Wednesday, November 24, 2010

பாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு (பிரம்மசூத்திரம் 3.3.14-15)

கதோபநிஷத மந்திரம் ஒன்று தன்னை சரியாக அறிந்து கொண்டவன் மரணத்தை வெல்லுவான் என்று கூறுகிறது. நம்முடைய உடைமைகளை விவரித்து அவற்றின் தரத்திற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு என்ற வேதத்தின் கருத்தை விளக்குவதன் மூலம் நமது பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை இந்த பாடம் அறிவுறுத்துகிறது.

நம்முடைய உடைமைகள் யாவை?

உடல், மனம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், சேர்த்து வைத்துள்ள பாவ புண்ணியங்கள், பல பிறவிகளில் உழைத்து அதன் மூலம் சேர்த்த அறியும் திறன், விருப்பு வெறுப்புகள், பிறந்தது முதல் செயல்களை செய்து சேர்த்த அறிவு மற்றும் செயல்படும் திறன் உள்ளிட்ட நமது ஆளுமை (personality) ஆகியவை நம்முடைய நிரந்தர உடைமைகள். இவையனைத்தும் பிறவிகள்தோறும் நம்முடன் வரும். இவற்றை மூலதனமாக வைத்து இந்த பிறவியில் நாம் சம்பாதித்த பணம், பொருள், புகழ் போன்றவை நமது தற்கால உடைமைகள்.

நம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து மூப்படையும் தன்மையுடையது என்பதால் உடலைச்சார்ந்துள்ள வலிமை, திறமை ஆகியவை வயதானவுடன் குறையத்துவங்கும். எனவே மரணத்தில் இவ்வுடலை விட்டுவிட்டு அடுத்த பிறவிக்கு உண்டான உடலை நமது புண்ணியத்தின் அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த பேற்றோருக்கு பிறப்போம் என்பதும் எவ்வளவு ஆரோக்கியத்துடனும் பிறப்போம் என்பதும் நமது பாவ புண்ணியத்தால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. விருப்பு வெறுப்புகளுடன் கூடிய மனம், அறிவுடன் கூடிய புத்தி, திறனுடன் கூடிய ஐந்து புலன்கள் மற்றும் ஆற்றலுடன் கூடிய ஐந்து கரணங்கள் ஆகியவையும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகின்றன.

எனவே நமது நிரந்தர உடைமைகளின் தற்போதைய நிலைமைக்கு நாம் மட்டுமே காரணம். என் சக்கரை வியாதிக்கு அப்பாவும் முன்கோபத்திற்கு அம்மாவும் காரணம் என்று நம்முடைய நிலைக்கு யாரையும் பழிசொல்ல கூடாது. எது எப்படி இருக்கிறதோ அதற்கு நாம் மட்டுமே காரணம்.

நமது தற்கால உடைமைகள் அனைத்தும் இந்த பிறவியில் நமது செயல்பாட்டால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவற்றிற்கும் வேறு யாரும் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 1 : பெற்றோர்கள் காரணமல்ல

பெற்றோரை தேர்ந்தெடுத்ததே நாம்தான் என்பதால் நம் உடலில் உள்ள நிறை குறைகளுக்கு மரபணுக்கள் (genetics) காரணம் என்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் செய்த பாவ புண்ணியங்களுக்கு பொறுப்பேற்று கொண்டு இந்த பிறவியில் முடிந்த அளவு தர்மகாரியங்கள் செய்து மற்றவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் காரணமல்ல 2 : வளர்க்கப்பட்ட விதம் காரணமல்ல

பெற்றோர்கள் நமது ஆளுமைக்கு காரணம் என்றால் நம்முடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பதற்கு காரணம் என்ன? அதே பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே இருக்கும் ஏறுக்கு மாறான முரண்பாடுகள் நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நமது பெற்றோர்கள் துளியளவு கூட பொறுப்பல்ல என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றன.

சிறு வயதில் என் தந்தை கூறிய இந்த வாசகம்தான் என் வெற்றிக்கு காரணம் என்று வாழ்வில் வெற்றியடைந்த ஒரு சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இது முற்றிலும் தவறான  கருத்து. ஒரு தந்தையோ தாயோ தம் மக்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் உபதேசங்கள் செய்திருப்பார்கள். அவற்றில் ஏதோ ஒன்றிரண்டை மனதில் பதிய வைத்து பின்பற்ற முடிவு செய்தது நாம்தான். எனவே பெற்றோர்கள் வளர்ப்பு எப்படியிருந்தாலும் அது ஒருவரது வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 3 : ஆசிரியர் காரணமல்ல

உலகத்தில் உள்ள எந்த ஆசிரியருக்கும் அறிவை வழங்கும் திறன் கிடையவே கிடையாது. ஒரு வேளை ஒரு ஆசிரியருக்கு இந்த திறமை இருக்குமேயானால் அவர் விரும்பியவர்களுக்கெல்லாம் அவரால் அறிவை கொடுக்க முடிந்திருக்கும். நாற்பது மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் நடத்த மட்டுமே அவரால் முடியும். அவரின் வார்த்தைகளை அறிவாக மாற்றும் திறன் மாணவர்களுக்கு மட்டும்தான் உண்டு. படகிற்கு யாரையும் கரைசேர்க்கும் திறமை கிடையாது. படகை பயன் படுத்தி யார் வேண்டுமானாலும் நதியை கடக்கலாம். அது போல ஆசிரியரை பயன்படுத்தி அறிவை அடைவது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

