Monday, June 21, 2010

பாடம் 068: ஊழிக்காலத்தில் ஒடுங்கும் முறை (பிரம்ம சூத்திரம் 2.3.14)

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எப்படி தோன்றியதோ அதன் எதிர்வரிசையில் பிரளய காலத்தில் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கும் என்ற வேதத்தின் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

சரியான முடிவு

படிப்படியாக ஏறி மாடிக்கு சென்றவன் இறங்கும்பொழுது அதே படிகளை எதிர்வரிசையில் கடப்பது போல் காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் என்ற வரிசையில் தோன்றிய பிரபஞ்சம் ஊழிக்காலத்தில் நீரில் கரைந்து, பின் நீர் நெருப்பில் மறைந்து கடைசியில் காற்றில் கலக்கும்.

எப்படி நீரிலிருந்து தோன்றிய பனிக்கட்டி நீராக மாறி அழிகிறதோ அதே போல் பரமனிடமிருந்து தோன்றிய பிரபஞ்சம் முடிவில் பரமனிடம் சென்று மறையும்.

எது அதிகம்?

பஞ்சபூதங்களுக்குள் எது முதலில் படைக்கப்பட்டதோ அது பின்னால் படைக்கப்பட்டதை விட சக்தி அதிகம் வாய்ந்தது. முதலில் தோன்றி கடைசியில் மறைவதால் அதிக காலம் இருப்பது. இருக்கும் காலத்தில் அதிகம் வியாபித்திருப்பது. நிலத்தை விட நீர் அதிகம் வியாபித்துள்ளது. இதே போல் நீரை விட நெருப்பும், நெருப்பை விட காற்றும், காற்றைவிட வெளியும் அதிகம் வியாபித்துள்ளதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகிறோம்.

நிலத்தை விட நீர் அதிகம் என்பது பூமியை பொறுத்தவரை சரி என்று மட்டும்தான் அறிவியல் கூறுகிறது. ஆனால் வேதம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிலப்பரப்பை விட நீர்தான் அதிகம் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறது. எதிர்காலத்தில் அறிவியல் அறிஞர்கள் விண்வெளியைபற்றி இன்னும் சரியான உண்மைகளை அறிந்துகொள்ளும்பொழுது இந்த கருத்து வேறுபாடு மறையலாம்.


அழிவை பற்றி அறிவியல் கருத்து

பிரபஞ்சம் எவ்வாறு அழியும் என்பதில் இன்னும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வரவில்லை. பிக் பேங்க் (Big Bang) பிரபஞ்சத்தின் தொடக்கத்தை விளக்கும் கோட்பாடாக பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தாலும் இந்த தொடர்ந்த விரிவாக்கம் எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஒரு சாரார் வேதம் கூறுவது போல விரிவடையும் பிரபஞ்சம் சுருங்கத்தொடங்கி கடைசியில் ஆரம்பத்திலிருந்த நிலையை அடையும் என்கிறார்கள். இந்த பிக் க்ரன்ச் (Big crunch) வாதம் தற்பொழுது மறுக்கப்பட்டு பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து அனைத்து வெப்ப சக்தியும் தீர்ந்து போய் பிக் ஃப்ரீஸ் (Big freeze)ல் முடியும் என்ற கருத்து பிரபலமாயுள்ளது.

இது போன்ற எந்த ஒரு துறையுலும் முடிவான உண்மையை அறிவியலால் அறியமுடியாது. ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் இனி மாறாத உண்மை இதுதான் என்ற முடிவுக்கு அறிவியல் அறிஞர்கள் என்றும் வரமாட்டார்கள். எனவே பிரபஞ்சத்தின் அடர்த்தி பற்றி இன்னும் அதிக தகவல்கள் சேகரித்த பின் வேதம் கூறும் கருத்தான பிக் க்ரன்ச் (Big crunch) தான் சரியான கோட்பாடு என்ற முடிவு பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களின் ஆதரவை பெறலாம்.

