Friday, November 19, 2010

பாடம் 104: செய்வன திருந்தச்செய் (பிரம்மசூத்திரம் 3.3.9)

என்ன வேலை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டிய அவசியத்தை விளக்குவதுடன் ஒரு வேலையை எப்படி சரியாக செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் இந்த பாடம் அளிக்கிறது.

சரியாக செய்வது என்றால் என்ன?

பலனை வைத்து செயல்முறையின் தரத்தை முடிவு செய்ய கூடாது. எல்லா வேலைகளும் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துத்தான் செய்யப்படுகின்றன என்றாலும் அந்த வேலை எப்படி செய்யப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அது சரியாக செய்யப்பட்டதா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி உடல்நலம் பெற்று தேர்ந்தால் மருத்துவர் சிறப்பாக வேலை செய்தார் என்றும் அவ்வாறில்லாமல் நோயாளி இறந்துவிட்டால் மருத்துவர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூற முடியாது.

செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவேண்டும் என சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்பது தவறான கருத்து. செய்வனவற்றை சிறப்பாக செய்வது எப்படி என்பதை புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாமே தவிர புரிந்துகொண்ட பின் நடைமுறையில் அதை கடைபிடிப்பது மிகவும் எளிது.

சரியாக செய்வது என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உலகின் தன்மை பற்றிய ஐந்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

முதல் உண்மை: குற்றமில்லாத பூர்ணத்துவம் (flawless perfection) அடையவே முடியாத ஒன்று.   எந்த வேலையையும் இன்னும் நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பை வழங்குவதற்காகவே யாராலும் எப்பொழுதும் எல்லா வேலைகளையும் மிகச்சரியாக செய்யமுடியாதபடி கடவுள் இவ்வுலகை படைத்திருக்கிறார்.

இரண்டாம் உண்மை: உலகில் சாதிக்கவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதனால் உலகத்திற்கு எவ்வித நன்மையோ தீமையோ ஏற்படுவதில்லை. சாப்பாட்டு இலைமீது ஒரு எறும்பு வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம்கூட சாப்பிடாமல் சென்றுவிட்டாலோ நமக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அது போல இந்த உலகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் தனிமனிதனின் செயல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

மூன்றாம் உண்மை: வேலை செய்வது மற்றவர்களின் அங்கீகாரத்தையோ பாராட்டையோ பெறுவதற்காக அன்று. சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்வதையெல்லாம் எல்லோரும் கொண்டாடுவார்கள். எழுத்தாளர் சுஜாதா தான் வண்ணான் கணக்கை எழுதினால் அதை பிரசூரிக்ககூட பத்திரிக்கைகள் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாம் எவ்வளவுதான் நன்றாக வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கவும் நிறைய பேர் இருப்பார்கள்.

நான்காம் உண்மை: வேலையை செய்யத்துவங்குவதற்கு முன் குற்றமில்லா பூர்ணத்துவத்தை அடைய வேண்டுமென்றும், தனது உழைப்பால் வேலை வழங்குனர், வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்றும் எல்லோரும் மிக நன்றாக செய்தாய் என்று பாராட்டும்படி வேலை செய்யவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பது அவசியம்.  எப்படியும் நல்ல பெயர் வாங்கமுடியாது, எனவே எப்படி செய்தால் என்ன என்பது போன்ற அலட்சியத்தோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக செய்த வேலையாகாது. முடியாது என்பதால் முயற்சி செய்யகூடாது என்று அர்த்தமில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற காரணத்தாலேயே எவ்வளவு முயன்றாலும் புதியதோர் உலகத்தை செய்யவே முடியாதபடி கடவுள் அனைத்தையும் படைத்திருக்கிறார்.

ஐந்தாம் உண்மை: வேலை சிறப்பாக செய்யப்பட்டதா இல்லையா என்பதை அவரவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

செய்வதை சிறப்பாக செய்யும் விதம்

முதல் படி : வேலையின் நோக்கம்

நாம் செய்யும் வேலையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு தெளிவுக்கு வர வேண்டும். மேலே சொல்லப்பட்ட நான்காம் உண்மையில் பொதுவாக விவரிக்கபட்ட எதிர்பார்ப்பை ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கேற்ற குறிப்பிட்ட நோக்கங்களாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை மிகவும் குறைந்த செலவில் விரைவில் முழுவதும் குணப்படுத்துவது அல்லது நல்ல இனிமையான மருத்துவர் என்று எல்லோரும் புகழும்படி சிகிச்சையளிப்பது என்பது போன்று தான் வேலை செய்வதன் நோக்கம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் படி: செயல் பட்டியல் (To Do List)

நமது வேலையின் நோக்கத்தை நிறைவேற்ற இன்று செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் இந்த பட்டியலை சரிபார்த்து இன்று இந்த அத்தனை செயல்களையும் செய்து முடிப்பேன் என்று மனதுக்குள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்க போகுமுன் எவ்வளவு செயல்களை செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து மறுநாளுக்கு உண்டான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.


செயல் பட்டியல் எழுதும் விதம்

1. செயலினால் எதிர்பார்க்கும் பலனை எழுதக்கூடாது. செய்ய வேண்டிய செயலை மட்டுமே எழுதவேண்டும். உதாரணமாக வீடுவீடாக போய் ஒரு பொருளை விற்பவர் எவ்வளவு பொருள்களை விற்பேன் என்று எழுதக்கூடாது. எவ்வளவு வீடுகளுக்கு போய் பொருள்களை பற்றி பேசுவேன் என்பதை மட்டுமே எழுத வேண்டும். எவ்வளவு வீடுகளுக்கு செல்ல வேண்டுமென்பது முதல் படியில் கூறப்பட்ட வேலையின் நோக்கத்தை பொறுத்தது.

ஒரு வேலை செய்வதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்த பலனை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மட்டும்தான் இங்கு பட்டியலிடவேண்டும்.

