி என்பது உண்மையென்றால் அது மிகுந்த அச்சத்தை கொடுக்க கூடிய ஒரு செய்தி. அறிவில்லாத சிறுகுழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்துவிட்டு அது சுடாது என்ற நம்பிக்கையுடன் நம்மால் எப்படி வாழமுடியும்? உலகத்தின் அழிவு எந்த நொடியிலும் நிகழலாம் என்ற பயத்தினுடன்தான் நம் வாழ்நாட்கள் நகரும்.

கடவுள்தான் ஆள்பவர்.

ஜடப்பொருள்களிலிருந்து தானாக உலகம் தோன்றியது என்ற கருத்தை ஏற்று கொள்ளாமல் கடவுள்தான் எங்கோ இருந்து நம்மை படைத்து ஆட்டுவிக்கிறார் என்று நம்புபவர்களுக்கும் நிம்மதி கிடைக்காது. கண்ணால் பார்க்க முடியாத கடவுளை திருப்தி படுத்த வேதத்தின் பொருள் புரியாத மதத்தலைவர்களின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து வாழ்வை துயரத்தில் கழிப்பவர்கள் பலர். ஒரு குருடன் மற்றொரு குருடன் கையை பிடித்து அழைத்து சென்றால் கீழே விழுவதன் வாய்ப்பு இருபங்காகிவிடும். அது போல கடவுளை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவர்களின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து மூடநம்பிக்கையுடன் வாழ்நாளை கழிப்பவர்களால் நிரந்தர அமைதியை பேற முடிவதில்லை.

நாம் கோவிலுக்கு சென்று வரும் வேளைகளில் மன அமைதியை தருவது போல் தோன்றினாலும் கடவுள் நம்பிக்கை நமக்கு முழுநிம்மதியை தருவதில்லை.

நான் பரமன்

இதுதான் வேதத்தின் முடிவு. நான் பரமனென்று அறிந்துகொண்டால் மட்டுமே நாம் முக்தி அடைவோம். இரவில் படுக்கச்செல்லும் பொழுது அறை கதவை தாழிட்டுவிட்டு தனியாக தூங்கும் ஒருவன் காலையில் விழிக்கும்பொழுது கதவு முழுவதுமாக திறந்திருப்பதை பார்த்தால் என்ன நினைப்பான். நான் திறக்காமல் கதவு எப்படி தானாக திறந்து கொண்டது என்று அவன் தீவிரமாக யோசித்து, திருடன் வெளியிலிருந்து கதவை திறந்திருப்பானோ அல்லது எதோ பேய், பிசாசு அறையில் இருந்திருக்குமோ என்று பல்வேறு முடிவுகளை ஆராய்ந்து கடைசியில் நான் தான் என்னையறியாமல் தூக்கத்தில் நடந்து போய் கதவை திறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டும். வேறு எந்த முடிவுக்கு வந்தாலும் அவனுக்கு நிம்மதி கிடைக்காது.

எனக்கு தெரியவில்லையே என்பதால் நானக இருக்க முடியாது என்று முடிவெடுக்க கூடாது. உலகை உருவாக்கியது நாம்தான். அது தெரியாமல் நான் இல்லை என்று தீர்மானம் செய்துவிட்டால் வாழ்நாழ் முழுவதும் சரியான பதிலை தேடி அலைந்து கொண்டிருப்போம்.

முடிவுரை :

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். நாம் கண்ணால் காணும் உலகத்தின் அடிப்படையிலும் அறிவியல் அறிஞர்களின் கூற்றை கேட்பதன் அடிப்படையிலும் உலகம் தானாக தோன்றியது என்று முடிவு செய்வது தவறு. அறிவியல் ஆராய்ச்சியும் புலன்களின் வழியே கிடைக்கும் செய்திகளின் ஆதாரத்தில்தான் செயல்படுகிறது. காண்பதெல்லாம் பொய் என்பதற்கு இந்த உலகம் இருப்பது போல் காணப்பட்டாலும் அது பொய் என்பதுதான் அர்த்தம். எனவே அறிவியல் கண்டுபிடுப்புகள் இந்த பொய்யான உலகத்தின் பொய்யான ஒரு பகுதி. பொய்களை விட்டு உண்மையை வெளியே தேட வேதம் மட்டுமே நமக்கு உதவும்.

உணர்வுதான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்றால் அந்த உணர்வு நமற்கு அப்பாற்பட்டதல்ல.

தண்ணீரில் தெரிவது தன்னுடைய பிம்பம்தான் என்று தெரியாமல் 'எதிரியை' கொல்வதற்காக கிணற்றுக்குள் குதித்த சிங்க ராஜாவை போல் வேதம் குறிப்பிடும் உணர்வு நான்தான் என்று தெரிந்து கொள்ளாமல் வேதத்தை மறுத்து போராடுவது நம்மை மீளாதுயரத்தில் ஆழ்த்தும். வேதத்துக்கு வேறான திசையில் உண்மையை தேடி யாரும் இதுவரை முழு அமைதியை அடையவில்லை என்பதிலிருந்தே அவை தவறான திசைகள் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நான்தான் இந்த பரந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். என்னுடைய மாயாசக்தியால்தான் இந்த உலகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் மரணமற்று என்றும் நிரந்தரமாக முழுஅமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இருப்பவன் என்று தெரிந்து கொண்டு முக்தியடைவது என்பது வேதத்தை படிப்பதைதவிர வேறு எவ்வகையிலும் சாத்தியமில்லை.

பயிற்சிக்காக :

1. அடிப்படை கேள்விகள் என்றால் என்ன?

2. முழுஅமைதிக்கும் அடிப்படை கேள்விகளுக்கும் என்ன தொடர்பு?

3. ஏன் வேதத்தைதவிர மற்ற பாதைகள் நமக்கு முக்தியை தரா?

சுயசிந்தனைக்காக :

1. தீரவிசாரிப்பது என்றால் என்ன?