முடிவுரை :

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப்போல இறுதிகாலத்தில் ஒன்றினுள் ஒன்று மறையும். பஞ்சபூதங்களின் கலவையாக தோன்றிய அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகும். பின் நிலம் நீரில் மூழ்கும். நீர் நெருப்பில் அழியும். நெருப்பு காற்றில் கலக்கும். காற்று வெளியில் காணாமல் போகும். கடைசியில் வெளி பரமனிடம் அடங்கும்.

இது முடிவான முடிவல்ல. தோற்றம் மறைவு என்ற தொடர்ந்த சுழற்சியில் பிரளயம் ஒரு அங்கம்தான். ஊழிக்காலத்தில் மறையும் உலகம் மறுபடியும் தோன்றும். உயிரினங்கள் வாழத்தகுந்த உலகம் மறுபடியும் உருவாகும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. பிரளயத்தின் பொழுது பஞ்ச பூதங்கள் எந்த வரிசையில் ஒடுங்கும்?

சுயசிந்தனைக்காக :

1. பிரளயத்திற்கு பின் என்ன நடக்கும்?


Thursday, June 17, 2010

பாடம் 067: தோற்றுவிப்பவன் பரமனே (பிரம்ம சூத்திரம் 2.3.13)

பிரபஞ்சத்தின் தொடக்கத்தை பற்றி சொல்லபட்ட விதம் ஒரு வேளை பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடக் கூடாதென்று தோற்றுவிக்கும் சக்தியும் அறிவும் பரமனிடம் மட்டுமே இருக்கிறது என்று இந்த பாடம் விளக்கம் அளிக்கிறது.

பரமனிடமிருந்து முதலில் தோன்றியது வெளி. அடுத்த படியாக வெளியிலிருந்து காற்று தோன்றியது என்ற கருத்தை படிக்கும்பொழுது வெளி என்பதற்கு உருவாக்கும் சக்தியிருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அத்தகைய எண்ணம் தவறு. பரமனுக்கு மட்டுமே தோற்றுவிப்பது என்பது சாத்தியம். நீரிலிருந்து நிலத்தை உருவாக்கியது பரமனே தவிர நீர் தன் சுய அறிவாலோ முயற்சியாலோ நிலத்தை தோற்றுவிக்கவில்லை.

அறிவுள்ள உயிரினங்களின் செயல்பாட்டுக்கும் பரமனே காரணம்.

சார்ல்ஸ் டார்வினின் பரிமாண வளர்ச்சி தத்துவத்தின் படி உயிரினங்கள் மாறுவதோ மறைவதோ இயற்கையால் (principle of natural selection) தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி ஒரு வகை மான்கள் தொடர்ந்து கழுத்தை நீட்டி உயரமாக இருக்கும் மரங்களில் உள்ள இலைகளை உண்ண முயற்சித்ததால் அவற்றின் கழுத்து நீளமாகி அவை ஒட்டகசிவிங்கியாக உருமாறின. இதற்கு காரணம் அவற்றின் தனிபட்ட அறிவுபூர்வமான செயல்பாடு அல்ல. பரமனின் அறிவாற்றல் மட்டுமே இம்மாற்றத்திற்கு காரணம்.

பரிணாம வளர்ச்சி தத்துவம் உண்மையெனில் இன்றய உலகம் இத்தனை வேறுபட்ட உயிரின வகைகளோடு வளர்ச்சிபெற்று இருப்பதற்கு காரணம் எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் அறிவாற்றலோ செயல்பாட்டுத்திறனோ அல்ல. இதற்கு ஒரே காரணம் இயற்கை (principle of natural selection) என்பது சார்ல்ஸ் டார்வினின் முடிவு.

பரமனின் அறிவு மட்டுமே மனிதனை செயல்படுத்துகிறது.

உயிரற்ற ஜடப்பொருள்களான நீர், நிலம், காற்று போன்ற பஞ்சபூதங்கள் மட்டுமன்றி அவற்றின் வெவ்வேறு கலவைகளால் உருவாக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து ஆக்கல் அழித்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் பரமனின் அறிவு மட்டுமே காரணம். இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானோ கொத்தனார்களோ அல்ல. பரமனின் அறிவின் செயல்பாட்டால் மட்டுமே அது உருவாகியது. மக்களின் மனதை செயல்படுத்துவது பரமனின் அறிவே. அவனன்றி ஒரு அணுவும் அசையாது. நாம் அசைப்பதாக எண்ணிக்கொண்டிருப்பது அறிவீனம்.