2. அளவிடகூடிய செயல்களை மட்டுமே பட்டியலில் எழுதவேண்டும். உதாரணமாக விற்க வேண்டிய பொருள்களை பற்றி திறமையாகவும் நன்றாகவும் பேசுவேன் என்று எழுதாமல் பத்து வீடுகளுக்கு சென்று பொருள் பற்றி பேசுவேன் என்று மட்டும் எழுதவேண்டும். ஏனெனில் நாள் முடிந்ததும் பத்து வீடுகளுக்கு சென்றோமா இல்லையா என்பதை அளவிடுவது போல் நன்றாக பேசினேனா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

3. செயல்களின் எண்ணிக்கை நமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற அளவில் இருக்க வேண்டும். செய்ய முடியாத அளவு அதிகமாகவோ எளிதாக செய்து முடித்துவிடக்கூடியதாகவோ இருக்க கூடாது.

4. சுதந்திரமாக செய்யக்கூடிய செயல்களை மட்டுமே எழுத வேண்டும். எழுதப்பட்ட வேலைகளை செய்ய நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்க கூடாது.  நமக்கு கீழே வேலை செய்பவர்களைத்தவிர வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத செயல்களை மட்டுமே செயல் பட்டியலில் எழுத வேண்டும்.  

5. தினசரி கடமைகளை பட்டியலில் எழுதக்கூடாது. அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை நாம் சரியாக செய்யாமல் இருந்தால் மட்டும் அவற்றை பட்டியலில் எழுதவேண்டும். முடிந்தவரை பட்டியலில் உள்ள செயல்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

6. யாருக்கு கீழ் வேலை பார்க்கிறோமோ அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை பட்டியலில் இடம்பெறாத செயல்களை செய்யக்கூடாது. ஒரு நாளில் எவ்வளவு செயல்களை செய்தோம் என்பதை விட எவ்வளவு செயல்களை செய்வேன் என்று காலையில் உறுதியெடுத்தோமோ அவற்றை செய்து முடித்தோமா என்பதுதான் முக்கியம். இரண்டு செயல்களை செய்வதாக தீர்மானித்து அதை செய்வது பட்டியலில் இல்லாத நான்கு செயல்களை செய்வதை விட சிறந்தது.

மூன்றாம் படி: சுய ஆய்வு

தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு திரும்புமுன் பட்டியலில் உள்ள செயல்களை செய்து விட்டோமா என்றும் செய்யா விட்டால் அதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும். நம்மிடம் தவறு ஏதேனும் இருந்தால் அதை திருத்திக்கொள்ள தேவையான செயல்களை அடுத்த நாள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஒரு மாணவன் தேர்வில் எவ்வளவு சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின் அந்த குறிக்கோளை அடைய எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியரின் துணையுடன் முடிவு செய்யவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் அந்த ஒரு மணிநேரத்தை படிப்பதில் செலவிட்டோமா இல்லையா என்பது மட்டும்தான் முக்கியமே தவிர தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வந்தது என்பதை பற்றி கவலைபடக்கூடாது. ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால் படிக்கும் விதத்தை எப்படி மாற்றி அமைப்பது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சீர்திருத்தங்களை செய்வது மட்டும்தான் அவன் பொறுப்பு.

நான்காம் படி: சுய திருப்தி

நாம் நினைத்தபடி வேலை செய்தால் மட்டும் போதும். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான்’ என்று தினமும் மனதுக்குள் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது அவசியம். நாம் வேலை செய்வது நமது மனம் செம்மையாக வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக மட்டும்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

முடிவுரை :

செய்வனவற்றை சிறப்பாக செய்வதன் மூலமாக மட்டும்தான் வேலை பார்ப்பதன் பயனை அடைய முடியும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்வது நமக்கு சேரவேண்டிய அனைத்து நன்மைகளையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதும், அவற்றை செய்வதும், சரியாக செய்தோமா என்று சோதித்து சான்றிதழ் வழங்குவது ஆகிய அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்தது. நமக்கு கொடுக்கபட்ட எந்த வேலையையும் இது என் வேலை என்று மனதார ஏற்றுக்கொள்ளாமல் செய்ய ஆரம்பிக்க கூடாது.

சில சமயங்களில் நமது முழுதிருப்தியுடன் வேலை செய்திருந்தாலும் அதன் பலன் எதிர்பார்த்த விதமாக அமையாது. நமது மேலாளர் மற்றவர்கள் செய்த தவறுக்கு நம்மை காரணமாக கருதி கண்டிக்கலாம். எது எப்படியானாலும் கடைசி தீர்ப்பு சொல்ல வேண்டியது நமது மனசாட்சிமட்டுமே. நம் மனசாட்சிப்படி நாம் சரியாக செய்தால் மட்டும் போதும். உலகமே அதை தவறு என்று சொன்னாலும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆனால் யார் நம் வேலையில் தவறு கண்டுபிடித்தாலும் அல்லது இன்னும் சரியாக செய்ய ஆலோசனை சொன்னாலும் அதை ஆர்வத்துடன் கேட்க வேண்டும். சென்றதை பற்றிய குற்ற உணர்வு மட்டும்தான் தவிர்க்கபட வேண்டியதே தவிர வருவதை சரியாக செய்ய நமது தகுதியை உயர்த்திகொள்வது மிக அவசியம். எனவே எப்பொழுதும் இப்பொழுது செய்வதை விட இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்க வேண்டும்.

நமது வாழ்வின் தரத்துக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்ற பொறுப்புணர்வுடன், செய்யும் செயல்களை செவ்வனே செய்வது முக்தியை நோக்கி நாம் எடுக்கும் முதல் படி.


பயிற்சிக்காக :

1.வேலையை சரியாக செய்வது என்றால் என்ன?

2.உலகின் தன்மை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3.செய்வதை சிறப்பாக செய்யும் விதம் பற்றி கூறப்பட்ட நான்கு படிகள் யாவை?

4.செயல் பட்டியல் எழுதும் விதம் குறித்து கூறபட்ட ஆறு கருத்துகள் யாவை?

5.வேலையை தவறாக செய்தால் குற்ற உணர்வு அவசியமா?

சுயசிந்தனைக்காக :

1. யார் எப்படிபோனால் நமக்கென்ன என்று செயல் பட்டியலில் உள்ள வேலைகளை மட்டும் செய்வதுதான் வேலையை சிறப்பாக செய்வதா?


2.நோயாளி மரணமடைந்து விட்டால் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது என்று தானே
அர்த்தம்?