இந்த ஆசிரியர் மிகத்திறமையாக சொல்லிக்கொடுக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. எப்படி சொல்லிக்கொடுத்தால் புரியும் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும். ஆசிரியரும் ஒரு மனிதர்தான். அவர் தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக்கொடுக்கிறார். அந்த முறை ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு ஏற்புடைய விதத்தில் இருந்தால் அவன் புரிந்து கொள்கிறான். எனவே  நன்றாக சொல்லிக்கொடுப்பது என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது புரிந்து கொள்ளும் மாணவன் மட்டுமே.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 4 : நண்பர்கள் காரணமல்ல

‘உன் நண்பர்களை பற்றிச்சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன்’ என்ற கூற்று மிகவும் உண்மை. ஏனெனில் நமது நண்பர்களை நாம்தான் தீர்மானிக்கிறோம். இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் நாம் இப்படியிருப்பதால் இது போன்ற நண்பர்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர நண்பர்கள் நம் நிலமைக்கு காரணம் அல்ல. நமது விருப்பு வெறுப்புகள் நம்முடன் பிறந்தவை. எனவே நமக்கு பிடித்தவர்களை நண்பர்களாக நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்து கொண்ட பழக்கவழக்கங்கள் நண்பர்களை சார்ந்து இருப்பதில்லை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 5 : பெரியவர்கள் காரணமல்ல

அலுவலகத்தில் உடன் உழைப்பவர்களோ அல்லது நமது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களோ நமது நிலைக்கு காரணம் அல்ல. நமது திறமை மற்றும் நமது பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 6 : கிரகங்கள் காரணமல்ல

நான் இப்பொழுது கஷ்டபடுவதற்கு சனி கிரகம் காரணம் என்றோ பண வரவுக்கு குரு பெயர்ச்சி காரணம் என்றோ கூறுவது முட்டாள்தனம். ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் என்றால் சூரியன் எப்பொழுது மறையும் என்பதை கடிகாரம் முடிவுசெய்வதாக அர்த்தம் செய்து கொள்ள கூடாது. ஜாதகம், ஜோசியம், எண் சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவை அனைத்தும் கடிகாரத்தைப்போல நமக்கு நன்மை தீமைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் கருவிகளே தவிர நமது நிலையை தீர்மானிப்பவை அல்ல. நமக்கு நல்ல காலமா அல்லது கெட்டகாலமா என்பதை முடிவு செய்வது நமது செயல்களால் விளைந்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

ஜோதிடர் நமக்கு கஷ்டகாலம் என்பதை ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஷ்டகாலம் என்பதால்தான் நாம் அவரிடம் செல்கிறோம். அவர் நமது கஷ்டகாலத்தை நீக்குவதற்காக மூன்று சினிமா பார், ஊட்டிக்கு உல்லாச பயணம் சென்று வா என்பது போன்ற இன்பகரமான பரிகாரங்களை சொல்வதில்லை. ஏற்கனவே படும் கஷ்டம் போதாதென்று அவர் கூறும் பரிகாரங்களை வேறு செய்யவேண்டும். மூன்று நாட்களில் ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மருத்துவர் கொடுத்த மருந்தினாலா அல்லது அதை சாப்பிடாமல் விட்டிருந்தாலும் சரியாகியிருக்குமா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியாதோ அது போல நம் கஷ்டகாலம் முடிந்ததற்கு பரிகாரம் செய்ததுதான் காரணம் என்று  சொல்லவே முடியாது. பரிகாரம் செய்ததே நமது கஷ்டகாலத்தின் ஒரு பகுதிதான்.  எனவே நமது கஷ்டகாலத்துக்கு கிரகங்களை குறை சொல்வது பொறுப்பற்ற தன்மை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 7 : கடவுள் காரணமல்ல

கடவுளுக்கு நமது கஷ்டத்தை போக்கும் சக்தி கிடையாது. சம்பளத்தை பட்டுவாடா செய்யும் கணக்கருக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் கிடையாது. அது போல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றிக்கு சேரவேண்டிய பாவ புண்ணியங்களின் விளைவுகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் கடவுளுக்கு பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரம் கிடையாது.

இதனால் கடவுளை பிரார்த்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூற முடியாது. நாம் அனுபவிக்க வேண்டிய துன்பம் எவ்விதத்திலும் குறையாவிட்டாலும் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் முறையிடுவதால் நமது மனதின் பாரம் குறைந்து சிறிது அமைதி ஏற்பட்டு துன்பத்தை எதிர்நோக்கும் சக்தி அதிகரிக்கும்.

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது துன்பங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது நமக்கு நடப்பது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என்பதை தீர்மானிப்பது நமது முந்தய செயல்கள். அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறுகிறோம் என்பது நமது மனத்திண்மையையும் திறமையையும் பொறுத்து உள்ளது. எனவே நமது தற்போதைய நிலைக்கு நாம் மட்டுமே காரணமே தவிர கடவுள் காரணமல்ல.