யார் காரணம்?

விண்வெளி அறிஞர்கள் மற்ற கிரகங்களை ஆராய்ச்சிசெய்து அவற்றை கிரமமாக புகைபடம் எடுத்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நம் கண்ணில் தென்படும் உபகிரகம் ஒன்றில் சென்ற வருடம் எடுத்த புகைபடத்தில் இல்லாத புதிய ஒரு செவ்வக வடிவம் தற்பொழுது தென்பட்டால் அங்கே அறிவுஜீவிகள் யாராவது இருக்க வேண்டுமென்பதே அனைவரது முதல் எண்ணமாயிருக்கும். ஏனெனில் முறையான படைப்பு உருவாக அறிவாற்றல் அவசியமென்றும் ஜடப்பொருள்களால் தாமாக எதையும் கிரமமாக உருவாக்க முடியாதென்பதும் அனைவருக்கும் தெரியும்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் ஜடப்பொருள்கள். அவற்றால் எதையும் தாமாக உருவாக்க முடியாது. எனவே அனைத்து பூதங்களுக்குள்ளிருந்து செயல்படுவது அறிவுமயமான பரமனே.

உபகிரகங்கள் கிரமமாக கிரகங்களை சுற்றுவதற்கும் கிரகங்கள் பல சேர்ந்து ஒரு சூரியகுடும்பமாக செயல்படுவதற்கும் யார் காரணம்? இவை தானாக ஏற்பட்டது என்றால் ஏன் ஒரு அடையாளம் தெரியாத செவ்வகமோ உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலோ தானாக உருவாகியிருக்க கூடாது.

ஜடப்பொருள்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது சிறிது ஆராய்ச்சிக்கு பின் அறிந்து கொள்ள கூடிய ஒன்று. சிலந்தி வலையை உருவாக்குகிறதே என்றால் அது இயற்கையின் விளைவு. பரமனின் அறிவே சிலந்தியை செயல்படுத்தி வலையை தோற்றுவிக்கிறது.

மனிதனாலும் எதையும் உருவாக்கமுடியாது என்பதை சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவத்தையும் (theory of evolution) இயற்கையின் செயல்பாட்டு கோட்பாட்டையும் (principle of natural selection) முறையாக பயின்றால் தெரியவரும். விலங்குகள் தாங்கள் செய்யும் காரியங்களை 'நான் செய்தேன்' என்று நினைக்காததால் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. ஆனால் மனிதர்களோ தாங்கள் செய்யாத செயல்களை செய்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி குரங்கிலிருந்து மனிதன் தானாக தோன்றினானோ அது போல மனிதனின் வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் இன்றும் இருந்து வருகிறது.

நாளை உலகபோர் மூண்டு அணுகுண்டுகள் வெடித்துசிதறி உலகம் முழுவதும் அழிந்து போனாலும் அல்லது நாடுகளின் எல்லைகள் வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைப்போல் வாழத்தொடங்கினாலும் காரணம் பரமனின் லீலையே தவிர மனித முயற்சி அல்ல. ஏனெனில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சுயமாக தன் விரலை அசைப்பதற்குகூட அறிவோ சக்தியோ கிடையாது. ஆக்கல் அழித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே காரணம் பரமனே.

முடிவுரை :

தோற்றம் - வளர்ச்சி - மறைவு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல. நாம் பிறந்து வளர்ந்து மறைவது எப்படி ஒரே ஒரு தொடர் நிகழ்வாக அமைந்திருக்கிறதோ அதுபோலவே இந்த பிரபஞ்சம் மறையும் வரை தோற்றம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு அங்கமே.