Wednesday, November 17, 2010

பாடம் 103: வேலைகள் வேறுபட்டவை (பிரம்மசூத்திரம் 3.3.6-8)

அடிப்படையில் அனைத்து வேலைகளும் ஒன்றே என்றாலும் பலவிதமான மனிதர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வேலையை தேர்ந்தெடுக்க உதவி செய்யும் நோக்கில் வேலைகளிடையே உள்ள வேறுபாடுகளை இந்த பாடம் ஆராய்கிறது.

அனைத்து விமானங்களும் பறப்பதற்கு உதவுகின்றன  என்ற அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு மற்றும் வருகை என்ற அட்டவணையை பார்க்கும்பொழுது எண்ணிக்கையிலடங்கா வெவ்வேறு விமான சேவைகள் இருப்பது தெரியும். ஒவ்வொரு பயணியும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல விரும்புகிறார் என்ற நோக்கில் விமானங்கள் வேறு பட்டவை. அதேபோல் அனைத்து வேலைகளும் அனைத்து மக்களின் ஒரே குறிக்கோளான முக்தியை அடைய உதவும் படிகட்டுகளாய் உதவுகின்றன என்றாலும் மக்களின் தரத்திற்கேற்ப வேலைகள் வேறுபடுகின்றன.

தனித்திறமை

சுற்றியிருக்கும் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். மனிதர்கள் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருட்களைப்போல்  எல்லாவிதத்திலும் ஒரே மாதிரியிருப்பதில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் நமது கல்வி நிறுவனங்களால் மாணவர்களை எல்லா விதத்திலும் ஒத்த மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ மாற்ற முடியாது.

ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை மேலும் வளர்த்துகொள்ள வாய்ப்புகளை கொடுக்கும் வேலையை செய்யவேண்டும்.

தனித்திறமையை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. எந்த வேலையை விரும்பிச்செய்கிறோமோ, எந்த வேலையை நன்றாக செய்வதற்கு மற்றவர்களை விட நமக்கு எளிதாக இருக்கிறதோ அதில் நம் தனித்திறமையை காணலாம்.

எந்த வேலை அதிகம் பணம் சம்பாதிக்க உதவும் என்ற பார்வையில் வேலையை தேர்ந்தெடுக்காமல் எந்த வேலையில் நமது தனிதிறமையை மேலும் வளர்க்க முடியும் என்ற அடிப்படையில் சரியான வேலையை தெரிந்தெடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதிக சம்பளம் கிடைத்தாலும் பிடிக்காத வேலையில் வளர்ச்சியிருக்காது. பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் நம் தனித்திறமை மூலம் மற்றவர்களை விட அந்த வேலையை சிறப்பாக செய்பவோம். எனவே விரைவில் பதவி உயர்வு பெற்று நாளடைவில் வேறு எந்த வேலையிலும் கிடைக்க முடியாத அளவு பணமும் புகழும் நம்மை வந்து சேர வாய்ப்பு உள்ளது.

எனவே ஒவ்வொருவரது தனிபட்ட மனப்பாங்கு (attitude) மற்றும் தனித்திறமைக்கு (core competence) ஏற்ற வேலை என்ற நோக்கில் வேலைகள் வேறுபடுகின்றன.

தகுதி

அறிவுத்திறன் (intelligence) மற்றும் செயல்பாட்டுதிறன் (capability) ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபடும். எல்லோரும் தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். செய்யும் வேலை மிகவும் சுலபமாகவோ அல்லது மிகவும் கஷ்டமாகவோ இருக்க கூடாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சித்தால் செய்துவிடலாம் என்ற நிலை தொடர்ந்து இருக்க வேண்டும். வேலை செய்ய செய்ய நமது தகுதி அதிகமாகும். தகுதி அதிகமானவுடன் அதற்கேற்ற வேலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலை கட்டுகோப்புடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து எடை தூக்கும் பயிற்சி செய்யும்பொழுது நமது சக்திக்கேற்றவாறு எடையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இரண்டு கிலோ எடையை எளிதாக தூக்க முடிகிறது என்று அதற்குமேல் எடை தூக்கிபயிலாவிட்டால் பயிற்சிக்கூடத்தில் சேர்ந்ததில் பயன் இல்லை.

வேலை செய்யும் இடம் மனதை செம்மையாக்கும் மனப்பயிற்சிக்கூடம். வேலை செய்யாமல் சோம்பித்திருந்தால் மனம் தன் ஆரோக்கியத்தை இழந்து விடும். எனவே வேலை செய்வது அவசியம். இரண்டு கிலோ எடையை தினமும் தூக்குவது போல் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாமல் செய்தவேலையையே செய்வதில் எவ்வித பயனும் இல்லை. முடிந்தவரை அதிகபொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வேலையை திறம்பட செய்ய முயல வேண்டும்.

தரம்

பணக்காரர்கள் எல்லாம் இன்பமாக இருப்பதில்லை. ஏழைகள் கூட இன்பமாக இருக்கிறார்கள். இதிலிருந்து பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. பணம் இருந்தால் இன்பமாக இருக்க முடியாது அல்லது பணம் இருந்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்பது போன்ற கருத்துக்கள் தவறு என்றும் தெளிவாக தெரிகிறது.

பணம் வாழ்வின் பொருளாதார தரத்தை அதிகபடுத்தும். நல்ல வேலை செய்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். கார், பங்களா என்று சொத்து சேர்த்து வசதியாக வாழலாம். அவ்வப்பொழுது இன்பமாகவும் நினைத்தது நடக்காதபோது வருத்தப்பட்டுக்கொண்டும் வாழலாம். எப்பொழுதும் இன்பமாக வாழவேண்டுமென்றால் ஒரு குருவிடம் சரணடைந்து வேதத்தை முறையாக படிப்பதை தவிர வேறு வழியில்லை.