மற்றவர்கள் காரணமல்ல 8 : சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல

தற்செயலாக நடந்தது என்றோ விபத்து என்றோ நம் வாழ்வில் எதுவும் எப்பொழுதும் நடப்பதில்லை. அறியாமை காரணமாக நாம் இது போன்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் நாம்தான். அதன் மூலம் அதிக அறிவை பெற்று வாழ்வில் முன்னேறுவதும் நாம்தான்.

நம் வாழ்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

முடிவுரை :

நம் வாழ்வுக்கு நாம் முழுப்பொறுப்பேற்று கொள்வது அவசியம்.  அதாவது நாம் இன்று இந்த நிலையில் இருக்க நூறு சதவிகிதம் நாம் மட்டுமே காரணம் என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடவுள் போன்றோரின் பங்கு பூஜ்யம் என்றும் உணர்ந்து கொண்டால்தான் இனி நம் வாழ்வு இன்பமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் முறையாக செய்வோம். இல்லையெனில் கிரகங்களின் போக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து காலத்தை விரயம் செய்து கொண்டு இருப்போம்.

தம் வாழ்வுக்கு முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து உழைத்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டு தகுந்த ஆசிரியரின் துணையுடன் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்து கொண்டு மரணத்தை வெல்லுவார்கள்.

பயிற்சிக்காக :

1. நம் உடைமைகள் எந்த அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

2.மற்றவர்கள் என் வாழ்வுக்கு பொறுப்பல்ல என்பதை விவரித்த எட்டு தலைப்புகள் யாவை?

3. நம் உடைமைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.மரணத்தை எப்படி வெல்ல முடியும்?

2.என்றும் இன்பமாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பகுதியில் கொடுக்கபட்ட பாடங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரிக்கவும்.

Monday, November 22, 2010

பாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம் (பிரம்மசூத்திரம் 3.3.11-13)

மனிதர்கள் பலவிதம். அவர்களின் அறியும் திறன் வேறுபட்டது. அனைவரும் புரிந்து கொண்டு நடைமுறையில் பின்பற்றும் விதத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கருத்தை ஐந்து நிலைகளில் இந்த பாடம் விளக்குகிறது.

நிலை 1 : உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்வது

உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவு எப்படியாவது கிடைத்துவிடும். அதற்காக அதிகம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. தாங்க முடியாத குளிர் மற்றும் பனி பொழியும் இடங்களில் வாழும் மக்கள் கூட விலங்குகளின் தோலை ஆடையாகவும் இக்ளு பனிவீடுகளை கட்டிக்கொண்டும் மிகக்குறைந்த வேலைகள் செய்து வாழ்நாளை கழித்து விடலாம். ஆனால் இம்மாதிரி விலங்குகளை போல வாழ்வது மனிதனுக்கு தகாது. எனவே ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று வேதம் உபதேசித்து மக்களை அதிக வேலையில் ஈடு பட தூண்டுகிறது.

இந்த நிலையில் இருக்கும் மக்கள் முதலில் கல்வி பெற வேண்டும். பொதுஜனம் என்ற போர்வையில் எவ்வித தனித்தன்மையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்தி கொடுப்பது கல்வி. கல்வி பெற்ற பின் எதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு தனக்கென்று வாழ்வில் ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் குழந்தைகள் நன்றாக படித்து நிறைய பொருள் சம்பாதிக்க கூடிய நிலைக்கு வரவேண்டும் என்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். இதை தவிர தங்கள் வாழ்வில் தனக்காகவென்று ஒரு குறிக்கோளை முன்வைத்து அதற்காக உழைப்பது அவசியம்.

கல்வி மற்றும் வாழ்வில் ஒரு குறிக்கோளுடன் உழைப்பது ஆகிய இரண்டு அம்சங்கள் ஒரு மனிதனை இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்திவிடும்.

நிலை 2 : இன்பத்திற்கு உலகத்தை சார்ந்து இருத்தல்

அடிப்படைத்தேவைகளை தாண்டி ஒரு குறிக்கோளை அடைய உழைக்கும் பொழுது பணவரவு அதிகமாகும். சில மனிதர்கள் பணம் வர ஆரம்பித்தவுடன் குறிக்கோளை மறந்து விட்டு மனம் போன போக்கில் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த போக்கை தடுக்க கூட்டுக்குடும்பம், பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது சான்றோர்களின் அறிவுரை அவசியம். பணத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை விட எப்படி செலவு செய்யகூடாது என்பதை முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வசதிகளை அதிகபடுத்திக்கொண்டு  இன்னும் பணம் வேண்டும் என்ற ஏக்கம் பொதுவாக தொடரும். கார் ஆடம்பரம் என்ற காலம் போய் இரண்டு கார்கள் அத்தியாவசியம் என்று எல்லா ஆடம்பரங்களையும் அத்தியாவசிய பொருள்களாக தொடர்ந்து மாற்றி காசேதான் கடவுளடா என்ற மனநிலை அனைவருக்கும் வந்துவிடும்.