முதலில் தோன்றிய பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றின. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றாக தோற்றுவித்தவன் பரமனே. பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

பஞ்சபூதங்களின் வெவ்வேறு கலவைகளாக இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சூரிய குடும்பங்களையும் அவற்றிலுள்ள ஜடப்பொருள்களையும் தோற்றுவித்தது பரமனே. ஜடப்பொருள்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

ஜடப்பொருள்களின் குறிப்பிட்ட மாறுபாடுகளுக்குபின் அவற்றிலிருந்து ஓரறிவுள்ள நீர் வாழ்வன, ஈரறிவுள்ள தாவரம், மூன்றிவுள்ள ஊர்வன/நீந்துவன, நான்கறிவுள்ள பறப்பன, ஐந்தறிவு உள்ள விலங்குகள் ஆகிய அனைத்து உயிரினங்களை உருவக்கியதும் பரமனே. உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருவாகும் அறிவு கிடையாது.

இந்த பரிணாம வளர்ச்சியில் கடைசியாக தோன்றியிருப்பவன் ஆறறிவுள்ள மனிதன். மனிதனின் வளர்ச்சிக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம். ஏனெனில் அறிவு என்பது பரமனின் இயல்பு. மனிதனிடமும் மற்ற உயிரினங்களிடமும் பரமனின் இயல்பான அறிவு பிரதிபலித்து அவர்கள் மூலம் பூமியில் மாறுதல்கள் ஏற்படுத்தபட்டு வருகின்றன.

எனவே பஞ்சபூதங்களை உருவாக்கி அவற்றிலிருந்து மனிதன் உள்ளிட்ட அனைத்தையும் படைத்து இப்பிரபஞ்சத்தின் இயல்பான மாற்றமாக நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம்.

பயிற்சிக்காக :

1. யார் யாரால் தங்கள் சுய அறிவாலும் முயற்சியாலும் செயல்பட முடியாது என்று இந்த பாடம் விவரிக்கிறது?

2. சார்ல்ஸ் டார்வினின் (Charles Darwin) பரிணாம வளர்ச்சி தத்துவம் எவ்வாறு வேதத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை நிரூபிக்கிறது?


சுயசிந்தனைக்காக :

1. நம் வாழ்வில் இதுவரை ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கு முழுமுதற்காரணம் யார் என்று ஆராய்க.

Wednesday, June 16, 2010

பாடம் 066: நிலம் நீரிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.12)

பிரபஞ்சத்தின் தோற்றத்தில் வெளி, காற்று, நெருப்பு, நீர் என்ற நான்கு பொருள்களுக்குபின் ஐந்தாவதாக தோன்றியது நிலம் என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நிலம் என்றால் என்ன?

நீர் என்பதற்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் கலவையால் உருவானது என்ற தெளிவான விளக்கம் கொடுக்கும் அறிவியல் அறிஞர்கள் நிலம் என்பதை ஒரு தனிபட்ட பொருளாக கருதுவதில்லை. எனவே அவர்கள் நிலம் என்றால் என்ன என்று ஆராயும் பணியை பொருளாதார துறை வல்லுனர்களின் கவனத்திற்கு ஒதுக்கியுள்ளார்கள்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய நான்கு மூலப்பொருள்களை விட மனிதனின் பருஉடலை உருவாக்குவதில் நிலம் பெரும்பங்கு வகிக்கிறது. மண்ணின் துணையினால் உண்டாகும் உணவுப்பொருள்கள் மனித உடலாக வளர்கிறது. முடிவில் உடல் மண்ணுடன் கலந்து மறுபடியும் மற்ற உயிரினங்களின் உடல்களை வளர்க்கும் உணவாக மாறுகிறது.

மனிதனின் வாழ்வில் நிலம் ஒரு பெரும் பகுதியை வகிக்கிறது. மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை என்ற தொடர் மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இதனாலேயே திரைக்கடலோடி திரவியம் தேடிய பின் பிறந்த மண்ணில் சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் நிம்மதியாக வாழ்ந்து மண் வாசனையை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது.

நிலம் எப்படி உருவானது?