வாழ்வில் வசதி வேண்டுமா அல்லது என்றும் தொடரும் இன்பம் வேண்டுமா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் புத்திசாலிகளுக்கு கிடையாது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று அவர்கள் பணம் சம்பாதித்துகொண்டே கர்மயோகம் செய்து தங்களை வேதம் படிக்க தயார் செய்து கொள்வார்கள். முதலில் போதுமான பணம் சம்பாதித்துவிட்டு பிறகு ஆன்மீக வாழ்வில் இறங்குவோம் என்றோ வேதத்தை படித்து முடித்துவிட்டு பின் பொருள் சம்பாதிக்க தொடங்குவோம் என்றோ முடிவுசெய்வது தவறு.
வேதம் படிப்பது ஒரு முழுநேர வேலையல்ல. உலக சுகங்களை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டு சொந்த வீட்டின் வசதிகளுடன் வேதம் படிப்பதற்காக ஒரு சில மணிநேரம் ஒதுக்கினால் போதும். எனவே வசதி மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் நமது புத்தி கூர்மையால் ஒரேநேரத்தில் அடையலாம்.

பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு வேதம் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள் தங்களது குறிக்கோளான முக்தியை அடைய மாட்டார்கள். வேதம் படிப்பதற்காக வேலை எதுவும் செய்யாதவர்கள் வறுமையில் வாடுவார்கள்.

உணவு, உடை, உறையுள் போன்ற வாழ்வின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக கிடைத்த வேலையை செய்யும் கட்டாயம் பலருக்கு இருக்கலாம். அவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்து கொள்வதற்காகவும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்வதற்காகவும் தகுந்த பொழுதுபோக்கையோ அல்லது பகுதிநேர அடிப்படையில் பிடித்த வேலையையோ  செய்ய முயல வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் நிச்சயம் தங்கள் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மேற்படிப்பு படிப்பதோ பகுதி நேர வேலை செய்வதோ அவசியம். சித்திரம் வரைதல், கைவேலை செய்தல், அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல், கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ளுதல், சொல்லிக்கொடுத்தல் போன்ற உபயோகமான வேலைகள் மூலம் மனதை பண்படுத்த வேண்டும்.

உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சமசீராக அமைவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் செய்யும் வேலைகளிலிருந்து பணம் சம்பாதிப்பதைதவிர ஆத்ம திருப்தியும் கிடைக்க வேண்டும். ஆத்ம திருப்தி என்றால் தனித்திறமையை வளர்த்துக்கொள்தல் மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்தல் என்பது பொருள்.

எனவே தனித்திறமை, தகுதி மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுவாக வேறுபடுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.

முடிவுரை :

தொழில் நுட்ப வசதிகளும் பொருளாதார வளர்ச்சிகளும் பற்பல வேலைகளை செய்யும் வாய்ப்பை மக்களுக்கு தருகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

வாழ்வில் முன்னேற்றம் என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதின் அடிப்படையில் கணக்கிடப்படுவதல்ல. மனம் எவ்வளவு செம்மையடைகிறது என்பதை பொறுத்தே வாழ்வில் உண்மையான முன்னேற்றம் அமையும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே மனதை செம்மையாக்க முடியும். மனது செம்மையானால் பணம் சம்பாதிப்பது எளிது. இல்லையென்றால் பணத்தை சரியாக செலவு செய்யக்கூட தெரியாது.

அனைத்து வேலைகளின் குறிக்கோள் மனதை செம்மைபடுத்தி அதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொள்வதுடன் நிலையான அமைதியை பெறுவதுதான். வெறும் பணம் மாத்திரம் இந்த அமைதியையும் நிம்மதியையும் நமக்கு தராது. எனவே முடிந்த வரை வெவ்வேறு வேலைகள் செய்து நமது மனதை தொடர்ந்து செம்மை படுத்திக்கொள்ள வேண்டும்.

செய்யும் வேலையை ஆர்வத்துடன் செய்தல், தனது முழுத்திறமையையும் உபயோகித்து சிறப்பாக செய்தல், வேலையில் மனம் ஒன்றியிருத்தல், புத்தியின் கூர்மையை அதிகபடுத்தும் வகையில் அதிகபொறுப்புகளை ஏற்று கொள்ளுதல் ஆகியவை மனதை செம்மை படுத்தும் வழிகளாகும். அதே சமயத்தில் இது போன்ற முயற்சிகள் அதிக பணமும் புகழும் பெற்றுத்தரும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

மனம் செம்மையானால் பணம் சம்பாதிக்க செய்யும் வேலையை கர்மயோகமாக மாற்றி மனப்பக்குவத்தை பெற முடியும்.  மனப்பக்குவமும் புத்திக்கூர்மையும் நம்மை ஆன்மீக பாதையில் வேகமாக அழைத்துச்செல்ல வல்லவை. எனவே விரைவில் பரமனை அறிந்து குறையில்லாத இன்பத்தை நாம் அடைவோம்.

அதிக பணம் சம்பாதிப்பதுடன் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கவும் நாம் கற்றுக்கோண்டால் வாழ்வு இனிமையாக அமையும்.

பயிற்சிக்காக :

1.வேலைகள் ஒன்றுபட்டவையா வேறுபட்டவையா?

2.நம்முடைய தனித்திறமையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?

3.தனித்திறமையை வளர்த்துக்கொள்வதால் என்ன லாபம்?

4.தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுப்பதன் அவசியமென்ன?

5.வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. முனிவர்கள் முற்றும் துறக்கவேண்டிய காரணம் என்ன?

2.வேதம் படிப்பது மிக எளிதான காரியமா?

3.எந்த வேலையும் செய்யாமல் முழுநேரத்தையும் வேதம் பயில்வதன் மூலம் குறைவில்லாத ஆனந்தத்தை அடையமுடியாதா?

4.நிறைய பணம் சம்பாதித்து கோவிலில் நடக்கும் நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து புண்ணியம் சம்பாதிப்பதன் மூலம் முக்தியடைய முடியாதா?

5.முக்தியடைய வேலை செய்வது முக்கியமா கடவுள் பக்தி முக்கியமா?

Tuesday, November 16, 2010

பாடம் 102: அனைத்து வேலைகளும் அடிப்படையில் ஒன்றே (பிரம்மசூத்திரம் 3.3.5)

மனிதர்கள் பற்பல வேலைகளில் ஈடுபட்டிருப்பதைபோல் வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் அடிப்படையில் அனைத்து வேலைகளும் ஒன்றே என்ற உண்மையை நிரூபித்து அவரவர்கள் செய்யும் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்று இந்த பாடம் வலியுறுத்துகிறது.

அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துவருகிறார்கள். தொழிலாளி, முதலாளி, கடைநிலை ஊழியன், உயர்மட்ட அதிகாரி, அரசாங்க அலுவலர், தெருவோர பூக்காரி, நாட்டின் ஜனாதிபதி, முடிதிருத்துபவர், மக்களவையில் மந்திரி, அறுவை சிகிச்சை நிபுணர், கசாப்புக்கடையில் வேலை செய்பவர் என பார்வைக்கு வெவ்வேறு வேலைகளை மக்கள் செய்வதுபோல தோன்றினாலும் ஒரு வேலைக்கும் மற்றொரு வேலைக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை பின்வரும் காரணங்களால் அறிந்து கொள்ளலாம்.

வேலையின் நோக்கம்

அனைத்து வேலைகளை செய்பவர்களும் தங்களது தற்போதைய பொருளாதார நிலை மேலும் உயரவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே செயல்படுகிறார்கள். இருப்பது போதவில்லை இன்னும் வேண்டும் என்ற மனப்பாங்கு எல்லோருக்கும் இருப்பதால்தான் அவரவர்கள் தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்கிறார்கள்.

போதும் என்ற நிலை வந்ததும் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு கவலையில்லாமல் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஆசை ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் போதும் என்ற நிலை யாருக்கும் வருவதேயில்லை. வயதானபின் வேறு வழியில்லாமல் பெரும்பாலோர் கட்டாய ஓய்வு பெறுகிறார்கள். இருந்த இடத்திலேயே இருப்பதற்கு கூட தொடர்ந்து ஓட வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேலை செய்ததன் நோக்கம் நிறைவேறாமலேயே பலர் வேலை செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்.

வேலையில் நிறைவின்மை

இரண்டுவித நிறைவின்மை வேலை செய்யும் அனைத்து மக்களிடமும் எப்பொழுதும் இருக்கும். ஒன்று: செய்து முடித்த வேலையில் முழுதிருப்தியின்மை. இதைவிட இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற எண்ணம் எந்த ஒரு வேலையை செய்து முடித்தபின்னும் ஏற்படும். இரண்டு: செய்த வேலையின் பலன் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம். தான் செலவிட்ட நேரம் உழைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டால் கிடைத்த பலன் குறைவாகவே இருப்பதாக அனைவரும் நினைப்பர்.

இந்த நிறைவின்மை அனைத்து வேலைகளுக்கும் பொதுவானது.

வேலையில் முக்கியத்துவம்

ஒரு சங்கீத கச்சேரி நன்றாக நடக்க வேண்டுமென்றால் பாடகர் மட்டுமில்லாமல் அனைத்து பக்கவாத்தியக்காரர்களும் ஒலி அமைப்பாளர்கள் அரங்க நிர்வாகிகள் போன்று மேடைக்கு பின்னிருந்து செயலாற்றுபவர்கள் அனைவரும் தங்கள் வேலையை சரியாக செய்யவேண்டும். எனவே அனைத்து வேலைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

விமானத்தை பராமரிக்கும் கடைநிலை பொறியாளன் தன் வேலையை சரியாக செய்யவில்லையென்றால் விமானம் பாதிவழியில் வெடித்து சிதறிவிடும். எனவே விமானத்தை ஓட்டும் பைலட்தான் அனைவரைவிட முக்கியமானவர் என்ற கருத்து தவறு.
இது உயர்ந்தது அது தாழ்ந்தது என்று எவ்வித பேதமும் இல்லாமல் அனைத்து வேலைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. கென்னடி நாஸா (NASA)வில் வேலை பார்க்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘பத்து வருடங்களில் மனிதனை நிலவுக்கு அனுப்புவேன் என்று நீங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற இந்த இடத்தை துப்புரவாக வைத்து கொள்ளும் பணியை செய்து வருகிறன்’ என்றார் அந்த பெருக்கி துடைக்கும் ஊழியர்.

வேலையில் சமத்துவம்

எந்த ஒரு வேலையையும் செய்யாமல் நிறுத்திவிட்டால் குடிமுழுகிவிடாது. எல்லா வேலைகளும் அத்தியாவசிய வேலைகள் அல்லது எதுவுமே அவசியமில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் பொது மக்கள் இன்னும் பல வருடங்களுக்கு எண்ணை விளக்கு வெளிச்சத்தில் இரவை கழித்திருப்பார்கள். கற்காலத்திலிருந்து தற்காலத்துக்கு வர நாம் எடுத்துக்கொண்ட காலம் இன்னும் சில நூறு வருடங்கள் தாமதம் ஆவதால் யாருக்கும் ஒரு நஷ்டமும் இல்லை.

ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இத்தனை கோடி ரூபாய் நஷ்டம் என்பது போன்ற செய்திகள் வெறும் புள்ளிவிவரங்களே தவிர உண்மையில் யாரும் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை.

மருத்துவ துறையின் முன்னேற்றத்தாலேயே இன்று பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கபட்டு சராசரி ஆயுள் அதிகமாகியிருக்கிறது என்பதும் ஒரு புள்ளி விவரமே. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வோம் என்பதும் ஆரோக்கியமாய் இருப்போமா இல்லையா என்பதும் நமது செயல்களின் விளைவான பாவபுண்ணியங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.

வேலைகளின் உள்நோக்கம்

எதற்காக வேலை செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் பணம் சம்பாதிப்பதற்காக, குடும்பத்தை காப்பதற்காக, மனநிம்மதிக்காக, புகழுக்காக என பலரும் பல்வேறு பதில்களை கூறலாம். ஆனால் இவையனைத்தும் தவறான பதில்கள். உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் வேலை செய்வதன் ஒரே நோக்கம் குறைவில்லாத இன்பத்துடனும் நிரந்தரமான பாதுகாப்புடனும் எவ்வித தடையும் இல்லாத நிம்மதியுடனும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதே. இந்த உள்நோக்கம் நிறைவேற நான்கு படிகள் உள்ள ஓர் ஏணியாக அனைத்து வேலைகளும் பயன்படுகின்றன.