போதிய அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்பது இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர ஒரு தடையாய் இருக்காது. தொடர்ந்து உழைத்து அறிவு மற்றும் எதையும் தாங்கும் இதயம் ஆகியவற்றை பெறுவது மட்டுமே இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர தேவையான அம்சங்கள்.

நிலை 3 : நிம்மதிக்கும் இன்பத்திற்கும் கடவுளை சார்ந்து இருத்தல்

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ‘போதும்’ என்ற நிலையை அடையவே முடியாது என்பது புரிந்தவுடன் முந்தைய நிலையிலிருந்து மக்கள் இந்த நிலைக்கு உயர்வார்கள். இதுவரை கடவுளிடம் எனக்கு இந்த பிரச்சனை தீரவேண்டும் என்று மட்டுமே பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கடவுளிடம் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் உறுதியான மனம் வேண்டும் என கேட்பார்கள். இன்னும் பணம் வேண்டும் என்று கேட்பதற்கு பதில் நல்ல புத்தியை கொடுக்கும் ஆசிரியரை தர வேண்டும் என பிரார்த்திப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருள் இந்த நிலையில் உள்ளவர்களுக்கு பின்வருமாறு புரிய ஆரம்பிக்கும். செய்யும் அனைத்து செயல்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாக செய்யவேண்டும் என்றும் செய்த வேலைக்கு வரும் பலன் எப்படியிருந்தாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் புரிந்து கொண்டு அதன்படி தொடர்ந்து உழைப்பார்கள்.

வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் கடவுளின் கிருபையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்ததும் இவர்கள் அடுத்த நிலைக்கு தயாராவார்கள்.

நிலை 4 : இன்பமாக இருப்பதற்கு தன்னை மட்டும் சார்ந்து இருத்தல்

என்றும் குறையாத இன்பத்துடனும் தடையில்லாத நிம்மதியுடனும் என் வாழ்வை வாழ்வது என் கையில்தான் இருக்கிறது என்ற உறுதி ஏற்பட்டவுடன் மக்கள் இந்த நிலைக்கு முன்னேறுவார்கள். செய்த புண்ணியத்தாலும் கடவுளின் அருளாலும் தகுந்த ஆசிரியரை பெற்று இவர்கள் வேதத்தை முறையாக பயின்று கடவுளை அறிந்து கொள்ள முயல்வார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது இவர்களுக்கு ஒரு புதிய பொருளைத்தரும். அதுவரை இன்னும் பணம் சம்பாதித்து வீடு வாகனம் என்று வாங்கி சமூகத்தில் ஒரு மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக உழைத்தவர்கள் இந்த நிலைக்கு வந்த பின் செய்யும் தொழிலை கடவுளின் செயலாக கருதி சுயநலம் ஏதுமின்றி சேவை மனப்பான்மையுடன் உழைப்பார்கள்.

தொடர்ந்து கர்மயோகம் செய்து மனதை செம்மை படுத்திக்கொள்ளும் அதே வேளையில் முறையாக வேதத்தை தகுந்த ஆசிரியரிடம் பயிலுவது இந்த நிலையில் இருப்பவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும். உலகம் நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டதால் செய்யும் தொழிலை தெய்வத்தின் செயலாக செய்வதுடன் தங்களின் முக்கிய குறிக்கோளான வேதம் பயிலுவதற்கு இவர்கள் வேண்டிய நேரத்தை செலவிடுவார்கள்.

நிலை 5 : யாரையும் சார்ந்திராமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பவர்கள்

வேதத்தை முறையாக கற்றுத்தேர்ந்தவுடன் ஆனந்தத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் உணர்ந்து கொண்டு என்றும் நிம்மதியாக இருப்பார்கள். மற்றவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். ஆனால் இவர்களோ ஆனந்தமாக இருப்பதால் உழைப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற தொடரின் இறுதியான பொருள் இவர்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயா சக்தி என்றும் மாற்றமடையும் இவ்வுலகமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து நிகழும் மாற்றத்தின் ஒரு சில பகுதிகளை தொழில் என்ற பெயரில் மக்கள் வழங்கி வருகிறார்கள். உண்மையில் தொழில்தான் தெய்வம். பரமன் மற்றும் பரமனின் சக்தியான மாயை இவ்விரண்டின் சேர்க்கைதான் கடவுள். எனவே நாம் அனைவர் செய்யும் தொழிலும் அதன் ஆதாரமான பரமனையும் சேர்த்து செய்யும் தொழிலே தெய்வம் என்று கடவுளின் உண்மை சொரூபத்தை வேதம் நமக்கு காட்டி கொடுக்கிறது.

முடிவுரை :

செய்யும் தொழிலே தெய்வம். எனவே நான் வேலை செய்தால் மட்டும் போதும், கடவுளை தொழ வேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ளாமல் யாராலும் தங்கள் இறுதிக்குறிக்கோளான நிலையான இன்பத்தை அடையவே முடியாது. எனவே கடவுளை அறிந்து கொள்ள தொழில் செய்வது ஒரு ஏணிப்படி என்ற உண்மையை உணர்வது அவசியம்.

செய்யும் தொழிலை தெய்வமாக கருதி வேலை செய்ய ஆரம்பித்து, பின் செய்யும் தொழிலை தெய்வத்துக்காக செய்து அதற்கு பின் செய்யும் தொழிலை தெய்வத்தின் தொழிலாக செய்து கடைசியாக செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் வேதத்தின் குறிக்கோள்.