வெளி என்ற பொருளில் அடர்த்தி அதிகமானவுடன் காற்றும், அதிலிருந்து வெப்பம் அதிகமானவுடன் நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து சுழற்சி மூலம் நிலமும் உருவானது என்ற விளக்கத்தை வேதம் தருகிறது.

இந்த ஐந்து மூலப்பொருள்களின் கலவையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் உருவானது என்றும் வேதம் கூறுகிறது.

நிலத்தின் தன்மைகள்

வேதம் நிலத்தின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. திடமானது நிலம்.

2. நீரிலிருந்து தோன்றியது நிலம்.

3. ஒலி, தொட்டுணர்வு, உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களுடன் மணம் 
என்ற ஐந்தாவது குணத்தையும் கொண்டது நிலம்.

4. நிலம் கருப்பு நிறம் கொண்டது.

5. நிலம் அனைத்தையும் தாங்கும் சக்தி படைத்தது.

6. நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த மூக்கையும் உணவை செரிக்கும் உருப்புகளையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நிலம்.

முடிவுரை :

நிலம் என்பது படைப்பில் ஐந்தாவதாக உருவான பொருள். படைக்கப்பட்டவை என்ற பட்டியலில் இடம் பெறுபவை வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து மூலப் பொருள்கள் மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் இவ்வைந்தின் கலவைகளே என்று வேதம் கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. நிலத்தின் தன்மைகள் யாவை?

2. மனிதனுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு யாது?

சுயசிந்தனைக்காக :

1. நிலம் மற்றும் மண் என்ற சொல்களுக்கு அறிவியல் ரீதியான பொருளை ஆராய்க.

2. அறிவியல் உலகம் கூறும் மூலப்பொருள்களான 94 வேதிப்பொருள்களுக்கும் (Periodic table) வேதம் கூறும் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களையும் ஒப்பிடுக.


Monday, June 14, 2010

பாடம் 065: நீர் நெருப்பிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.11)

பிரபஞ்சத்தின் தோற்றத்தில் வெளி, காற்று, நெருப்பு என்ற மூன்று பொருள்களுக்குபின் நான்காவதாக தோன்றியது நீர் என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நெருப்புக்கும் நீருக்கும் உள்ள நெருங்கிய உறவை சாந்தோக்கிய உபநிடதம் தெளிவாக விளக்குகிறது. சுற்றுப்புற சூழலிலோ உடலிலோ வெப்பம் அதிகமானால் உடனே வியர்வை ஏற்படுகிறது. மேலும் மனிதன் துயரத்தில் வேதனைப்படும்பொழுது மன அழுத்தம் (சூடு) அதிகமாகி அதன் விளைவாக அழுது கண்ணீர் உருவாகிறது. கோடை நாட்களில் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் மழை வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் நெருப்பிலிருந்து நீர் உண்டாகிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

நீர் எப்படி உருவானது?

உலகம் தோன்றுவதற்கு பல காலம் முன்பே நீர் தோன்றியது என்றும் நீரிலிருந்து தோன்றியதுதான் நிலம் என்றும் வேதம் கூறும் கருத்துக்கள் அறிவியல் அறிவுக்கு முற்றிலும் புறம்பாய் உள்ளன.

நீர் என்பது உயிரினங்களின் இருப்புக்கு மிக அவசியமான பொருள் என்பதாலும் பூமியைதவிர வேறு எந்த கிரகங்களிலும் நீர் கண்டுபிடிக்கப்படாததாலும் நீர் என்பது எப்படியோ பூமியில் மட்டும் உருவாகியுள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். பூமியில் முக்கால் பாகம் ஆக்ரமித்திருக்கும் கடல் எவ்வாறு உண்டானது என்ற கேள்விக்கு 'தெரியவில்லை' என்பது தான் அறிவியல் அறிஞர்களின் முடிவான பதில் என்பதை அவர்களின் முரண்பாடான ஆய்வு முடிவுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நெருப்பிலிருந்து நீர் உருவானது என்று தெளிவாக வேதம் கூறும் கருத்தை அறிவியல் அறிவு உறுதிபடுத்துகிறது. நெருப்பு என்பது ஆக்ஸிடேஷன் (Oxidation) எனப்படும் வேதியியல் மாற்றத்தின் வெளிப்பாடு என்பது அறிவியல் அறிவு. ஆக்ஸிடேஷன் என்றால் ஆக்ஸிஜன் அணுக்கள் மற்ற பெரிய அணுத்துகள்களை கரியமில (கார்பன்-டை-ஆக்ஸைட்) வாயுவாகவும் நீர் ஆவியாகவும் மாற்றுகிறது என்று பொருள். எனவே நெருப்பிலிருந்து தோன்றியதுதான் நீர் என்பது தெளிவாகிறது.