முதலாம் படி: வேலையில் ஆர்வம்

முதலில் எல்லோரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதுபோல் நாமும் சம்பாதிக்கலாமே என்று வேலை செய்ய ஆரம்பித்தாலும் நாளடைவில் வேலையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடும். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான துறையில் மென்மேலும் முன்னேறவேண்டும் என்று நினைக்க ஆரம்பிப்பார்கள். தெருவோரம் தள்ளுவண்டியில் இட்லி,வடை செய்து விற்பவர் ஒரு சிறிய உணவு விடுதி ஆரம்பிக்கவேண்டும் என்று கனவு காணுவார்.

இரண்டாம் படி: சுயமுன்னேற்றம் (Self development)   

காணும் கனவை நனவாக்க கடின உழைப்பு, தொழில் நுணுக்கங்களை கற்று தேர்தல், அனைவருடனும் நல்ல முறையில் பழகி நற்பெயரெடுத்தல் போன்ற முயற்சிகளில் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் அனைவரும் ஈடுபடுவர்.

இந்த முயற்சிகள் ஒருவரின் ஆளுமையை (Personality) வெகுவாக உயர்த்திவிடும். மேலும் ஒருவரது அறிவுத்திறன் அதிகரித்து அனைத்தையும் தீர்க்கமாக ஆராய்ந்து உண்மையை உணரும் திறமையும் அதிகரிக்கும்.

மூன்றாம் படி: சுய ஆய்வு (Self-reflection)

பகுத்தறிவு கூர்மையானவுடன்தான் நாம் என்ன செய்கிறோம், வாழ்வில் நம் உண்மையான குறிக்கோள் என்ன, தற்போழுது பயணித்துக்கொண்டிருக்கும் திசை சரிதானா என்ற கேள்விகள் மனதில் தோன்றும். இதுவரை மந்தையில் ஆடுகள் போல எல்லோரும் வேகமாக ஓடுகிறார்களே என்று தானும் பைத்தியகாரத்தனமாக ஓடாமல் ஏன் ஓடுகிறோம் என்று நிதானமாக யோசிக்க நேரம் கிடைக்கும். இந்த படிக்கட்டிலிருந்து அடுத்த படிக்கு செல்ல ஒரு குருவின் துணை தேவை. அவரவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற குருவை பெற்று அவர் காட்டிய வழியில் வாழ்வெனும் பயணத்தை தொடருவார்கள்.

நான்காம் படி: மனப்பக்குவம்

நாம் செய்யும் வேலையில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் நமது குறிக்கோளான குறையாத இன்பத்தை அடையவே முடியாது என்ற தெளிவு கர்மயோகம் செய்வதனால் ஏற்படும். பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் முன்னேற்றத்திற்கு ஒரு முடிவேயில்லை என்றும் அது எப்பொழுதும் ஒரு நிறைவை தராது என்றும் தெரிய வரும்.

இந்த மனபக்குவத்தை பெறுவதற்கு இந்த ஒரு குறிப்பிட்ட வேலையைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. உலகில் உள்ள எந்த வேலையானாலும் அதன் இறுதிப்பயன் இந்த மனப்பக்குவத்தை தருவதுதான்.

ஆன்மீக பயணம்

ஆன்மீக பாதை மட்டுமே நமக்கு நமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவும் என்ற மனப்பக்குவம் வேலை செய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும். மேலும் இரண்டாம் படிக்கட்டில் நமக்கு கிடைக்கும் கூரிய பகுத்தறிவும் வேலை செய்வதன் மூலம்தான் கிடைக்கும். இந்த மனபக்குவமும் கூரிய பகுத்தறிவும் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தை பயின்று பரமனை அறிந்து கொள்ள முடியும்.

பரமனை அறிந்துகொள்வதுதான் குறைவில்லாத இன்பத்தை அடைவது.

முடிவுரை :

உலகில் மனிதர்கள் வேலை செய்வதால் ஏற்படும் பயன்கள் அவரவர் பார்வையை பொறுத்தது. ஆயிரம் ரூபாய் என்பது அதிகமா குறைவா என்று பொதுவாக கேள்வி கேட்கமுடியாது. அவரவர்கள் தங்களது தற்போதைய நிலையில் திருப்தி கொள்ளாமல் இன்னும் வேண்டும் என்று முயன்று கொண்டிருப்பது மனித இனத்தின் இயல்பு. எல்லோரும் வாழ்வின் குறிக்கோளை அடைய முயன்று கொண்டிருப்பதால் அனைவர் செய்யும் வேலைகளும் அடிப்படையில் ஒன்றே.

ஒரு பத்து ரூபாய் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் கூலி வேலை செய்பவனின் ஏக்கம் பத்து கோடி ரூபாய் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் தொழிலதிபரின் ஏக்கத்திலிருந்து எவ்விதத்திலும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. இரண்டும் ஒன்றுதான்.

அனைத்து வேலைகளும் ஆன்மீக பயணத்தை தொடங்க உதவும் ஆரம்ப படிக்கட்டுகள். இதில் பணக்காரர்கள், ஏழைகள், மந்திரிவேலை, மயானத்தில் வேலை என்ற பாகுபாடு இல்லை. எந்த வேலை செய்தாலும் எவ்வளவு சீக்கிரம் நாம் மனபக்குவம் பெறுகிறோம் என்பது அவரவருடைய சுயமுயற்சியில் இருக்கிறதே தவிர வேலையை பொறுத்து அது மாறுவதில்லை.

எந்த வேலை செய்தாலும்  வேலையில் ஆர்வத்துடன் வேலை செய்து நமது ஆளுமையை உயர்த்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

பயிற்சிக்காக :

1.வேலை செய்வதன் நோக்கம் என்ன?

2.வேலை செய்பவர்களின் நிறைவின்மைக்கு காரணம் என்ன?

3.வேலையில் முக்கியத்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு கருத்துகளிடையே உள்ள வேறுபாடு என்ன?

4.வேலை செய்வதன் உள்நோக்கம் என்ன?

5.வேலை என்ற ஏணியில் உள்ள நான்கு படிக்கட்டுகள் யாவை?

6.ஆன்மீக பயணத்தின் அவசியமென்ன?.


சுயசிந்தனைக்காக :

1.ஆன்மீக பயணத்தை ஆரம்பித்ததும் வேலை செய்வதை நிறுத்திவிட வேண்டுமா?

2.வாழ்வின் குறிக்கோளை அடைந்தவர்கள் வேலை செய்வதில்லையா?