பரமனை ஆதாரமாக கொண்டு இவ்வுலகம் இயங்கி வருவதால் இதில் நடக்கும் அனைத்து தொழில்களிலும்  இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் ஆகிய பரமனின் மூன்று தன்மைகளும் பிரதிபலிக்கும். தொழில் செய்பவரை செய்விப்பவர் ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று பாடும் கடவுள். ஒவ்வொரு தொழிலும் தொழில் செய்பவரின் அறிவை தொடர்ந்து அதிகபடுத்தி ‘நான்தான் அறிவுருவான பரமன்’ என்ற அறிவு ஏற்படும்வரை அவருக்கு உதவுகிறது. இந்த அறிவை அடைந்தவர்கள் செய்யும் தொழிலை ஆனந்தமாக செய்வர்.

மற்றவர்கள் இந்த அறிவை அடையும் வரை செய்யும் தொழில் தெய்வம் என்பதால் அதை ஆனந்தமாக செய்யவேண்டும்.

பயிற்சிக்காக :

1.மக்களை ஐந்து நிலைகளில் இருப்பவர்களாக பிரிப்பதன் அடிப்படை என்ன?

2. இந்த ஐந்து நிலைகள் என்னென்ன? ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்கு செல்ல செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிடவும்.

3. செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்ள கூடாது?

4. செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருளை ஐந்து நிலைகளில் உள்ள மனிதர்களின் நோக்கில் விளக்குக.

5. பரமனின் மூன்று தன்மைகள் எவ்வாறு தொழிலில் பிரதிபலிக்கின்றன.

சுயசிந்தனைக்காக :

1. ‘நான் என்ன நிலையில் இருக்கிறேன்?’ என்பதை சுய ஆய்வு செய்க.

2. முதல் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்து கடைசி நிலைக்கு செல்ல எவ்வளவு காலம் பிடிக்கும்?

பாடம் 105: ஊரோடு ஒத்துவாழ் (பிரம்மசூத்திரம் 3.3.10)

யாராலும் தனித்திருக்க முடியாது. ஏதாவது ஒருவகையில் உலகத்தை சார்ந்தே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஊரோடு ஒத்துவாழ் என்று அறிவுருத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்படி ஊருடன் ஒத்துவாழ்வது என்ற வழிமுறைகளையும் இந்த பாடம் விளக்குகிறது.

‘ஊருடன் கூடிவாழ்’ என்ற ஔவையாரின் ஆத்திசூடி, நாளடைவில் ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்ற முதுமொழியாக மாறியதுடன் வேதத்தின் கருத்திலிருந்து வேறுபட்டு தவறான பொருளில் மக்களிடையே வழக்கில் இருந்து வருகிறது.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் என்ன அர்த்தம்?

தவறான அர்த்தம் 1: மந்தையில் ஆடாக வாழ்.

எல்லோரின் வாழ்க்கையும் படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, திருமணம் செய்துகொள்வது, பிள்ளைகள் பெற்றுக்கொள்வது என்பது போல் அமைந்திருப்பதால் நாமும் அதுபோல மூன்று வயதானால் பள்ளிக்கு செல்லவேண்டும் முப்பது வயதானால் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது முதல் தவறான அர்த்தம். எல்லோரும் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பதால் நாமும் அதை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஏன், எதற்கு என்று நமது புத்தியை பயன்படுத்தி கேள்விகள் கேட்கவேண்டும்.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று வாழத்துவங்கிய நாம் பின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்து பிறகு குருவின் கருணையால் அறிவைபெறுகிறோம். அதன் பின் மந்தையில் ஆடாக வாழக்கூடாது.

நமது அறிவின் திறத்தை பயன்படுத்தி நமக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில்தான் நாம் நம் வாழ்க்கைப்பயணத்தை நடத்த வேண்டும்.

தவறான அர்த்தம் 2: மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடு.

நாம் இந்த செயலை செய்தால் ஊர் என்ன நினைக்கும் என்று கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் ஒரு செயலை செய்தால் அதைபற்றி ஊரில் ஒன்பது கருத்துக்கள் நிலவும். புத்தர் தன் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு காட்டுக்கு சென்றது சரியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்கள் சிற்றறிவை பயன்படுத்தி வெவ்வேறு பதிலை சொல்வார்கள். யார் பேச்சை கேட்பது? மேலும் நாம் எது செய்தாலும் அதை நமக்கு வேண்டியவர்கள் சரியென்றும் வேண்டாதவர்கள் தவறு என்றும் சொல்வார்கள். எனவே நம்மை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கருத்துப்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கூடாது. கருத்துக்களை கேட்பதில் தவறில்லை. கருத்துக்களை கேட்டபின் நமது அறிவுக்கு எது சரியென்று படுகிறதோ அது ஊரின் கருத்துக்கு மாறாக இருந்தாலும் அதைத்தான் நாம் செய்யவேண்டும்.