பிக் பேங்க் (Big Bang)ன் பொழுது ஏற்பட்ட அளவுக்கதிகமான வெப்பத்தில் உருவானதுதான் நீர். இந்த நீர் மற்ற அணுத்துகள்களுடன் சேர்ந்து தொடர்ந்து குளிர்ச்சியடைந்து அதிலிருந்து உருவானதுதான் நிலம். திரவமான தயிரை கடைவதால் அதிலிருந்து திடமான வெண்ணையும் தண்ணீரும் உருவாவது போல்தான் தொடர்ந்த சுழற்சியினால் திரவமான விண்வெளிக்குழம்பிலிருந்து (cosmic soup) திடமான நிலமும் கடலும் உண்டாயின.

நீரின் தன்மைகள்

வேதம் நீரின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. குளிர்சி நீரின் இயல்பு.

2. நெருப்பிலிருந்து தோன்றியது நீர்.

3. ஒலி, தொட்டுணர்வு, உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களை கொண்டது நீர்.

4. நீரின் துணையில்லாமல் நம்மால் சுவையை அறியவே முடியாது.

5. நீரின் வடிவம் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தை பொறுத்தது.

6. மெதுவாகவும் வேகமாகவும் நகரக்கூடியது நீர்.

7. அரிக்கும் தன்மையுள்ளது நீர்.

8. கல்லையும் கரைக்கும் சக்தி வாய்ந்தது நீர்.

9. நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த சுவைக்கும் நாக்கையும் பிறப்பு உருப்புகளையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நீர்.

முடிவுரை :

நீர் என்பது படைப்பில் நான்காவதாக உருவான பொருள். நெருப்பிலிருந்து தோன்றிய நீர் பின் நிலத்தை தோற்றுவித்தது. இதுவே வேதம் கூறும் கருத்து.

பயிற்சிக்காக :

1. நீரின் தன்மைகள் யாவை?

2. நீரை பற்றி அறிவியல் ஆய்வுக்கும் வேதத்தின் கூற்றுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. கடல் உருவானது எப்படி என்று இப்பாடத்தில் கூறிய கருத்தை இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் கருத்துக்களுடன் ஒப்பிடுக.

Tuesday, June 8, 2010

பாடம் 064: நெருப்பு காற்றிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.10)

பரமன் அனைத்துக்கும் காரணம் என்றாலும் படைப்பின் நியமத்தின் படி முதலில் தோன்றிய வெளியிலிருந்து உருவான காற்றுதான் நெருப்பை உண்டாக்கியது என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நெருப்பு என்றால் என்ன?

நெருப்பு என்பது ஒரு பொருள் அல்ல என்பதில் அறிவியல் உலகம் மிகத்தெளிவாக இருக்கிறது. நெருப்பு என்பது மற்ற பொருள்களின் வேதியியல் மாற்றத்தின் வெளிப்பாடு என்பது அவர்கள் கருத்து.