3.மனபக்குவத்தையும் புத்திகூர்மையும் தவிர வேலை செய்வதால் ஏற்படும் பயன் ஒன்றுமேயில்லையா?

4. எல்லா வேலைகளும் அடிப்படையில் ஒன்று என்பதால் எந்த வேலையில் அதிக சம்பளம் கிடைக்கிறதோ அந்த வேலையை செய்வது புத்திசாலித்தனம் அல்லவா?

5. பரமனை அறிந்து கொள்ள தேவையான கூரிய அறிவை அடைய எல்லா வேலைகளும் சமமாக உதவுவது இல்லை. அப்படியிருக்க எல்லா வேலைகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்று எப்படி கூற முடியும்?

Monday, November 15, 2010

பாடம் 101: கருமமும் கர்மயோகமும் (பிரம்மசூத்திரம் 3.3.1-4)

செயல், கருமம், கர்மயோகம் ஆகியவற்றின் விளக்கங்களை கொடுப்பதுடன் நமது வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய முதல் படியாக நாம் செய்யவேண்டியது என்ன என்ற அறிவுரையையும் இந்த பாடம் வழங்குகிறது.

செயல்

உயிரினங்களும் ஜடப்பொருள்களும் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது அதன் இயற்கை தன்மை. இந்த மாற்றங்களுக்கு ஒரு நோக்கத்தை கற்பிக்கும்பொழுது அவை ‘செயல்கள்’ ஆகின்றன.

‘பூமி தன் அச்சில் சுழலுவதால் இரவும் பகலும் ஏற்படுகின்றன’ என்று இயற்கையான ஒரு நிகழ்வின் காரண காரியத்தை ஆராயும்பொழுது அது ஒரு செயலாக காட்சியளிக்கிறது.
இது போல் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களில் சிலவற்றை செயல்களாக நாம் கருதுகிறோம். எனவே ‘செயல்’ என்பது மனிதனின் பார்வையில் மட்டும் தெரியும் இயற்கையின் மாற்றங்கள்.

கருமம்

பாவ புண்ணியங்களை கொடுக்கும் செயல்களுக்கு கருமம் என்று பெயர்.

புலி மானை கொன்று தின்றது. இதை ஒரு செயல் என்று நாம் நினைத்தாலும் இது கருமம் ஆகாது. ஏனெனில் மனிதனால் மட்டுமே பாவ புண்ணியங்களை கொடுக்கும் செயல்களை செய்ய முடியும். மனிதன் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் துணையுடன் செய்யும் அனைத்து செயல்களும் கருமங்கள் ஆகும்.

மனம்: ஒருவரை மனதுக்குள் திட்டுவது, காழ்ப்புணர்ச்சியுடன் பொறாமை கொள்வது, அவர் அழிந்து போகவேண்டும் என எண்ணுவது போன்றவை பாவத்தை கொடுக்ககூடிய கர்மங்கள். எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது புண்ணியத்தை கொடுக்கும் கருமம்.

மொழி: மற்றவர்களது மனம் நோகும்படி பேசுவது பாவத்தை கொடுக்கும். கேட்பது, படிப்பது, எழுதுவது ஆகியவை நமது எண்ணங்களுக்கு தூண்டுகோலாய் அமைவதால் தீயசெய்திகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். நமக்கு சம்பந்தம் இல்லாத இருவர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொள்வதை நாம் கேட்பதும், தொலைகாட்சி தொடர்களில் வரும் மாமியார் மருமகள் சண்டைகளை பார்ப்பதும் தீய கருமங்களை  ஊக்குவிக்கும் செயல்களாகும்.

மெய்: உடலால் செய்யப்படும் அனைத்து செயல்களும் மற்றவர்களுக்கு துன்பம் தருகிறதா அல்லது இன்பம் தருகிறதா என்பதை பொறுத்து நமக்கு பாவ புண்ணியங்களை தரும். ஆழ்ந்த உறக்கம் தவிர மற்ற எல்லா செயல்களும் கருமங்கள் ஆகும். செய்யவேண்டிய ஒரு செயலை செய்யாமல் சும்மா இருப்பது கூட ஒரு கருமம் ஆகும்.

எல்லோரிடமும் அன்பாக பழகுதல், விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாத்தல், இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழலை மதித்து நடத்தல், பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தல், விருந்தினர்களை உபசரித்தல், சக ஊழியர்கள், அண்டைவீட்டார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு உணவு தருதல் மற்றும் கல்வி கற்பித்தல், புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை ஆகியவற்றுடன் மற்றவர்களுக்கு இனிமையாக நடத்தல் ஆகியவை போன்ற மற்றவர்களுக்கு நன்மையும் இனிமையும் தரக்கூடிய அனைத்து செயல்களும் புண்ணியம் தரும் நல்ல கருமங்கள் ஆகும்.

திருடுவது, பொருள்களை கையாடுவது, வன்முறையில் ஈடுபடுவது, வன்முறையை தூண்டுவது அல்லது துணைபோவது, கொலை செய்வது, பொய் கூறுதல் மற்றும் உண்மை சொல்லாமல் இருத்தல் மூலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, மற்றவர்களுடைய தனிமையை அவர்களது விருப்பத்திற்கு மாறாக குலைப்பது, அளவுக்கு மீறி சொத்து சேர்ப்பது, ஏழைகளின் வறுமையை ஆதாயமாக கொண்டு அவர்களிடம் அதிகப்படி வேலை வாங்கி உரிய ஊதியம் கொடுக்காமல் இருத்தல், பெரியோர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை பாவம் தரும் கருமங்கள் ஆகும்.

வேலை

சுயநலத்திற்காக உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்படும் அனைத்து செயல்களும் வேலை என்ற தொகுப்பில் அடங்கும். பணம், பெயர், புகழ் போன்றவற்றை சம்பாதிப்பது, சமையல் செய்து வீட்டை நிர்வகிப்பது, தனது மன நிம்மதிக்காக சமூக சேவையில் ஈடுபடுவது ஆகியவை வேலைகள் ஆகும். பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் எந்த செயல்களும் வேலை ஆகாது.