நமது அறிவுக்கு சரியான வழி புலப்படாவிட்டால் சான்றோரை அணுகி அவரது கருத்தை கேட்கவேண்டும். வயதானவர்கள் எல்லோரும் சான்றோர்கள் அல்ல.  வேதத்தை தங்கள் குருவிடமிருந்து படித்து தேர்ந்தவர்களே சான்றோர்கள்.

எனவே ஊருடன் ஒத்துவாழ் என்பதற்கு (சான்றோர்களின் அறிவுரையைத்தவிர) மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது பொருள் அல்ல.

தவறான அர்த்தம் 3: காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்

எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்பதற்காக நாமும் அதுபோல் அதர்மமாக வாழக்கூடாது. தர்மம் என்றும் மாறாது. தர்மப்படிதான் நாம் வாழவேண்டும். ஊர் முழுவதும் அதர்மமாக நடந்தால் கூட ஊரோடு ஒத்துவாழக்கூடாது. பிழைக்க தெரியாதவன் என்ற பட்டத்தை ஊர் நமக்கு கொடுத்தாலும் பணம் சம்பாதிப்பதற்காக எவ்வித குறுக்கு வழியிலும் ஈடுபடாமல் நாணயமாகவும் நேர்மையாகவும் வாழ வேண்டும்.

சரியான அர்த்தம் 1: ஊர் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்

எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எனவே ஊர் எப்படியிருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொண்டு அதில் எந்த குறையையும் கண்டுபிடிக்க கூடாது. காலம் கெட்டு விட்டது என்றும், கலி முற்றிவிட்டது என்றும் உலகம் போகிற போக்கை கண்டிப்பதோ சலித்து கொள்வதோ கூடாது.

அதே சமயத்தில் உலகத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, அறியாமை, ஆரோக்கியமின்மை ஆகியவற்றை அகற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டாமென்று அர்த்தம் செய்து கொள்ள கூடாது. உலகத்தை பாலும் தேனும் ஓடும் சுவர்க்கபுரியாக மாற்ற நம்மால் என்னென்ன வழிகளில் வேலை செய்யமுடியுமோ அவற்றை செய்வது மிக அவசியம்.

சாணை பிடிக்கும் கல்லை உபயோகபடுத்தி கத்தியை தீட்டி அதை கூர்மை படுத்துவது போல உலகத்தை சீர்திருத்த முயன்று நமது புத்தியை தீட்டி அதை கூர்மை படுத்திக்கொள்ள வேண்டும். உலகம் மாறுகிறதா என்பது முக்கியமல்ல. நமது திறமைகளையும், அறிவின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வளருகிறோமா என்பது தான் முக்கியம். நம்மை நாம் உயர்த்திக்கொள்ள உலகத்தை மாற்றியமைக்க முயல்வதை தவிர வேறு வழியில்லை.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் ஊரை திருத்த தொடர்ந்து உழைத்து நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது சரியான பொருள்.

சரியான அர்த்தம் 2: ஊருக்கு உதவி செய்

நாடென செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது தவறு. நீ என்ன செய்தாய் அதற்கு என்பதே சரியான சிந்தனை. நம் வளர்ச்சிக்கு தாய், தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றத்தார்கள் மற்றும் வெவ்வேறு துறையில் உழைக்கும் பொதுமக்கள் என அனைவரும் காரணம். இந்த நன்றிக்கடனை தீர்ப்பது நமது கடமை.

அமெரிக்க செல்வந்தர் ஒருவர் ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக சுவாமி விவேகானந்தர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு விவேகானந்தரின் மறுமொழிக்காக காத்திருந்தபோது தலையை நிமிர்த்தாமலேயே இந்த தொகையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளீர்கள் என்றார் சுவாமிஜி. ஒரு எறும்பு கூட நமது உதவியை எதிர்பார்த்து வாழ்வதில்லை.

மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் நம்மால் முடிந்தவரை உதவி செய்துவிட்டு அந்த வாய்ப்பை நமக்கு கொடுத்ததற்கு அவருக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும்.

ஊரோடு ஒத்துவாழ் என்றால் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நம்மால் முடிந்த பண உதவியையும் உடல் உழைப்பயும் தானமாக தர வேண்டும் என்று பொருள்.  

சரியான அர்த்தம் 3: ஊருடன் உறவு நம் கர்ம வினைப்படிதான் அமையும்

நமது பாவபுண்ணியங்களின் விளைவாக நமக்கு கிடைக்கவேண்டிய அனுபவங்களை பெற்றுத்தரும் விதமாகவே உலகத்துடன் நமக்கு ஏற்படும் தொடர்புகள் அமைகின்றன. காய்கறி நறுக்கும்பொழுது இடது கைவிரல் மேல் கத்தி பட்டு ரத்தம் வந்தால் நாம் கத்தியையோ வலது கரத்தையோ கண்டிப்பதில்லை. நமக்கு யாரேனும் துன்பம் கொடுத்தால் கத்தியைப்போல அவரும் ஒரு உபகரணமாக கடவுளின் கையில் இயங்குகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் திருப்பி அடிக்காமல் மறு கன்னத்தை காண்பிக்க வேண்டும் என்பதன் பொருள் இதுவே. நம் கன்னத்தில் அடி விழுந்தால் அது நமது பாவத்தின் விளைவு. அதற்கு அடித்தவன் ஒரு நிமித்தமாக பயன்பட்டிருக்கிறான். எனவே அவன் மேல் கோபப்படுவதிலோ திருப்பி அடிப்பதன் மூலம் நமது பாவத்தை அதிகரித்துக்கொள்வதோ தவறு.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் நமக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு மற்றவர்கள்தான் பொறுப்பு என்று தவறாக எண்ணாமல் எப்பொழுதும் நன்றி உணர்வுடன் எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும்.

ஊரோடு ஒத்து வாழ்வது எப்படி?

சரியான வழி 1: சுயநலத்துடன் செயல்படவேண்டும்

பொதுநலத்திற்காக சுயநலத்தை தியாகம் செய்யவேண்டும் என்பது மிகவும் தவறான பிரச்சாரம். வாழ்வில் எப்பொழுதும் நாம் சுயநலத்துடனேயே எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம். செய்ய வேண்டும்.

சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும். முதலில் நாம் நன்றாக இருக்க வேண்டும். பின் நம் குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், நாடு என்று இதே வரிசையில்தான் நமது பொருளையும் உழைப்பையும் செலவிடவேண்டும். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்.

தர்மம் தலை காக்கும். எவ்வளவுதான் பொருள் சேர்த்து வைத்தாலும் கடைசி காலத்தில் நமக்கு துணைவரப்போவது நாம் செய்யும் தர்ம காரியங்கள்தான். ஆகவே நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட பின் முடிந்தவரை மற்ற ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இதுவும் தன்னலம்தான். நாம் செய்யும் அனைத்து நல்ல காரியங்களாலும் நமக்கு புண்ணியம் சேரும். எனவே முடிந்தவரை நிறைய புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோமாலியாவில் பட்டினியால் பலபேர் மரணமடைகிறார்கள் என்ற செய்தியை கேட்டு வருத்தபட்டு பிரயோஜனம் எதுவும் இல்லை. நாம் வருத்தப்படுவதால் அவர்களுக்கு சாப்பாடு கிடைத்துவிடப்போவதில்லை. நம்மால் முடிந்தால் அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளித்து கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம்.

மற்றவர்களை ஏமாற்றியோ துன்புறுத்தியோ நாம் நமது காரியங்களை சாதித்துக்கொள்ள முயல்வது தவறு. ஏனெனில் இது போன்ற பாவங்களுக்கு நமக்கு சரியான தண்டனை கிடைக்கும்.  

சரியான வழி 2: சுயகட்டுப்பாட்டுடன் இருக்க பழக வேண்டும்

நமது விருப்பு வெறுப்புகளை நாம் ஜெயிக்க வேண்டும். எனக்கு என்ன பிடிக்குமோ அது கிடைத்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும், இல்லாவிட்டால் நான் துன்பத்தில் மூழ்கிவிடுவேன் என்ற கட்டாயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். ஊர் எப்படியிருந்தாலும் நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிப்பேன் என்ற நிலையை அடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்ததை விரும்பும் சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நுழைவுத்தேர்வு எழுதும் பொழுது வாழ்வில் முதல் முறையாக விரும்புவது கிடைக்குமா அல்லது கிடைத்ததை விரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்ற கேள்வி எழும். அதை தொடர்ந்து பிடித்த வேலை கிடைக்குமா என்பது போல் வாழ்வு முழுவதும் எதிர்பார்ப்பில் கழிக்க கூடாது. நமது இன்ப துன்பங்களை ஊர் தீர்மானிக்கும்படி விடாமல் சுய கட்டுப்பாட்டின் மூலம் எது கிடைத்தாலும் இன்பமாக இருக்க கற்றுக்கொள்ள பெற்றோர் தேர்ந்தெடுப்பவரை வாழ்க்கைத்துணைவராக ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.

மனதுக்கு பிடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை மணம் செய்து கொள்ள கூடாது என்பது வேதம் கூறும் தெளிவான முடிவு. மனதுக்கு பிடித்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டால் பிறகு பிடிக்காமல் போனால் விவாகரத்து செய்யவேண்டி வரும். நமக்கு இன்று பிடிப்பது என்றும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பத்து வருடங்களுக்கு முன் ரசித்து பார்த்த திரைபடத்தை இப்பொழுது பத்து நிமிடம்கூட பார்க்கமுடிவதில்லை. நாளுக்கு நாள் நாம் வளர்கிறோம். எனவே நமக்கு பிடித்தது பிடிக்காதது ஆகியவை நிச்சயம் மாறும். அதேபோல் நம் வாழ்க்கைதுணையாய் வருபவரும் தொடர்ந்து மாறுவார். எனவே இன்று மிகவும் பிடித்தவராயிருப்பவரை பத்து வருடங்களுக்கு பிறகும் அதே அளவு பிடிக்கும் என்று சொல்லமுடியாது.


எனவே பெற்றோர் பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்தவரை மணந்து கொண்டு மரணம் வரை அவருடன் இன்பமாக வாழ முடிவு செய்வது ஊரோடு ஒத்துவாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். நம்முடன் உறவாடுபவர்கள் எப்படியிருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. எனது வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான மக்களிடமும் என்னால் மகிழ்ச்சியாக தொடர்பு கொள்ள முடியும் என்ற திறமையை வெகு விரைவில் நாம் அடைய வேண்டும்.

சாலையில் பயணம் செய்யும் பொழுது நம்முடைய வாகனத்தை மட்டும்தான் நம்மால் கட்டுபடுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் மற்ற எந்த வாகன ஓட்டியின் போக்கையும் நாம் தீர்மானிக்க முடியாது. யார் எப்படி அவர்கள் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நாம் செல்லவேண்டிய இடத்துக்கு எவ்வித விபத்திலும் சிக்கிகொள்ளாமல் பத்திரமாக சென்றடைவது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது. எவ்வித சாலைவிதிகளையும் கடைபிடிக்காமல் முரட்டுத்தனமாக வண்டியோட்டுபவர்களை திட்ட துவங்கினால் நமது ரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்வதை தவிர வேறு ஒரு லாபமுமில்ல.

நாம் யாரையும் திறுத்தவோ மாற்றவோ முடியாது. நமது கட்டுப்பாட்டுக்குட்பட்டு செயல்படும் ஒரே நபர் நாம் மட்டும்தான். நம் மனதை கட்டுபடுத்துவதை விட்டு ஊர் முழுவதையும் மாற்றி அமைப்பேன் என்று முயல்வது அறிவீனம். மற்றவர்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறிது காலத்துக்கு பின் மாறிவிடுவார்கள் என்று அனாவசியமாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அனைவரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டால் ஊரோடு ஒத்து வாழலாம்.

சரியான வழி 3: பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுக்கொள்ளல்

எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்குத்தேவையான நேரத்தை கொடுத்து முழுமனதுடன் செய்யவேண்டும். விதை விதைத்ததும் பழம் வந்து விட்டதா என்று நிமிர்ந்து தேடகூடாது. செய்த காரியத்தின் பலன் வரும்பொழுது வரட்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பலன் நாம் எதிர்பார்த்த படி அமையாவிட்டால் ஏமாற்றமோ கோபமோ அடையாமல் அதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

‘அவன் என்னை திட்டினான். நான் பொறுமையாகத்தான் இருந்தேன். அவன் மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை பேசியதும் வேறு வழியில்லாமல் அவனை அடித்துவிட்டேன்.’ இதுபோல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் வரை நமக்கு தொடர்ந்து துன்பங்களும் கஷ்டகாலமும் வந்த வண்ணம்தான் இருக்கும். பிடிக்காதவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருக்கவேண்டும். ஆனால் நம் அன்றாட வாழ்வில் வேறு வழியில்லாமல் பிடிக்காத ஒரு சிலரிடம் பழக வேண்டிய கட்டாயம் ஏற்படுவது நமக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுத்தருவதற்காகத்தான்.

ஊருடன் ஒத்து வாழ ஊர் எப்படியிருந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

முடிவுரை :

இந்த உலகம் படைக்கபட்டது நமது இன்பத்திற்காக மட்டுமே. பச்சைக்கிளிகள் தோளோடு, பாட்டுக்குயிலோ மனதோடு, பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை என்பது உண்மையான வார்த்தைகள். ஆனால் இதுபோல் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆனந்தத்தை அடையாளம் கண்டுகொள்ள முதலில் நமது மனதை திருத்திக்கொள்ள வேண்டும்.

மனம் விரும்புகிறது என்று ஒரு காரியத்தை செய்யாமல் கிடைப்பதை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் வாழ்ந்தால் மனம் செம்மையடைந்து வேதம் கூறும் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். அதன் பின் மனம் எதை விரும்புகிறதோ அதை மட்டும் செய்யலாம். வாழ்வு முழுவதும் பிடிக்காததை ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருப்பது அவசியமில்லை. பயிற்சிக்காலத்தில் ஊருடன் ஒத்து வாழ்வதை ஒழுங்காக கற்றுக்கொண்டால் அதன் பின் நமக்கு துன்பம் தரும் நிகழ்வுகள் என்று எதுவும் வாழ்வில் நிகழாது. நமது உலகம் சொர்க்கலோகமாக மாறிவிடும். நாம் எப்பொழுதும் நமக்கு பிடித்த காரியங்களை மட்டும் தடையில்லாமல் செய்துகொண்டு இன்பமாக வாழலாம்.

நாம் ஒருவர் இன்பமாக இருந்தால் அந்த இன்பம் நமது குடும்பம், சுற்றம், நண்பர்கள் சமூகம் என்று அனைவருக்கும் படிப்படியாக பரவும். எனவே நமக்கும் ஊருக்கும் நன்மை செய்ய நாம் ஊருடன் ஒத்து வாழ வேண்டும்.

பயிற்சிக்காக :

1.ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று தவறான அர்த்தங்கள் என்னென்ன?

2 ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று சரியான அர்த்தங்கள் என்னென்ன?

3. ஊரோடு ஒத்து வாழ கொடுக்கப்பட்ட மூன்று வழிமுறைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.சான்றோர் என்பவர் யார் என்று அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து சால் ஊன்றிய தூண் என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.

2.தர்மம் எப்படி தலை காக்கும்?