நெருப்பு என்பதை ஒரு பொருளாகவே ஏற்றுக்கொள்ளாததால் நெருப்பை தோற்றுவிக்கும் பொருள்களின் தன்மைகளைத்தான் ஆய்வுக்கருவாக அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர நெருப்பின் தனித்தன்மை என்ன என்பதை அவர்கள் தொடக்கப்பள்ளி பாட அளவிற்குமேல் அறிந்து கொள்ள முயலுவதில்லை. எரியக்கூடிய பொருள்களை ஆக்ஸிஜனின் முன்னிலையில் வெப்பபடுத்தினால் அவற்றில் உள்ள கார்பன் அணுக்கள் ஒளிச்சக்தியாகவும் வெப்பசக்தியாகவும் மாறுவதை நாம் நெருப்பு என்கிறோம் என்ற அளவில் நெருப்பை பற்றிய ஆராய்ச்சியை அவர்கள் நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நெருப்பு என்பது ஒரு பொருள் மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் உருவாக்க தேவையான ஐந்து மூலப்பொருள்களில் அதுவும் ஒன்று என்பது வேதத்தின் தெளிவான கருத்து.

பிக் பேங்க் (Big Bang)ன் துவக்கத்தில் முதலில் தோன்றியது வெளி. வெளியில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து காற்றாக மாறி அதன் பின் அளவிடமுடியாத அழுத்தம் காரணமாக மிகுந்த வெப்பம் ஏற்பட்டது என்ற அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு காற்றிலிருந்து உருவானது என்ற வேதத்தின் கருத்தை நிரூபிக்கிறது.

நெருப்பின் தன்மைகள்

வேதம் நெருப்பின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. எது சுடுமோ அது நெருப்பு.

2. காற்றிலிருந்து தோன்றியது நெருப்பு.

3. ஒலி, தொட்டுணர்வு, ஒளி ஆகிய மூன்று குணங்களை கொண்டது நெருப்பு.

4. முதன் முதலில் தோன்றிய வடிவம் நெருப்பு.

5. நெருப்பு பரவும்.

6. நெருப்பின் ஒளி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருள்கள் மீது பட்டு அவற்றிலிருந்து பிரதிபலிப்பதால் மட்டுமே நம்மால் கண்களை உபயோகிக்க முடிகிறது.

7. மேலும் நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த கண்களையும் கால்களையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நெருப்புதான்.

8. வேதத்தின் கர்மகாண்டத்தில் நெருப்பு என்பது மானிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே உள்ள பாலமாக கருதப்படுகிறது. யாகத்தில் வளர்க்கப்படும் நெருப்பில் நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் அனைத்தும் நாம் எந்த தெய்வத்தை குறித்து வழிபடுகிறோமோ அந்த தெய்வத்திற்கு நேராக சென்றுவிடுகின்றன.

9. நாம் உண்ட உணவை செரிப்பதற்கு நம் வயிற்றிலிருக்கும் நெருப்புதான் காரணம்.


முடிவுரை :

பசுவிலிருந்து பால் கிடைக்கிறது. தயிர், வெண்ணை, நெய் போன்றவையும் பசுவினிடமிருந்துதான் கிடைக்கின்றன. ஆனால் நாம் வழக்கில் பால் மட்டுமே பசுவிடமிருந்து கிடைப்பதுபோலவும், தயிர் பாலினில் இருந்து வந்தது என்றும், பின் தயிரிலிருந்து வெண்ணை, வெண்ணையிலிருந்து நெய் என்று இப்பொருள்களின் தோற்றத்தை பற்றி ஒரு கிரமத்துடன் பேசுகிறோம். அது போல் இப்பிரபஞ்சம் முழுவதற்கும் பரமன்தான் ஆதாரம் என்றாலும் முதலில் தோன்றியது வெளி, அதிலிருந்து தோன்றியது காற்று, காற்றிலிருந்து நெருப்பு என்று வேதம் விளக்குகிறது.

நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் பின் இந்த பஞ்சபூதங்களின் வெவ்வேறு வித சேர்க்கையினால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாக்கப்பட்டன என்ற கருத்து பின் வரும் பாடங்களில் தெளிவுபடுத்தபடுகிறது.

பயிற்சிக்காக :

1. நெருப்பின் தன்மைகள் யாவை?

2. நெருப்பை பற்றி அறிவியல் ஆய்வுக்கும் வேதத்தின் கூற்றுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

சுயசிந்தனைக்காக :

1. சூரியனில் நெருப்பைத்தவிர வேறு ஏதாவது இருக்கிறதா?