எல்லா வேலைகளும் கருமங்கள்தான். ஆனால் எல்லா கருமங்களும் வேலைகள் அல்ல. பொதுவாக யாருக்காக வேலை செய்கிறோம் என்பது முக்கியம். ஆண்டவன் உலகத்தின் முதலாளி, அவனுக்கு நான் ஒரு தொழிலாளி என்பது இங்கு ஒத்துவராது. ஒரு செயலை வேலையாக மாற்ற யாருக்கு கீழ் வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு அவர்களது அனைத்து வாடிக்கையாளர்களும் எஜமானர்கள்.

செயலின் பயன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றால் அது வேலை ஆகாது. வேலை வழங்குனரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே அது வேலை ஆகும். பிடிக்காத ஒரு சில செயல்களை கூட நம் வேலையின் ஒரு பகுதியாக செய்ய வேண்டியிருக்கலாம்.

வேலையில் விருப்பம்

வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை. எந்த ஒரு வேலையையும் ஏற்றுக்கொள்ளுமுன் அதை நாமாக விரும்பித்தான் ஏற்றுக்கொள்கிறோம் என்ற உள்ளத்தெளிவு முக்கியம். மற்றவர்களின் கட்டாயத்தின் பெயரில் ஒரு வேலையை செய்ய ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தால் முதலில் அந்த வேலையை மனப்பூர்வமாக விரும்ப கற்றுக்கொள்ளப்போகிறேன் என்ற உறுதியுடன்தான்  வேலை செய்யத்தொடங்க வேண்டும். சிலகாலம் முயற்சி செய்தபின்னும் அந்த வேலை மனதுக்கு பிடிக்காவிட்டால் வேலையிலிருந்து விலகிவிட வேண்டும். விருப்பமில்லாமல் தொடர்ந்து வேலை செய்வதை விட பிச்சையெடுத்து சாப்பிடுவது மேல்.

வேலை செய்வதன் அவசியம்

பொருளாதார அடிப்படையில் வாழ்வில் முன்னேற வேலை செய்வது அவசியம். மேலும் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வேலை செய்ய வேண்டும். என்றும் குறையாத இன்பத்துடன் வாழ அவசியமான மனத்திண்மையையும் அறிவு கூர்மையையும் வேலை செய்வதன் மூலம் மட்டும்தான் பெற முடியும். எனவே சோம்பலை முற்றிலும் தவிர்த்து எறும்பு போல் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது அவசியம். ஓய்வுக்காக நண்பர்களுடன் அளவளாவுவது, புத்தகங்களை படிப்பது, தோட்ட வேலை செய்வது போன்ற உபயோகமான பொழுதுபோக்கு செயல்களை செய்யலாம்.

கர்மயோகம்

பலனை எதிர்பாராமல் செய்யப்படும் வேலைகள் கர்மயோகம் ஆகும். எல்லா கருமங்களையும் கர்மயோகமாக செய்யமுடியாது. செய்யும் வேலைகளை மட்டுமே வேதம் படித்த ஆசிரியரின் துணையுடன் கர்ம யோகமாக மாற்றமுடியும். முக்தியை அடைய கர்மயோகம் அவசியம். கர்மயோகம் செய்ய செய்யும் வேலையை மனதின் முழுஈடுபாட்டுடனும் முழுத்திறமையுடனும் செய்யவேண்டும்.

முடிவுரை :

செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. அனைத்து செயல்களும் நமக்கு பாவ புண்ணியங்களை சேர்க்கும் கருமங்கள் ஆகும். மீண்டும் மீண்டும் பிறந்து கர்மபலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. நல்ல காரியங்கள் மட்டும் செய்து எப்பொழுதும் சுகமாக வாழ்வேன் என்பதும் ஒரு செயலும் செய்யாமல் சேர்த்து வைத்துள்ள பாவபுண்ணியங்களை அனுபவித்து தீர்த்துவிடுவேன் என்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை. ஒருவருக்கு நாம் நல்லது செய்தால் அது மற்றொருவருக்கு மனவருத்தத்தை தருகிறது. இது போல் நாம் விரும்பாமலேயே நமது செயல்களினால் பலருக்கு துன்பம் தருகிறோம். எனவே புண்ணியம் சம்பாதிக்கும் பொழுது கூடவே பாவமும் ஏற்படுகிறது.

ஆகவேதான் அனைவரது வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வருகின்றன.

இன்பமாக இருக்கும் அதே வேளையில் எதிர்காலம் ஏதோ ஒரு துன்பத்தை கொடுக்கும் என்ற பயம் நம்மை தடையில்லாத நிம்மதியுடன் வாழவிடுவதில்லை.

எனவே கர்மபலன்களை முற்றிலும் தவிர்த்து முக்தியடைவதுதான் சிறந்த வழி.

முக்தியடைய வேதத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்று பரமன் யார் என்பதை ஐயமின்றி தெரிந்து கொள்ள வேண்டும். கற்பது புரிய வேண்டுமென்றால் நாம் சில காலம் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற வேண்டும்.

கர்மயோகம் செய்ய ஏதாவது வேலை செய்வது அவசியம். பின் அதே வேலையை கர்மயோகமாக மாற்றி மனத்தூய்மையை அடையலாம்.

எனவே முதல் படியாக நாம் நமக்கு பிடித்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது கிடைத்த வேலையை விரும்பிச்செய்யவேண்டும். ஏற்றுக்கொண்ட வேலையை விருப்பு வெறுப்பின்றி திறம்பட செய்வதன் மூலம் நாளுக்கு நாள் நமது மன வளர்ச்சியை அதிகபடுத்தி கொள்ள வேண்டும்.

முடிந்தவரை நற்செயல்களை செய்து தீய செயல்களை தவிர்ப்பதன் மூலம் வாழ்வின் இறுதி குறிக்கோளை விரைவில் அடையும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. செயல் என்றால் என்ன?

2. கருமம் என்றால் என்ன?

3.கர்மயோகம் என்றால் என்ன?

4.கர்மயோகத்தின் அவசியம் என்ன?

5.வேலை என்றால் என்ன?

6.வேலை செய்வதன் அவசியம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் இறுதிகுறிக்கோள் என்ன? அதை அடைந்த பின் வாழ்வு எப்படியிருக்கும்?

2.வேலையின் ஒருபகுதியாக அதர்மமான காரியத்தை செய்யலாமா?

3.நமக்கு பிடிக்காத செயல்களை செய்யும்படி கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது?